மயிலாடுதுறை அருகே சேதமடைந்த பள்ளி கட்டிடத்தை உடனடியாக சரி செய்ய வலியுறுத்தி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் பட்டவர்த்தி அருகே உள்ள தலைஞாயிறு ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகின்றது. இப்பள்ளியில் உள்ள வகுப்பறைகளில் மேற்கூரைகள் முழுவதுமாக சேதமடைந்து காணப்படுகின்றது.
இந்த நிலையில் அண்மையில் மேற்கூரையில் இருந்து காரைகள் பெயர்ந்து வகுப்பறையில் விழுந்துள்ளது. இதனால் பள்ளிக்கு மாணவர்களை அனுப்ப அச்சமடைந்த பெற்றோர்கள் இது தொடர்பாக அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர்.
தொடர்ந்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பள்ளியின் வாயிலில் அமர்ந்து கட்டிடத்தை சீரமைக்க வலியுறுத்தி மாணவர்கள் கோஷங்களை எழுப்பினர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த மணல்மேடு போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு பள்ளிக் கட்டிடம் சீர் அமைத்து தரப்படும் என உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தை பொது மக்கள் தற்காலிகமாக கைவிட்டனர். இந்த சாலை மறியல் காரணமாக மணல்மேடு - சீர்காழி சாலையில் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.