இருமடங்காக உயர்ந்த பாமாயில் எண்ணெய் விலையினால், திருச்சி மாவட்டம் மணப்பாறையில் முறுக்குத் தொழில் கவலைக்கிடமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
நொறுக்குத் தீனி பிரியர்களுக்கு திருச்சி மாவட்டம் மணப்பாறை என்றாலே முதலில் நினைவுக்கு வருவது, மொறு.. மொறு.. மணப்பாறை முறுக்கு தான். சரியான விகிதத்தில் பச்சரிசியையும், உளுந்தையும் அளவான தண்ணீர் சேர்த்து, அதனுடன் எள், ஓமம், சீரகத்தைப் போட்டு மாவை பக்குவமாப் பிசைந்து மாவு தயாரிக்கப்படுகிறது.
பின்னர், தகதகவென எரியும் விறகடுப்பில் காய வைத்த பிரம்மாண்ட எண்ணெய் சட்டிக்குள், கைப்பிடி மாவை முறுக்குக் குழலில் போட்டுச் சுற்றி, முறுக்கைப் பிழிந்து பொன்னிறத்தில் பொரித்து எடுக்கப்படுவதே மணப்பாறை முறுக்கு. இதன் சுவைக்கு சுவை சேர்ப்பது மணப்பாறையின் உப்புத்தண்ணீர் என்பது சிறப்பம்சம்.
தற்போது, பூண்டு முறுக்கு, புதினா இஞ்சி சேர்த்த முறுக்கு, கம்பு முறுக்கு, கார முறுக்கு என்று பல ரகங்களில் முறுக்குகள் தயார் செய்யப்படுகின்றன.
விண்ணை முட்டும் எண்ணெய் விலை
வானம் பார்த்த பூமியான மணப்பாறை, திருச்சி மாவட்டத்தின் பின்தங்கிய பகுதியாக இருக்கிறது. இப்பகுதி மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக விளங்குகிறது முறுக்குத் தொழில். மணப்பாறையில், 800க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முறுக்குத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தின், 24 தனித்துவமான தயாரிப்புகள் பட்டியலில், புவிசார் குறியீடுக்காக காத்திருக்கிறது மணப்பாறை முறுக்கு.
ஆனால், அது கிடைப்பதற்குள் மணப்பாறை முறுக்கு என்பதே ‘அரியவகை பொருட்கள்’ பட்டியலில் சென்று விடுமோ? என்ற அச்சத்தில் உள்ளனர் இத்தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள். அதற்கு காரணம், இருமடங்காக உயர்ந்த பாமாயில் எண்ணெய் விலைதான். அதுவும் கடந்த சிலமாதங்களில் மட்டும் இரண்டு முதல் மூன்று மடங்காக உயர்ந்துள்ளது.
இது குறித்து, இத்தொழிலில், 65 ஆண்டுகளாக ஈடுபட்டு வரும் ஆரோக்கியசாமி கூறியபோது, “மணப்பாறை முறுக்குத் தொழில் தற்போது ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளது. பாதிக்கும் மேற்பட்டோர் தொழிலை விட்டு வெளியேறி விட்டனர். மற்ற எண்ணெய் பலகாரங்கள் போலில்லாமல், மணப்பாறை முறுக்கு சுடுவதற்கு குறைந்தபட்சம் ஒரு சட்டியில், 45 லிட்டர் எண்ணெய் தேவைப்படும்.
அவ்வளவு எண்ணெய்யை சரியான சூட்டில் காய வைத்தால் தான், சுவையான மணப்பாறை முறுக்கை பொரித்து எடுக்க முடியும். இந்தோனேஷியாவில் இருந்து வரும் பாமாயில், ஒரு மாதம் வரை சேமித்து வைக்கக் கூடியதாகவும், சிக்கனமானதாகவும் எங்களுக்கு இருந்து வந்தது.
மானிய விலையில் பாமாயில் கிடைக்குமா?
ரஷ்யா- உக்ரைன் போர் காரணமாக தற்போது இந்தோனேஷியா தனது பாமாயில் ஏற்றுமதியை நிறுத்திவிட்டது. இதனால், கடந்த சில மாதங்களுக்கு முன், 15 லிட்டர் டின், 1,500 ரூபாய்க்கு விற்ற நிலையில், தற்போது, 2,500 ரூபாய்க்கு விற்கிறது. 900 ரூபாயில் இருந்து, சிறிது, சிறிதாக உயர்ந்த எண்ணெய் விலை இந்தளவு உச்சத்தை எட்டியுள்ளது.

மணப்பாறை முறுக்கு தொழில்
எண்ணெய் தவிர, தொழிலாளிகள் சம்பளம், விறகுச் செலவு, கடை வாடகை, மின்சாரக் கட்டணம், வண்டி வாடகை என அதிகரித்துக் கொண்டே செல்லும் செலவுகள் கட்டுப்படி ஆகவில்லை. எனவே, மணப்பாறை முறுக்குத் தொழிலில் ஈடுபட்டுள்ளோருக்கு மானிய விலையில் பாமாயில் கிடைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அழியும் நிலையில் உள்ள இத்தொழிலை மீட்டெடுக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.
தொழிலாளிக்கு உதவுங்க..
முறுக்கு பிழியும் தொழிலாளியான சத்யா என்ற பெண்மணி கூறியபோது, “முறுக்கு பிழிவது, முறுக்குகள் பொரிப்பது, பாக்கெட்டுகள் போடுவது என்று இத்தொழிலில் ஆயிரக்கணக்கான பெண்கள் ஈடுபட்டுள்ளோம். எங்களது வாழ்வாதாரத்தை காக்க, எண்ணெய் விலையேற்றத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மேலும், தொழிலாளிகள் நலனை காக்க, புவிசார் குறியீட்டை விரைவாக பெற்றுத் தர வேண்டும். எங்களையும், எங்களது குடும்பத்தினரையும் பாதுகாக்கும் வகையில் தொழிலாளர்கள் நலவாரியத்தில் எங்களையும் உறுப்பினராக சேர்த்துக் கொள்ள தமிழக அரசு உத்தரவிட வேண்டும்” என்றார்.
தற்சார்பு பொருளாதாரம்
“மணப்பாறை பக்கம் வந்தாலே முறுக்கு வாங்காமல் செல்ல மாட்டேன்” என்று கூறும் சென்னையை சேர்ந்த அபூபக்கர் சித்திக் என்பவர் மேலும் கூறியபோது, “மணப்பாறை முறுக்கு போன்ற உள்நாட்டு தொழிலுக்கு நாம் ஆதரவளித்தால் தான் நமது தற்சார்பு பொருளாதாரம் உயரும்.
படித்த, வேலையற்ற ஏராளமான இளைஞர்கள் இதன்மூலம் வேலைவாய்ப்பு பெறுவார்கள். மணப்பாறை முறுக்குத் தொழிலில் ஈடுபடுவோரை ஆதரித்தால், விவசாயிகள் நேரடியாக பயன் பெறுவர்” என்றார்.
Must Read : ஒரே மேடையில் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின்... மாறி மாறி ஒலித்த கோஷம்!
கொளுந்து விட்டெறியும் நெருப்பில், கொதிக்கும் எண்ணைய்யில் போட்டாலும், “வெள்ளை நிற முறுக்கு” கருகி விடாமல் லாகவமாக இழுத்து எடுக்கிறார் முறுக்கு பொரிக்கும் பெண்மணி.
அவரின் அந்த தொடர் செய்கை அரசுகளுக்கு ஏதோ சூசகமான செய்தியை தெரிவிப்பதை போல இருக்கிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.