ஆங்கிலவழிக்கல்வி மோகத்தின் காரணமாக பெரும்பாலான பெற்றோர் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முனைப்பு காட்டிவரும் தமிழக அரசு, பள்ளிகளின் பராமரிப்பில் கவனம் செலுத்தாவிட்டால் எஞ்சியுள்ள அரசுப்பள்ளிகளின் நிலை கேள்விக்குறியாக மாறும் அபாயம் உள்ளது.
மயிலாடுதுறை தாலுகா தலைஞாயிறு ஊராட்சி மண்ணிப்பள்ளம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. 60 ஆண்டுகளுக்கு முன்னர் கூறைக்கொட்டகையில் துவங்கிய இப்பள்ளி 1976-ஆம் ஆண்டுமுதல் சிமெண்ட் கட்டடத்துக்கு மாற்றப்பட்டது. தலைஞாயிறு ஊராட்சியில் உள்ள ஒரே யூனியன் பள்ளியான இங்கு, சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மண்ணிப்பள்ளம், புதுத்தெரு மற்றும் சேத்தூர் ஆகிய 3 கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வந்துள்ளனர்.
50 ஆண்டுகளைக் கடந்த கட்டடம் என்பதால் அவ்வப்போது மேற்கூரையின் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்து ஆசிரியர்களையும், மாணவர்களையும் அச்சுறுத்தியுள்ளது. இதன்காரணமாக மாணவர்களுக்கு பாதிப்பு நேரிடும் முன்னதாக பள்ளிக்கு புதிய கட்டடம் அமைத்துத் தரவேண்டும் என கிராமமக்கள் அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்தும், சாலை மறியல் போராட்டம் நடத்தியும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதன்காரணமாக சில ஆண்டுகளுக்கு முன்புவரை 130 மாணவர்களுக்கு மேல் படித்த இப்பள்ளியில் இந்த ஆண்டு வெறும் 38 மாணவர்கள் மட்டுமே படிப்பைத் தொடர்கின்றனர்.
பிற மாணவர்களின் பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் மாற்று சான்றிதழ் வாங்கி மற்ற பள்ளிகளில் சேர்த்துவிட்டனர். பாதுகாப்பற்ற முறையில் பள்ளி கட்டடம் உள்ளதை உணர்ந்து, எஞ்சிய மாணவர்களையாவது தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியாக இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 2 ஆசிரியர்கள் தங்கள் சொந்த செலவில் ரூ.80000 மதிப்பீட்டில் பள்ளி வளாகத்திலேயே தகர ஷீட் அமைத்து மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகின்றனர்.
அங்கு 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவ, மாணவிகளும் ஒரே இடத்தில் அமர்ந்து பாடம் படித்து வருகின்றனர். அருகில் அரசு பள்ளிகள் எதுவும் இல்லாத நிலையில் பாடம் படிப்பதற்கு வைத்தீஸ்வரன்கோயில் அல்லது மணல்மேடு செல்ல வேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இங்கு பாடம் பயின்று வரும் குழந்தைகளின் பெற்றோர்கள் பெரும்பாலோனோர் கூலித்தொழிலாளர்களாக உள்ளதால் வசதியின்மை காரணமாக தொலைதூரத்திற்கு தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பமுடியவில்லை. தற்காலிக தகரக் கொட்டகையில் பள்ளி நடந்து வந்தாலும், மழைக்காலம் துவங்கிவிட்டால் விஷப்பூச்சிகள் உள்ளே நுழையும் அபாயம் உள்ளதாக அச்சம் தெரிவிக்கும் பெற்றோர் மற்றும் கிராமமக்கள் உடனடியாக புதிய கட்டடம் கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெண்களுக்கு ரூ.14,000 சம்பளத்தில் சமூப்பணியாளர் பணி- விண்ணப்பிக்க விவரங்களைத் தெரிந்துகொள்க
அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க நினைக்கும் தமிழக அரசு, பள்ளிகளின் பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்தினால் மட்டுமே அது நிறைவேறும் என்பது நிதர்சனமான உண்மை.
செய்தியாளர் : கிருஷ்ணகுமார், மயிலாடு துறை
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.