May Day : முதலமைச்சர், தலைவர்கள் மே தின வாழ்த்து

உழைப்பாளர் சிலை

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாமக நிறுவனர் ராமதாஸ், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலர் மே தின வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

  • Share this:
    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள மே தின வாழ்த்து செய்தியில், “உழைக்கும் மக்களின் சிறப்பினை உலகிற்கு பறைசாற்றும் உன்னத தினமான மே தின நன்னாளில், உலகெங்கிலும் வாழும் தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த மே தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    உடல் உழைப்பை மூலதனமாக கொண்டு, உலகை வாழ வைக்கும் உழைப்பாளிகள், தங்கள் உரிமைகளை வென்றெடுத்த திருநாளாகவும், உழைப்பின் மேன்மையை உலகிற்கு உணர்த்தும் நன்னாளாகவும் மே தினம் கொண்டாடப்படுகிறது. தேசத்தின் வளர்ச்சிக்காக அயராது உழைக்கும் தொழிலாளர் பெருமக்கள் அனைவரும், எல்லா நலன்களையும், வளங்களையும் பெற்று மகிழ்வுடன் வாழ்ந்திட வேண்டும் என்று வாழ்த்தி, எனது அருமை தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த மே தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக்கொள்கிறேன்.” என்று கூறியுள்ளார்.

    பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெயியிட்டுள்ள மே தின வாழ்த்து செய்தியில், “உலகத் தொழிலாளர்கள் உரிமைகளை வென்றெடுத்ததன் அடையாளமாக பிரகடனப்படுத்தப்பட்ட மே நாளை கொண்டாடும் தொழிலாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

    பாட்டாளிகள் இல்லாவிட்டால் இந்த உலகம் இயங்காது. அதை மதித்து பாட்டாளிகளுக்கு நியாயமாக வழங்கப்பட வேண்டிய உரிமைகளும், அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டும். அவை அனைத்தையும் வென்றெடுக்கும் லட்சிய பயணத்தின் தொடக்கமாக நடப்பாண்டின் பாட்டாளிகள் நாள் அமையட்டும் என்று மீண்டும் ஒருமுறை உளமாற வாழ்த்துகிறேன்.” என்று கூறியுள்ளார்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், “அடுக்கடுக்கான அரசியல் கடமைகள் அடுத்தடுத்து வருகின்றன. அவற்றை நிறைவேற்றி, வகுப்புவாத, நிதி மூலதன சக்திகளை அதிகாரத்தில் இருந்து வெளியேற்ற மேதின நாளில் உறுதி ஏற்போம்” என்று கூறியுள்ளார்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “கொரோனாவில் இருந்து மக்களை காப்போம். சாதி, மதவெறி சக்திகளை முறியடிப்போம். உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காகவும், நல்வாழ்வுக்கான திட்டங்களுக்காகவும் போராடுவோம்.” என்று கூறியுள்ளார்.

    Must Read : திமுக என்றைக்கும் தொழிலாளர்களின் உற்ற தோழன் : மு.க.ஸ்டாலின் மே தின வாழ்த்து

     

    இதேபோல் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட பலர் மே தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
    Published by:Suresh V
    First published: