நாளை முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்படுவார் என தகவல்

நாளை முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்படுவார் என தகவல்

ஓ பன்னீர் செல்வம் | எடப்பாடி பழனிசாமி (கோப்புப்படம்)

அ.தி.மு.கவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி நாளை அறிவிக்கப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

 • Share this:
  சென்னையில் கடந்த 28-ம் தேதி கூடிய அதிமுக செயற்குழுக் கூட்டத்தில், அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதுகுறித்த முடிவு எட்டப்படாமலேயே கூட்டம் முடிந்து போனது. அதோடு, முதலமைச்சர் வேட்பாளர் யாரென வரும் புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்தார். அதன்பிறகு கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரை, அவரவர் ஆதரவாளர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து சொந்த மாவட்டமான தேனிக்குச் சென்ற ஓ.பன்னீர்செல்வம், அங்கு தமது பண்ணை வீட்டில் அதிமுக-வின் கொங்கு மண்டல நிர்வாகிகளை சந்தித்துப் பேசினார். இத்தகைய பரப்பான சூழ்நிலையில், ஓ.பன்னீர் செல்வம் இன்று சென்னை திரும்பினார்.

  நாளை முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படுமா என்ற கேள்வி எல்லாரிடமும் எழுந்துவந்தது. இந்தநிலையில், நாளை முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்படுவார் என்று அ.தி.மு.க தரப்பின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மேலும், 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு உள்ளிட்ட தேர்தல் தொடர்பான மூன்று குழுக்களை அமைப்பது தொடர்பான அறிவிப்பு வரும் என்று தெரிகிறது. நாளை, அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று முதல்வர் வேட்பாளர் அறிவிப்பும், குழுக்கள் தொடர்பான அறிவிப்பும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


  கட்சித் தலைமைப் பொறுப்பில் வேறெந்த மாற்றங்களும் இருக்காது. தற்போது போலவே ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வமும், துணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தொடர்வார்கள். கட்சி தொடர்ந்து இரட்டைத் தலைமையின் கீழ் இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
  Published by:Karthick S
  First published: