முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016, செப்டம்பர் 22-ம் தேதி போயஸ் கார்டன் வீட்டில் மயங்கி விழுந்தது ஊர்ஜிதமாகியுள்ளது என்று அதிமுக எம்பி மனோஜ் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. இந்த ஆணையத்தில் அப்போலோ மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி சுப்பையா விஸ்வநாதன், 2-வது முறையாக இன்று ஆஜரானார்.
ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த அப்போலோ மருத்துவமனையின் அறிக்கைகள் குறித்தும், அவர் சிகிச்சை பெற்றபோது பதிவான சிசிடிவி காட்சிகள் குறித்தும் சுப்பையா விஸ்வநாதனிடம் விசாரிக்கப்பட்டது. இதேபோல், மனோஜ் பாண்டியனிடம் விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து, சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தினார்.
பின்னர், மனோஜ் பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசும்போது, ``ஜெயலலிதா 2016, செப்டம்பர் 22-ம் தேதி போயஸ் கார்டன் வீட்டில் மயங்கி கீழே விழுந்ததும், சுயநினைவில்லாமல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம், அவரது வீட்டில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஏன் விசாரணை ஆணையத்திடம் ஒப்படைக்கப்படவில்லை?
அவர் மயங்கியபோது அங்கிருந்த இரண்டு பணிப்பெண்கள் இன்னும் விசாரிக்கப்படவில்லை. அவர்களையும் விசாரிக்க வேண்டும். தேசிய பாதுகாப்புப் படை கமாண்டோக்களை ஜெயலலிதாவின் வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு உடன் அழைத்துச் செல்லாதது ஏன்?
ஜெயலலிதாவின் உறவினர்களையும், மற்றவர்களையும் மருத்துவமனையில் அனுமதிக்காதது ஏன்? இவை அனைத்திற்கும் சசிகலா மட்டுமே காரணம்’’ என்றார் மனோஜ் பாண்டியன்.
Published by:DS Gopinath
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.