முகப்பு /செய்தி /தமிழ்நாடு / 4 அடி உயரத்துக்கு வரப்பை உயர்த்தி ஒரு சொட்டு மழைநீர் கூட வெளியேறாமல் பாதுகாத்த இயற்கை விவசாயி

4 அடி உயரத்துக்கு வரப்பை உயர்த்தி ஒரு சொட்டு மழைநீர் கூட வெளியேறாமல் பாதுகாத்த இயற்கை விவசாயி

இயற்கை விவசாயி

இயற்கை விவசாயி

விவசாயிகள் மழை நீரை  வெளியேற்றாமல் தங்கள் வயல்களிலேயே தேக்கி பாதுகாக்க வேண்டும் என விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கிறார் இயற்கை விவசாயி ஞானப்பிரகாசம்.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :

பருவமழையால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழைவெள்ளத்தில் மூழ்கியுள்ள நெற்பயிர்களை காப்பாற்றுவதற்காக, வயல்களில் தேங்கியுள்ள நீரை வெளியேற்ற விவசாயிகள் போராடிவரும் நிலையில், தனது வயலில் 4 அடி உயரத்துக்கு வரப்பை உயர்த்தி ஒரு சொட்டு மழைநீர் கூட வெளியேறாமல் பாதுகாத்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார் மயிலாடுதுறை இயற்கை விவசாயி.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா நரசிங்கநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் இயற்கை விவசாயி ஞானப்பிரகாசம். கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக இயற்கை முறையில் விவசாயம் செய்துவரும் இவர், தான் உணர்ந்த இயற்கை விவசாயத்தின் மகத்துவத்தை இளைய தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்கும் முயற்சியாக தமிழ்நாடு மாணவ, இளைஞர்கள் கூட்டமைப்பு என்ற அமைப்பினை உருவாக்கி “டெலகிராம் ஆப்” மூலம் தமிழகம் முழுவதும் 2000 இளைஞர்களை ஒன்றிணைத்து பயிற்சிப் பட்டறையை உருவாக்கியுள்ளார்.

இவர், ஒவ்வொரு இளைஞர்களின் வயல்களிலும் மாதிரிப் பண்ணையை உருவாக்கி, அவர்களுக்கு இயற்கை விவசாயத்தை கற்றுத்தந்து ஊக்குவித்து வருகிறார். இவரது பயிற்சிப் பட்டறையில் உருவான இளைஞர்களில் ஒருவர்தான் மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பாலமுருகன்.

விவசாயி பாலமுருகன் தனக்கு சொந்தமான 3 ஏக்கர் விவசாய நிலத்தில், தனது ஆசான் ஞானப்பிரகாசத்தின் ஆலோசனைப்படி மாப்பிள்ளை சம்பா, சீரக சம்பா, கருப்புக்கவுனி ஆகிய பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட்டுள்ளார். இதற்காக தனது வயலை ஆழப்படுத்தி, அந்த மண்ணைக்கொண்டு வயலின் வரப்புகளை 4 அடி உயரத்துக்கு உயர்த்தி அமைத்துள்ளார்.

இதன்மூலம் கடந்த 2 ஆண்டுகளாக பெய்த மழைநீரில் ஒரு சொட்டுக்கூட வெளியில் விடாமல் தனது நிலத்தில் சேமித்து வைத்துள்ளார். இவரது வயலில் பயிரிட்டுள்ளது பாரம்பரிய ரக நெல் என்பதால், அந்த நெல் ரகங்கள் மழைநீரில் சாய்ந்துவிடாமல், சுமார் 8 அடி உயரத்துக்கு தழைத்தோங்கி வளர்ந்து நிற்கிறது.

பாரம்பரிய ரகங்களை நடவு செய்துள்ளதால் விவசாயி பாலமுருகனுக்கு களை எடுத்தல், உரமிடுதல், பூச்சு மருந்து தெளித்தல் போன்ற எந்த செலவும் இல்லை. இதனால் தனது வயலில் நடவு செய்த பின்னர் பாலமுருகன் பயிர்கள் குறித்து எந்த பயமுமின்றி மற்ற வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

கடந்த ஆண்டு இவர் தனது நிலத்தில் மாப்பிள்ளை சம்பா ரக நெல்லை பயிரிட்டு ஏக்கருக்கு 20 மூட்டை நெல்லினை அறுவடை செய்துள்ளார். பின்னர் சோதனை முயற்சியாக அதில் ஒரு ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிரை அழிக்காமல் அப்படியே வைத்துள்ளார். அந்த பயிர்கள் இரண்டாம் ஆண்டாக நிகழாண்டும் சுமார் 8 அடி உயரம் வரை துளிர்த்து செழித்து வளர்ந்து பசுமையாக காட்சியளிக்கிறது.

இரண்டாவது ஆண்டு என்பதால் பாலமுருகனுக்கு இந்த ஆண்டு உழவடித்தல், நாற்று நடும் செலவு கூட இல்லை (20 மூட்டை நெல்லில் 800 கிலோ அரிசி கிடைக்கிறது. 1 கிலோ அரிசியை ரூ.85 முதல் ரூ.90 வரை விற்பனை செய்கிறார். ஒரு ஏக்கருக்கு ரூ.72000 வரை விற்பனை செய்கிறார்) இவர் உற்பத்தி செய்யும் பாரம்பரிய அரிசிக்கு டிமாண்ட் அதிகம்.  அறுவடை செய்யும் முன்னரே முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய முடியாத அளவுக்கு இந்த பாரம்பரிய ரகங்களுக்கு தேவை அதிக அளவில் உள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு மாணவ, இளைஞர்கள் கூட்டமைப்பின் நிறுவனர் ஞானப்பிரகாசம் கூறுகையில், நமது முன்னோர்கள் வேளாண்மையை வயிற்றுக்கு உணவாக மட்டுமின்றி, உடலுக்கு மருந்தாகவும் பயன்படுத்தியுள்ளனர். நவீன ரக நெல்லை பயிரிடும் விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்றுவதால்தான் தாழ்வான பகுதிகளில் பயிரிட்டுள்ள மற்ற விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.

நேரடியாக பெய்யும் மழைநீரில் பயிர்கள் சாயாது. ஓடும் தண்ணீரில் தான் அவை சாய்ந்து விடுகின்றன. எனவே, விவசாயிகள் மழை நீரை  வெளியேற்றாமல் தங்கள் வயல்களிலேயே தேக்கி பாதுகாக்க வேண்டும். ஒவ்வொரு விவசாயியும் சோதனை முயற்சியாகவது தங்களின் வயல்களில் ஒரு சிறு பகுதியிலாவது பாரம்பரிய ரகங்களை நட்டு வைக்க வேண்டும். அனைத்து விவசாயிகளும் உற்பத்தி செய்யும் போது பாரம்பரிய அரிசி நடுத்தர மக்களும் வாங்கிப் பயன்படுத்தும் அளவுக்கு விலை குறைய வாய்ப்புள்ளது.

Must Read : திருநெல்வேலி அதிசய கிணறு நிரம்பியதா... உண்மை என்ன?

தண்ணீரை வரப்புகளில் தேக்கி வைப்பதால், தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் என்ற நிலையே ஏற்படாது. ’வரப்பு உயர நீர் உயரும், நீர் உயர நிலம் உயரும், நிலம் உயர நெல் உயரும், நெல் உயர குடி உயரும், குடி உயர கோல் உயரும், கோல் உயர கோன் உயர்வான்’ எனவே, விவசாயிகள் தங்கள் வயல்களில் வரப்புகளை உயர்த்தி, பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிடுங்கள் என்று நவீன ரக நெல்லை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு அவர் அழைப்பு விடுக்கிறார்.

செய்தியாளர் - கிருஷ்ணகுமார், மயிலாடுதுறை.

First published:

Tags: Farmer, Rain water