• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சமூகநீதி இட ஒதுக்கீடு போராட்டத்தில் பலியான 21 பேருக்கு மணிமண்டபம்: தமிழக அரசு அறிவிப்பு!

சமூகநீதி இட ஒதுக்கீடு போராட்டத்தில் பலியான 21 பேருக்கு மணிமண்டபம்: தமிழக அரசு அறிவிப்பு!

முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

சமூக நீதிக் கொள்கையின் தாய்மடியாக விளங்கக்கூடிய மாநிலம் நம்முடைய தமிழ் மாநிலம்.  சமூகநீதிக் கொள்கைதான் திராவிட இயக்கம், இந்தத் தமிழ்ச் சமுதாயத்துக்குக் கொடுத்த மாபெரும் கொடையாகும் என்று தனது உரையின்போது முதல்வர் குறிப்பிட்டார்.

  • Share this:
    1987ஆம் ஆண்டு இடஒதுக்கீடு போராட்டத்தில் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான 21 சமூகநீதிப் போராளிகளுக்கு ரூபாய் 4 கோடி மதிப்பீட்டில், விழுப்புரம் மாவட்டத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டபேரவையில் அறிவித்தார்.

    தமிழக  சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிவிப்பில்,  சமூக நீதிக் கொள்கையின் தாய்மடியாக விளங்கக்கூடிய மாநிலம் நம்முடைய தமிழ் மாநிலம்.  வகுப்புரிமை, வகுப்புவாரி உரிமை, இடஒதுக்கீடு, சாதிரீதியான ஒதுக்கீடு என்று எந்தப் பெயரைச் சொல்லி அழைத்தாலும், அதற்குச் சமூகநீதி என்ற ஒற்றைச் சொல் கொடுக்கும் பொருளை வேறு எந்தச் சொல்லும் தருவது கிடையாது.  அத்தகைய சமூகநீதிக் கொள்கைதான் திராவிட இயக்கம், இந்தத் தமிழ்ச் சமுதாயத்துக்குக் கொடுத்த மாபெரும் கொடையாகும்.

    வகுப்புரிமை  எனும் இடஒதுக்கீட்டு முறையை நூறாண்டுகளுக்கு முன் நடைமுறைக்குக் கொண்டு வந்தது நீதிக் கட்சிதான். மூடப்பட்டுக் கிடந்த கல்வி, வேலைவாய்ப்பு, அதிகாரப் பதவிகள் அனைத்தும் அதன் மூலமாக அனைவருக்குமானது.  சுதந்திர இந்தியாவில் அதற்குச் சட்டரீதியான இடர்ப்பாடு வந்தபோது, தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் இரட்டைக்குழல் துப்பாக்கியாக இருந்து முன்னெடுத்த போராட்டம்தான் அது.

    இதையும் படிக்க: குழந்தைகள் இணைய அடிமையாவதை தடுக்க அரசு மருத்துவமனையில் ஆலோசனை வழங்கப்படும்: தமிழக அரசு


    சமூகநீதிக்கான தொடர்ச்சியான போராட்டங்களின் வரிசையில், 1987ஆம் ஆண்டு நடைபெற்ற 20 விழுக்காடு தனி இடஒதுக்கீடு கோரி வடதமிழகத்தில் நடந்த போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது.   அந்தப் போராட்டத்தில், அன்றைய அரசின் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியானவர்கள் 21 பேர். சமூகநீதிப் போராளிகளான அவர்களுடைய உயிர்த் தியாகத்திற்கும், போராட்டத்திற்கும் நியாயம் வழங்கிடும் வகையில், 1989ஆம் ஆண்டு அமைந்த கருணாநிதி  தலைமையிலான அரசு, இந்தியாவிலேயே முதன்முறையாக மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவை அமைத்துக் கொடுத்து, அவர்களுக்கு 20 விழுக்காடு இடஒதுக்கீட்டினை வழங்கி, கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் சம வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார்.



    கருணாநிதி வழியில் செயல்படும் தற்போதைய தமிழக அரசு மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் 20 விழுக்காடு இடஒதுக்கீட்டில் வன்னிய சமுதாயத்தினருக்கான 10.5 விழுக்காடு தனி ஒதுக்கீட்டினை சட்டப்பூர்வமாக நடைமுறைப்படுத்தியிருக்கிறது.   ஒடுக்கப்படும் சமுதாயம் எதுவாக இருந்தாலும், அதன் உரிமைகள் காக்கப்பட வேண்டும்; மீட்கப்படவேண்டும் என்பதே திமுக அரசினுடைய உயர்ந்த நோக்கமாகும்.

    மேலும் படிக்க: முதல்வர் தனிப் பிரிவில் மனு அளித்தால் சொந்த வீடு: வதந்தியால் அலைமோதிய கூட்டம்!


    அத்தகைய தியாகிகளின் பங்களிப்பை நினைவுகூர்ந்து, 1987ஆம் ஆண்டு இடஒதுக்கீடு போராட்டத்தில் காவல் துறையினுடைய துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான 21 சமூகநீதிப் போராளிகளின் தியாகத்தை மதிக்கக்கூடிய வகையிலே, ரூபாய் 4 கோடி மதிப்பீட்டிலே, விழுப்புரம் மாவட்டத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும்” என்று தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: