ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

“யாருமே பேசல.. வேதனையா இருக்கு” புதுக்கோட்டை விவகாரம் குறித்து திருமாவளவன் வருத்தம்!

“யாருமே பேசல.. வேதனையா இருக்கு” புதுக்கோட்டை விவகாரம் குறித்து திருமாவளவன் வருத்தம்!

திருமாவளவன்

திருமாவளவன்

கோயிலுக்குள் பட்டியலின மக்களை ஆட்சியரும் மாவட்ட எஸ்பியும் அழைத்து சென்றது ஆறுதலை பெருமையும் தருகிறது - திருமாவளவன்

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India

இறையூர் வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக பெரும்பாலான அரசியல் கட்சிகள் குரல் கொடுக்காதது வேதனை அளிக்கிறது என விசிக தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார். இறையூர் வேங்கைவையில் கிராமத்தில் பட்டியல் இன மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனிதக் கழிவுகள் கலக்கப்பட்டதை கண்டித்தும் இந்த இழிவான செயலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி புதுக்கோட்டையில் விசிக சார்பில்  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் கலந்து கொண்டார்.

அதில் பேசிய அவர் :-“இறையூர் வேங்கைவயலில் மனித கழிவை மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் கலக்கப்பட்டது இழிவினில் இழிவான செயல், தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட தலைகுனிவு, தமிழன் என்று சொல்ல வெட்கி தலைகுனிய வேண்டும். இதை சகித்து கொண்டு தமிழ்நாடு அமைதியாக இருக்கிறது.  இங்குள்ள தலைவர்கள் இதை சகித்து கொண்டு அமைதியாக இருந்தனர். என்ன சமூக உளவியல் என்று தெரியவில்லை.

தற்போது 20 ஆண்டுகளுக்கு பிறகு குடிநீர் தொட்டியில் மனித கழிவை கொட்டி கொடூர செயலை செய்துள்ளனர். இதற்கு விஷம் வைத்து கொன்று இருக்கலாமே. இது அங்கு மட்டும் நடந்த நிகழ்வு இல்லை  புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இது சாதிய வன்கொடுமை உள்ளது என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அதே வேலையில் கோயிலுக்குள் பட்டியலின மக்களை ஆட்சியரும் மாவட்ட எஸ்பியும் அழைத்து சென்றது ஆறுதலை பெருமையும் தருகிறது. மீசையில்லாதவர்களுக்கும் துணிச்சல் உள்ளது வீரம் என்பது மீசையில் இல்லை மனதில் இருக்கிறது என்பதை ஆட்சியரும் மாவட்ட எஸ்பியும் செயல்படுத்தி காட்டியுள்ளனர்.

அதிகாரிகள் நினைத்தால் எந்த கோயிலை வேண்டும் என்றாலும் திறக்கலாம் ஆனால் அதிகாரிகள் நினைப்பதில்லை.

ஜாதி இந்துக்களுக்கு கட்டுப்பட்டவர்கள் தான் காவல்துறையிலும் வருவாய்துறையிலும் உள்ளனர். தென் மாவட்டங்களில் பெரும்பாலான  இடங்களில் இரட்டை குவளை முறை உள்ளது, தமிழ்நாடு அரசும் அதிகாரிகளும் நினைத்தால் ஒரே நாளில் இரட்டை குவளை முறையை ஒழித்துக்கட்ட முடியும். ஆனால் அரசும் அதிகாரிகளும் மெத்தனமாக இருக்கிறார்கள், தயக்கம் காட்டுகின்றனர், வன்கொடுமை தடுப்புச் சட்டம் என்பது ஒன்றிய அரசு இயற்றிய சட்டம், இதை முறையாக செயல்படுத்தினாலே ஜாதிய வன்கொடுமை இருக்காது. தற்போது வரை மனித கழிவை கலந்தவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை,

கோயிலுக்குள் அழைத்துச் சென்றது, இரட்டை குவளை முறையை கண்டறிந்தது, கைது செய்தது எவ்வளவு முக்கியமோ அதேபோல் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதும் முக்கியமானது. தற்போது குற்றவாளியை கண்டுபிடிக்க தமிழக அரசு குழு அமைந்துள்ளது, குழு அமைத்தாலே பிரச்சனை தான், ஏனென்றால் அந்த குழுவில் புதுக்கோட்டை ஆட்சியரை போல் நேர்மை திறன் உள்ளவர்கள் இருக்க வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தை வன்கொடுமை பகுதியாக தமிழ அரசு அறிவிக்க வேண்டும்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக விடுதலை சிறுத்தைகள் தான் குரல் கொடுக்க வேண்டும் என்பது இல்லை. அனைத்து ஜனநாயக சக்திகளும் குரல் கொடுக்கலாம். அதற்கான சூழல் தற்போது கனிந்து வருகிறது, ஜனநாயக சக்திகள் அமைதி காப்பது வேதனை தருகிறது வலியை தருகிறது. இது அனைத்து கட்சியும் அனைத்து ஜனநாயக சக்திகளும் கண்டிக்க கூடிய செயல், இதை தமிழக அரசுக்கு சுட்டி காட்ட விரும்புகிறேன்.  திருமாவிற்காகவோ விடுதலை சிறுத்தைகளுக்காகவோ இல்லை அரசின் நன்மதிப்பிற்காக செய்ய வேண்டும் திராவிட மாடல் ஆட்சிக்காக செய்ய வேண்டும்.  மனித கழிவை கொட்டக் கூடிய உளவியலை மாற்ற வேண்டும் மனிதன் மனிதன் தானே, இன்று வரை எந்த தேசத்திலும் இல்லாத மனித கழிவுகளை மனிதனே அள்ளக் கூடிய கொடுமை இங்கு தான் உள்ளது.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருமாவளவன் கூறுகையில்: இந்த செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும், புதுக்கோட்டை மாட்டத்தில் ஜாதிய தீண்டாமை அதிக உள்ளது, புதுக்கோட்டை மாவட்டத்தை வன்கொடுமை பகுதியாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். அரசு ஒப்பந்தங்கள் எடுப்பது மற்றும் கோயில் குளங்களில் மீன் பிடி ஏலம் எடுப்பது உள்ளிட்டவற்றில் பட்டியல் இன மக்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும் வகையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இது குறித்து ஏற்கனவே இது குறித்து தமிழக முதல்வரிடம் பேசி உள்ளோம், சட்டப்பேரவை கூட்ட தொடரிலும் விடுதலை சிறுத்தை கட்சி சேர்ந்தவர்கள் மூலம் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்படும், இது பெரியார் மண் என்பது உண்மைதான் அதே வேளையில்  வன்கொடுமை தடுப்புச்சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்தாத மாநிலமாக தமிழகம் இருப்பதும் உண்மைதான். அதற்குக் காரணம் சட்டத்தை முறையாக அதிகாரிகள் நடைமுறைப்படுத்தாததே. அரசு ஆர்வம் காட்டினாலும் அதிகாரிகள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் பலத்தை விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுப்பதில் அலட்சியம் காட்டுகின்றனர்.

அரசியல் நிலைப்பாட்டை பொருத்தவரையில் கூட்டணிக்குள் எங்களுக்குள் எந்த சிக்கலும் இல்லை, அதே வேளையில் பட்டியலினா மக்களுக்கான உரிமைகளை மீட்டெடுக்க தொடர்ந்து நாங்கள் எங்கள் வழியில் போராடுவோம், பட்டியலின மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்க அனைத்து ஜனநாயக அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து போராட வேண்டும், வேங்கைவயல் விவகாரத்தில் ஒரு சில அமைப்புகளை தவிர பெரும்பாலான அரசியல் கட்சிகள் பட்டியலின மக்களுக்காக குரல் கொடுக்காதது வேதனை அளிக்கிறது என்று கூறினார்.

- ர.ரியாஸ், செய்தியாளர், புதுக்கோட்டை 

First published:

Tags: Pudukottai, Thirumavalavan, Viduthalai Chiruthaigal Katchi