மாண்டஸ் புயலால் தமிழகத்தில் தற்போது நடக்கும் நிலவரங்கள் முழுமையாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பார்ப்போம்..
வங்ககடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வட தமிழக மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.
மாண்டஸ் புயல் காரணமாக மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களை மூட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. மக்கள் இன்று கடற்கரைகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும், தங்கள் கார்களை மரங்களுக்கு அடியில் நிறுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது. கடற்கரையில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. சென்னையில் 169 உட்பட 5,093 நிவாரண மையங்களும், தமிழகம் முழுவதும் 121 தங்குமிடங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
புயல் காரணமாக சென்னை, விழுப்புரம், கடலூர், திருவள்ளூர், செங்கல்பட்டு,காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இரவு இன்று இரவு நகர பேருந்துகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னை செல்லும் 6 பேருந்துகள் உட்பட 9 பேருந்துகள் புயல் எச்சரிக்கை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. உள்ளூர் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலைத்தில் இருந்து புறப்படும் 11 விமானங்கள் ரத்து. மேலும் பல விமானங்கள் ரத்தாக வாய்ப்பு. சென்னையில் தரையிறங்க உள்ள விமானங்கள் பெங்களூரு அல்லது ஹைதராபாத் விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்படலாம் என கூறப்படுகிறது.
புயல் மற்றும் கனமழை காரணமாக தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும், டார்ச் அல்லது மெழுகுவர்த்திகள், பேட்டரிகள், உலர் பழங்கள் மற்றும் குடிநீர் ஆகியவற்றை தயாராக வைத்திருக்கவும் தமிழக அரசு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. நீர்த்தேக்கங்களில் இருந்து உபரி நீரை வெளியிடுவதற்கான முன் அறிவிப்பு உட்பட அனைத்து நடவடிக்கைகளும் பின்பற்றப்படுவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுத்தப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயல் புதுச்சேரி -ஸ்ரீஹரிகோட்டா இடையே இன்று நள்ளிரவு முதல் சனிக்கிழமை அதிகாலை வரை மணிக்கு 65 முதல் 75 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்றும் சென்னைக்கு அருகில் உள்ள மாமல்லபுரம் அருகே புயல் கரையை கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம் மற்றும் புதுச்சேரியின் சில பகுதிகளில் மிக கனமழை பெய்யும். மாநிலத்தின் 13 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பலத்த காற்றினால் மரங்கள் வேரோடு சாய்ந்து, மின்வெட்டு மற்றும் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளது.
தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 10 மாவட்டங்களில் தனது குழுக்களை தயார் நிலையில் வைத்துள்ளது. படகுகள் மற்றும் மரம் வெட்டும் இயந்திரங்கள் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளன. மீனவர்கள் மூன்று நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மீன்பிடி படகுகள் துறைமுகத்திற்குத் திரும்புமாறு தொடர்ந்து கேட்டுக் கொள்ளப்பட்டு வருவதாகவும், தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அனைத்து எண்ணெய் சுரங்கங்கள் மற்றும் கடலோர நிறுவல்களுக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புயல் பாதிப்பு குறித்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாநிலம் 238 நிவாரண மையங்களைத் திறக்கப்பட்டுள்ளது என்றும் என்டிஆர்எப் வீரர்களும் புதுச்சேரிக்கு விரைந்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.