சென்னையில் கள்ளக்காதலனை வைத்து, இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட கணவன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலன் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கதிரவனுக்கும், தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தைச் சேர்ந்த அனிதாவுக்கும் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தான் திருமணம் நடந்தது. சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த கதிரவனும், எம்.சி.ஏ. பட்டதாரியான அனிதாவும், சென்னை பல்லாவரத்தில் வசித்து வந்தனர்.
கடந்த சனிக்கிழமை இவர்கள் இருவரும், திருவான்மியூர் கடற்கரைக்குச் சென்ற போது, கதிரவனைத் தாக்கி அனிதாவின் கழுத்திலிருந்த 12 சவரன் நகை உள்ளிட்டவற்றை 2 பேர் திருடிச்சென்றனர். இதில், படுகாயமடைந்த கதிரவன் சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து திருவான்மியூர் போலீசார் நடத்திய விசாரணையில், தனது கணவர் கதிரவனை கொலை செய்ய அனிதா தனது கள்ளக்காதலன் மூலம் அவரை தாக்கியது தெரியவந்தது. தான் கல்லூரியில் படித்த நாட்களிலேயே ஜெகன் என்கிற அந்தோணியுடன் அனிதாவுக்கு காதல் ஏற்பட்டது. ஆனால், விருப்பம் இல்லாமல் கதிரவனை அனிதா திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகும் ஜெகனுடன் அனிதா பழகி வந்துள்ளார். ஜெகனுடன் சேர்ந்து வாழ முடிவெடுத்த அனிதா இதற்காக கதிரவனை கொலை செய்ய திட்டமிட்டது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, அனிதாவை-யும், மதுரையில் தலைமறைவாக இருந்த ஜெகனையும் கைதுசெய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். தனக்கும் திருமணம் நடக்க உள்ள நிலையில், திருமணம் செய்ய இருந்த பெண்ணை கொலை செய்ய, ஜெகனும், அனிதாவும் திட்டமிட்டது ஜெகனிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தோடு சிகிச்சை பெற்று வந்த கதிரவன், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார்.
மகனுக்கு திருமணம் முடிந்த நிலையில், அரசு ஊழியராக இருந்த கதிரவனின் தந்தையும், தாயும், விருப்ப ஓய்வு பெற்றுவிட்டு, பேரக்குழந்தையை ஆசையாய் வளர்க்க கனவுகளோடு காத்திருந்த போது மகன், படுகொலை செய்யப்பட்டுள்ளார். உடன் வாழப் பிடிக்கவில்லை என்பதற்காக மனைவியே தனது கணவரை முன்னாள் காதலனை வைத்து கொலை செய்த இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Published by:Vinothini Aandisamy
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.