கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி.யின் அனல்மின் நிலைய அலகுகளில் கடந்த மே மாதம் நடந்த விபத்தில் 5 பேரும், ஜூலை மாதம் நடந்த விபத்தில் 15 பேரும் உயிரிழந்தனர். இந்த விபத்துகள் குறித்து ஊடகங்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தது.
ஆயுட்காலம் முடிந்த பின்னரும் அனல் மின் நிலைய அளவுகளை இயக்கி வந்த காரணத்தால்தான் தொடர்ச்சியாக விபத்துகள் ஏற்படுகிறது என்றும் இந்த அனல்மின் நிலைய அழகுகளை மூடுவதற்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரி சென்னையைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் கே ஆர் செல்வராஜ் குமார் என்பவரும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.
இந்த வழக்கில் விபத்து குறித்து ஆராய அமைக்கப்பட்ட நிபுணர் குழு அண்மையில் தனது விசாரணை அறிக்கையை சமர்ப்பித்து இருந்தது. அதில், “ அனல்மின் நிலைய கொதிகலனை தூய்மைப்படுத்துவதற்கு தனித்த வழிகாட்டு நெறிமுறைகள் இல்லை. பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்படவில்லை. பாதுகாப்பு மேலாண்மை செயல்முறை அமைப்பு அமலாக்கப்படவில்லை. பயிற்சி பெற்ற ஊழியர்கள் பணியிலமர்த்தப்படவில்லை. ஊழியர்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி வழங்கப்படவில்லை. அதிக வெப்பத்திலிருக்கும் லிக்னைட் மீது தண்ணீரை ஊற்றினால் ஏற்படும் பாதிப்பை கையாள்வது குறித்த விளக்கமே அவசர கட்டுப்பாடு திட்டத்தில் இல்லை. உயிரிழந்த ஊழியர்களுக்கு மொத்தமாக ரூபாய் 5 கோடியே 57 லட்சம் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.” இந்த இழப்பீட்டுத்தொகை நியாயமான முறையில் வழங்கப்பட்டுள்ளதாகவும் நிபுணர் குழு தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது.
இந்த அறிக்கையை பரிசீலித்த தேசிய படுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் ஏ.கே.கோயல் தலைமையிலான முதன்மை அமர்வு அளித்த தீர்ப்பில், நடந்த விபத்திற்கு என்.எல்.சி. நிர்வாகமும், அதன் அனல்மின் நிலைய இயக்கம் மற்றும் பராமரிப்பு பிரிவு தலைமை அதிகாரியும், பாதுகாப்பு அதிகாரியுமே பொறுப்பு என்று கூறிய தீர்ப்பாயம் பாதுகாப்பு நெறிமுறைகளை அனைத்து ஊழியர்களுக்கும் அவர்களது மொழியில் கற்றுக் கொடுக்க வேண்டியது நிர்வாகத்தின் கடமை என்றும் நிபுணர் குழு அளித்த பரிந்துரைகள் அனைத்தையும் பின்பற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
மேலும் கொதிகலன் கண்காணிப்பு இயக்குனர் என்.எல்.சி அனல்மின் நிலைய அலகுகள் இன்னும் 6 ஆண்டுகள் இயக்க தகுதியானவையாக இருப்பதாக சான்றளித்துள்ளதால் அனல்மின் நிலைய அலகுகளை இயக்க தடை விதிக்க முடியாது என்று உத்தவிட்டது. மேலும் குறிப்பிட்ட கால இடைவெளியில் அனைத்து அனல்மின் நிலைய அலகுகளும் முறையாக கண்காணிக்கப்பட வேண்டும். அடுத்த 6 மாதத்திற்குள் இந்தியா முழுவதும் உள்ள அனல்மின் நிலையங்களின் பாதுகாப்பு குறித்த ஆய்வை மத்திய நிலக்கரி மற்றும் மின்சாரத்துறை அமைச்சகங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று கூறி வழக்கை முடித்து வைத்தது.
READ: Ilayaraja | 45 ஆண்டுகளில் பெரும்பாலான நேரத்தை பிரசாத் ஸ்டூடியோவிலே செலவிட்டார் இளையராஜா(வீடியோ)
20 ஊழியர்கள் உயிரிழந்ததற்கு என்எல்சி நிர்வாகத்தின் அலட்சியமும் பொறுப்பற்ற தன்மையே காரணம் என்பது நிபுணர் குழுவின் அறிக்கையில் தெள்ளத் தெளிவாக தெரிய வந்தாலும் என்எல்சி நிர்வாகத்தின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுப்பதற்கான உத்தரவை தேசிய பசுமை தீர்ப்பாயம் விதிக்கவில்லை என்பது பாதிக்கப்பட்ட மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்