Home /News /tamil-nadu /

ஹாக்கி விளையாட்டை ஊக்குவிக்க அரசு வழங்கிய நிதி கையாடல்? சங்க நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டு!

ஹாக்கி விளையாட்டை ஊக்குவிக்க அரசு வழங்கிய நிதி கையாடல்? சங்க நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டு!

Youtube Video

1980 ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற ஹாக்கி வீரர் பாஸ்கரன் ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக சங்க தேர்தலின் போது கேள்வி எழுப்பியதாகக் குறிப்பிட்டுள்ளார். சங்க நிர்வாகிகள் அரசு பணத்தை தவறான முறையில் பயன்படுத்தியுள்ளார்கள் எனவும் வேதனையுடன் கூறியுள்ளார். 

மேலும் படிக்கவும் ...
தமிழ்நாட்டில் ஹாக்கி விளையாட்டை ஊக்குவிக்க அரசு வழங்கிய 10 லட்சம் ரூபாயை விளையாட்டு சங்க நிர்வாகிகளே கையாடல் செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அகில இந்திய அளவில் திறமையான சிறந்த விளையாட்டு வீரர்களை தேர்ந்தெடுக்க மத்திய விளையாட்டுத்துறை மூலம் ஒவ்வொரு ஆண்டும் பல கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அவ்வாறு ஒதுக்கப்படும் பணம் மாநில அளவில் செயல்பட்டு வரும் விளையாட்டு சங்கங்கள் மூலம் திறமையான வீரர்களை உருவாக்க செலவிடப்படுகிறது.

அச்சங்கங்கள் அரசிடமிருந்து பணத்தை பெற்று மண்டல, மாவட்ட, மாநில அளவில் போட்டிகளை நடத்தி சிறந்த வீரர்களை உருவாக்கி வருகிறது. அதன்படி கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் ஹாக்கி விளையாட்டின் வளர்ச்சிக்காகவும், தேசிய அளவிலான போட்டிகளை நடத்தவும் 10 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த பணத்தை தமிழ்நாடு ஹாக்கி சங்கத்தின் முன்னாள் பொருளாளர் செந்தில் ராஜ்குமார் முறைகேடாக வங்கியிலிருந்து எடுத்து தனது சொந்த செலவிற்கு பயன்படுத்தி இருப்பதாக புகார் எழுந்திருக்கிறது.  இதற்கு உடந்தையாக தமிழ்நாடு ஹாக்கி சங்கத் தலைவர்  சேகர் மனோகரன், செயலாளர் ரேணுகா லெட்சுமி, புதிய பொருளாளர் ராஜ ராஜன் ஆகியோர் செயல்பட்டுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

புதிய பொருளாளராக ராஜ ராஜன் தேர்வு செய்யப்பட்ட பிறகும் முன்னாள் பொருளாளர் செந்தில் ராஜ் குமார்  தனது பெயரில் வங்கியிலிருந்து பணத்தை எடுத்தது எப்படி? வங்கி இதற்கு எவ்வாறு அனுமதி வழங்கியது? என்பது தொடர்பாக சங்க நிர்வாகிகள் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு ஹாக்கி சங்க தலைவர் சேகர் மனோகரிடம் கேட்ட போது, உடனடியாக பணம் தேவைப்பட்டதால் வங்கி அளித்த வாய்மொழி உத்தரவின் பேரில் பழைய நிர்வாகியின் பெயரிலேயே பணம் எடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அந்த பணம் தவறான முறையில் செலவிடப்படவில்லை என்று மறுப்பு தெரிவித்த அவர், தேசிய அளவிலான போட்டிகள் நடத்தியதில் ஏற்பட்ட கடனை அடைக்கவே அந்த தொகையை பயன்படுத்தியதாக விளக்கமளித்திருக்கிறார்.

இதையும் படிங்க: தேடி வரும் பெற்றோர்கள்: மாணவர் சேர்க்கையில் சாதனை படைக்கும் அரசு பள்ளி!


இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கும்  நிலையில், குழு அமைக்கப்பட்டு துறைரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு ஹாக்கி சங்க செயலாளர் ரேணுகா லெட்சுமி சங்க நிர்வாகிகளை மிரட்டும் தொனியில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக இனி யாரும் பொதுவெளியில் பேசக்கூடாது எனவும் இதை விசாரிக்க குழு நியமித்திருப்பதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் எதுவாக இருந்தாலும் நமக்குள்ளே பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் சமூக வலைதளங்களில் இனி யாரும் இதுபோன்று புகார் அளிக்க கூடாது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் படிக்க: சசிகலா செல்போன் உரையாடல் விவகாரம்... ஆர்.பி.உதயகுமார் காட்டம்..


1980 ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற ஹாக்கி வீரர் பாஸ்கரன் ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக சங்க தேர்தலின் போது கேள்வி எழுப்பியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சங்க நிர்வாகிகள் அரசு பணத்தை தவறான முறையில் பயன்படுத்தியுள்ளார்கள் எனவும் வேதனையுடன் கூறியுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் தமிழ்நாடு அணியில் ஒரு ஹாக்கி வீரர் கூட இல்லை எனவும். தமிழகத்தில் 32 அர்ஜூனா விருது வென்ற விளையாட்டு வீரர்கள் இருந்தும் என்ன பயன் என பாஸ்கரன் ஆதங்கப்பட்டுள்ளார்.

வேலியே பயிரை மேய்ந்தது போல் திறமையான விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்த வேண்டிய விளையாட்டு சங்கங்களே வீரர்களுக்கு வழங்கப்படும் பணத்தை கையாடல் செய்திருப்பதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டு,  ஒட்டு மொத்த தமிழகத்தையே தலைகுனிய வைத்துள்ளது. இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே புகார் அளித்த சங்க நிர்வாகிகளின் ஆதங்கமாக உள்ளது.
Published by:Murugesh M
First published:

Tags: Hockey

அடுத்த செய்தி