சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பேருந்தில் பயணம் செய்தவர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை!

சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பேருந்தில் பயணம் செய்தவர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை!

சேலம் மாநகராட்சி பகுதியில் மொத்தமுள்ள 60 டிவிசன்களில் 80 முகாம்கள் அமைக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

  • Share this:
சேலம் மாநகரில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பேருந்தில் பயணம் செய்தவர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை எடுக்கப்படுகிறது. மாநகராட்சி  ஊழியர்கள் மற்றும் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டதை அடுத்து இரண்டாம் அலையின் தாக்கம் கணிசமாக குறைந்து வருகிறது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையில் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசு கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, கடந்த ஏப்ரல் மாதம் பத்தாம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு கொரோனா பரவலை குறைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிலையில் அரசின் தீவிர முயற்சியால் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வந்தது. இதைத்தொடர்ந்து பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பேருந்துகளில் 50 சதவீத பயணிகள் பயணிக்கலாம் என்பன உள்ளிட்ட பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன

கொரோனா ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டதை தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் கடந்த திங்கட்கிழமை முதல் பேருந்து போக்குவரத்து தொடங்கியது. பேருந்துகளில் 50 சதவிகித பயணிகளை மட்டுமே ஏற்ற வேண்டும் என்ற வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ள நிலையில் ஒரு சில பேருந்துகளில். நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதல் எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றி செல்வதாக புகார்கள் வந்தன.

இந்த நிலையில் விடுமுறை நாளான இன்று சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து, நகர பேருந்து நிலையம் செல்லும் சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக பயணிகளை ஏற்றி வந்த பேருந்துகளை நிறுத்தி முக்கவசம் அணியாதவர்கள், முகக்வசத்தை முறையாக அணியாதவர்கள், தனி மனித இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை செய்யும் நடவடிக்கையில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.  மேலும், கூடுதல் பயணிகளை ஏற்றி வந்த ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு காவல்துறையினர் எச்சரிக்கையும் விடுத்தனர்.

Also read: தேமுதிக - திமுக உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி அமைக்க வாய்ப்பு?

இதேபோல், போக்குவரத்து விதிமுறைகளை மீறி, இருசக்கர வாகனத்தில் பயணிப்பவர்களையும், தேவையின்றி வெளியில் சுற்றித் திரிபவர்களையும் தடுத்து நிறுத்தி கட்டாய கொரோனா சோதனை செய்யும் நடவடிக்கைகளில் சேலம் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இது போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டதை அடுத்து இரண்டாம் அலையின் தாக்கம் கணிசமாக குறைந்து வருகிறது.

சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் இதுவரை 90 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பரிசோதனை மற்றும் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் அமைத்து நாள்தோறும் சுமார் 7 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது.

சேலம் மாநகராட்சி பகுதியில் மொத்தமுள்ள 60 டிவிசன்களில் 80 முகாம்கள் அமைக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதுபோன்ற நடவடிக்கைகள் காரணமாக சேலம் மாவட்ட அளவில் ஆயிரத்தை தொட்ட தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது 200 க்கும் கீழ் குறைந்துள்ளது.
Published by:Esakki Raja
First published: