கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்ட நடிகர் மன்சூர் அலிகான் இந்தமுறை அக்கட்சியிலிருந்து விலகி தமிழ் தேச புலிகள் கட்சியைத் தொடங்கினார். அதைத்தொடர்ந்து கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட முடிவு செய்து அத்தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்து கடந்த இரண்டு நாட்களாக பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் தொண்டாமுத்தூர் தொகுதியில் நான் போட்டியிடவில்லை என்று தற்போது மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறியிருப்பதாவது, “நான் இந்த தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறேன். இப்போது வரை எனக்கு மனது கஷ்டமாக இருக்கிறது. ஏதாவது ஒரு இடத்தில் போட்டியிட வேண்டும் என முடிவெடுத்து கோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்குச் சென்றேன். சில நண்பர்கள் எனக்கு உதவினார்கள். வேட்புமனு தாக்கல் செய்து அதுவும் இறுதி செய்யப்பட்டுவிட்டது.
தொகுதியில் எங்கே போனாலும் எவ்வளவு பணம் வாங்கியிருக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். இஸ்லாமிய மக்களின் வாக்கை பிரிப்பதற்காகத் தான் நான் போட்டியிடுவதாக நினைக்கிறார்கள். மீன் மார்க்கெட் உள்ளிட்ட இடங்களுக்கு இன்று பிரசாரதுக்குச் சென்றேன். அமைச்சர் வேலுமணிக்கு ஒரு நல்ல பெயர் இருக்கிறது. மற்றபடி அரசியலில் எனக்கு வேறு எதுவும் தெரியவில்லை.
தேர்தலில் போட்டியிட்டு மற்றவர்களை குறை கூறும் பழக்கம் எனக்கு இருந்ததில்லை. திண்டுக்கல் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிட்ட போது ஒரு பைசா கூட வாங்கவில்லை. என் காசை செலவழித்துதான் பிரசாரம் செய்தேன். 3 பெண்களை வைத்திருக்கிறேன் எனக்கு கஷ்டமாக இருக்கிறது. ஏனெனில் நாளை கெட்ட பெயருடன் போகக் கூடாது. காவல்துறையினர் எந்த அனுமதி வாங்கச் சென்றாலும் அதிமுகவினரிடம் வாங்கிக் கொள்ளுங்கள் என்கிறார்கள். எனக்கு ஒன்னுமே புரியவில்லை. பத்துக்கு எட்டு பேர் ஒருமாதிரியாக பார்க்கிறார்கள்.
இந்தத் தேர்தல் வேண்டாம் என்று சென்னை கிளம்பிவிட்டேன். மிகுந்த மனவேதனை அளிக்கிறது. மக்கள் நல்லவர்களை தேர்வு செய்வார்கள். சில இடங்களில் சுயேட்சை வேட்பாளர்கள் பிரசாரத்துக்கு அழைத்திருக்கிறார்கள். அப்படி என்னை அழைப்பவர்களுக்காக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட வாய்ப்பிருக்கிறது. கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் நான் போட்டியிடவில்லை” இவ்வாறு நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Mansoor ali khan, Thondamuthur Constituency, TN Assembly Election 2021