• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தொடர் கனமழையால் மயிலாடுதுறையில் 500 ஏக்கர் சம்பா பயிர் பாதிப்பு

தொடர் கனமழையால் மயிலாடுதுறையில் 500 ஏக்கர் சம்பா பயிர் பாதிப்பு

சம்பா பயிர் நீரில் மூழ்கியது

சம்பா பயிர் நீரில் மூழ்கியது

வாய்க்கால்களை தூர்வாராத காரணத்தால் வெள்ள நீர் வடியாமல் சுமார் 500 ஏக்கரில் சம்பா இளம் நாற்றுகள் முற்றிலும் அழிந்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

  • Share this:
    தமிழகத்தில் பெய்துவரும் கன மழையால் மயிலாடுதுறை மாவட்டம் கொழையூர் கிராமத்தில் 500 ஏக்கர் சம்பா பயிர் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளது.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வயல்களில் தண்ணீர் அதிக அளவு சேர்ந்துள்ளது. குத்தாலம் தாலுக்காவிற்கு உட்பட்ட கொழையூர் கிராமத்தில் பல்லவன் வாய்க்கால், அண்ணாமலை வாய்க்கால் ஆகியவை சரிவர தூர்வாரப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இதன் காரணமாக கொழையூர், பூவாலை, செங்குடி ஆகிய கிராமங்களில் வெள்ளநீர் வடிவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இப்பகுதிகளில் மழைநீர் பல்லவன் வாய்க்கால் மற்றும் அண்ணாமலை வாய்க்கால் ஆகியவற்றின் வழியே வடிந்து வீரசோழன் ஆற்றில் சென்று கலக்கும்.

    வாய்க்கால்களை தூர்வாராத காரணத்தால் வெள்ள நீர் வடியாமல் சுமார் 500 ஏக்கரில் சம்பா இளம் நாற்றுகள் முற்றிலும் அழிந்துவிட்டன. இதனால் ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.

    வெள்ள நீர் வடிவதற்கு வசதியாக விரைவாக வாய்க்கால்களை தூர்வார வேண்டும், மீண்டும் சம்பா சாகுபடி செய்வதற்கு அரசாங்கம் வேளாண் துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்நிலையில், புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், அரியலூரில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    Must Read : தமிழகத்தின் 9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம்

    பெரம்பலூர், கடலூர், சேலம், திருவள்ளூர் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

    செய்தியாளர் - கிருஷ்ணகுமார், மயிலாடுதுறை

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: