முகக்கவசம் அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பு, அனைவருக்குமானதா? சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இல்லையா என்று பேரவையில் எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பினார்.
கொரோனா தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதையடுத்து பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. பொது இடத்தில் முகக் கவசம் அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பின்னர் தமிழக சட்டப்பேரவை இன்று கூடியது. எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, முகக்கவசம் அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பு, அனைவருக்குமானதா? சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இல்லையா? சட்டப்பேரவையில் பெரும்பாலான உறுப்பினர்கள் முகக்கவசம் அணியவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கு பதில் அளித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், முகக்கவசம் அணிந்துகொள்வது அனைவருக்கும் நல்லது என்று தெரிவித்தார். அப்போது, அனைத்து எம்.எல்.ஏ.க்களின் மேசையிலும் முகக்கவசம் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த சபாநாயகர் அப்பாவு, அதனை அணிந்து கொண்டு பேசுவது சிரமம் என்பதால் கழற்றி வைத்துள்ளதாக விளக்கம் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: உட்காருடா.. சட்டப்பேரவையில் ஒருமையில் பேசிய அமைச்சர் பெரியகருப்பன்: அதிமுக வெளிநடப்பு குறித்து ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முகக்கவசம் அணிந்திருந்து சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்றார். உரையாற்றும்போது மட்டும் முகக்கவசத்தை கழற்றிவைத்துவிட்டு அவர் பேசினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.