மயிலாடுதுறை அருகே அகரகீரங்குடி ஊராட்சியில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து பல லட்சங்கள் மோசடி செய்த வி.ஏ.ஓ சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தாலுக்கா அகரகீரங்குடி ஊராட்சியில் உள்ளது முட்டம் கிராமம். இக்கிராமத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டு சுமார் 450 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்திருந்தனர். அந்த பயிர்களுக்கு, சிட்டா, அடங்கலுடன் கிராம நிர்வாக அலுவலர் திருமலைசங்கு என்பவரிடம் சமர்ப்பித்து பயிர்க்காப்பீட்டினையும் செய்திருந்தனர்.
அந்த பருவத்தில் பெய்த கனமழையின் காரணமாக சம்பா பயிர்களுக்கான இழப்பீட்டுத் தொகையாக ஏக்கருக்கு 68 சதவீதத் தொகையாக ரூ.22,000-த்தை காப்பீட்டு நிறுவனம் அறிவித்தது. இந்த காப்பீட்டுத் தொகையானது 4-இல் ஒருபங்கு விவசாயிகளுக்கு வந்து சேரவில்லை. இதையடுத்து, இழப்பீட்டுத் தொகை கிடைக்காத விவசாயிகள் வேளாண்துறை அதிகாரிகளை அணுகியுள்ளனர்.
Also Read: இனி 1ரூபாய்க்கு தீப்பெட்டி கிடைக்காது.. தமிழகத்தில் இன்று முதல் தீப்பெட்டி விலை உயர்வு
அவர்களிடம் உழவன் செயலியை பயன்படுத்தி காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளதா என்பதை தெரிந்து கொள்ளலாம் என அதிகாரிகள் விளக்கியுள்ளனர். இதையடுத்து, உழவன் செயலியில் பார்த்த விவசாயிகளுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. அதில், அதே எண்ணில் வேறொரு நபருக்கு தொகை செலுத்தப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த நபர்கள் யார் எனப்பார்த்ததில், அவர்கள் அனைவருமே கிராம நிர்வாக அலுவலர் திருமலைசங்குவின் மனைவி, மகள் மற்றும் உறவினர்கள் என்பது தெரியவந்தது.
மேலும் அதிர்ச்சியாக சிலரது புல எண்ணுக்கான காப்பீட்டுத் தொகை கிராம நிர்வாக அலுவலர் திருமலைசங்குவின் பெயருக்கே வரவு வைக்கப்பட்டிருந்தது. மேலும், விவசாயிகளின் நிலத்தின் பேரில் வங்கியில் பயிர்க்கடன் பெற்று அதற்கு விவசாய தள்ளுபடியையும் பெற்றுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். இதையடுத்து, அவரிடம் நேரில் சென்று விவசாயிகள் கேட்டபோது அவர் அலட்சியமாக பதிலளித்ததாக கூறப்படுகிறது.
Also Read: 6 பெண்களை ஏமாற்றி திருமணம்.. பணம், நகை சுருட்டிய கில்லாடி கும்பல் சிக்கியது
இதையடுத்து, பாதிக்கப்பட்ட விவசாயிகள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அப்புகாரில் கிராம நிர்வாக அலுவலர் திருமலைசங்கு போலியான சிட்டா, அடங்கல் வழங்கி மறையூர் கூட்டுறவு வங்கியில் கடன் பெற்றும், அதன்பேரில் பயிர்க்காப்பீடு பெற்றும் ஊழல் செய்துள்ளதாகவும், அவர் மீது விசாரணை செய்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.
காப்பீடு மூலம் மட்டுமே சுமார் 100 ஏக்கர் பயிருக்கு ரூ.22 லட்சம் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகவும், வங்கிக் கடன் பெற்ற வகையில் பல லட்சம் முறைகேடு செய்துள்ளதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் கிராம நிர்வாக அலுவலர் திருமலைசங்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது துறை ரீதியான மேல்நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கோட்டாட்சியர் ஜெ.பாலாஜி தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்: கிருஷ்ணகுமார் (மயிலாடுதுறை)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cheating, Insurance, Mayiladuthurai, Tamil News