மெரினாவில் கருணாநிதிக்கு பேனா நினைவுச்சின்னம் அமைக்க மத்திய அரசிடம் இருந்து எந்த அனுமதியும் பெறவில்லை என தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.
முன்னாள் முதல்வரும் மறைந்த தி.மு.க. தலைவருமான கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க நடுக்கடலிலும் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்துக்கு பிரமாண்ட 'பேனா' நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டது.
இந்த பிரமாண்ட நினைவு சின்னத்துக்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவு சின்னம் என்று பெயரிடப்பட்டு உள்ளது. இந்த நினைவு சின்னம் அமைக்க மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அனுமதி பெற விண்ணப்பிக்கப்பட்டது. இதில் மத்திய அரசின் முதற்கட்ட அனுமதி கிடைத்ததை தொடர்ந்து அடுத்த கட்டமாக பொதுமக்களின் கருத்தை கேட்க அரசு முடிவு செய்தது.
இந்த நிலையில், பேனா நினைவு சின்னம் குறித்து கருத்து கேட்பு கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேனா சின்னம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்ததுடன் சின்னம் அமைந்தால் அதனை உடைப்பேன் என பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் பாதுகாக்கப்பட்ட கடலோர பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள மெரினா கடற்பகுதியில், பேனா நினைவு சின்னம் அமைக்க தடை கோரி ராம்குமார் ஆதித்தன் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனு நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்திய நாராயாணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்திய கோபால் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பேனா நினைவுச் சின்னத்திற்கு திட்ட ஆவணப்பணி மட்டுமே நடைபெற்று வருவதாகவும்,விரிவான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு நடத்தப்பட்ட பின்னரே மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு அனுப்பப்படும் என்றும் விளக்கம் அளித்தார்.
இதுவரை எந்த அனுமதியும் பெறாததால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும் வாதிட்டார். இதனைத் தொடர்ந்து, இவ்வழக்கில், மத்திய, மாநில சுற்றுச்சூழல் துறை, மீன்வளத்துறை உள்ளிட்ட அரசுத்துறைகளும் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கி, மார்ச் 2-ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Marina Beach