திருமணம் ஆன 4 மாதத்தில் மனைவியை வனப்பகுதிக்கு அழைத்துச்சென்று கழுத்தை அறுத்து கொன்ற கணவன்..
திருமணம் ஆன 4 மாதத்தில் மனைவியை வனப்பகுதிக்கு அழைத்துச்சென்று கழுத்தை அறுத்து கொன்ற கணவன்..
.
காணாமல்போன பெண்ணை கடந்த ஒரு மாதமாக இருமாநில போலீசார் தேடி வந்த நிலையில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் அடர்ந்த காட்டுக்குள் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
ஆந்திர வனப்பகுதிக்கு மனைவியை அழைத்து சென்று கழுத்து அறுத்து கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர். காதல் திருமணம் செய்தவர் நான்கே மாதத்தில் மனைவியை கொலை செய்துள்ளார்.
செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் ஜோதிநகர் 8வது தெருவில் வசித்து வருபவர் மதன். இவரது மனைவி தமிழ்செல்வி. இருவரும் 4 மாதங்களுக்கு முன்புதான் காதல் திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வசித்து வந்தனர்.
19 வயது மதனும் 18 வயதே ஆன தமிழ்செல்வியும் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து, தனியாக வசித்தனர். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் அடிக்கடி சண்டையிட ஆரம்பித்தனர். இந்த நிலையில் கடந்த மாதம் 25-ந்தேதி தமிழ்செல்வி திடீரென மாயமானார். இதுகுறித்து தமிழ்செல்வியின் பெற்றோர் செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
வழக்குப்பதிவு செய்த போலீசார் கணவர் மதனை பிடித்து விசாரித்ததில் தமிழ்செல்வியை கடந்த 26ந்தேதி ஆந்திர மாநிலம் கோனே அருவி மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்றதாகக் குறிப்பட்டுள்ளார். அங்கு கத்தியால் தமிழ்செல்வியை கழுத்தில் அறுத்து விட்டதாகவும், காயங்களுடன் தவித்த மனைவியை அங்கேயே விட்டு விட்டு வந்து விட்டதாகவும் திடுக்கிடும் தகவலைத் தெரிவித்துள்ளார். உடனடியாக மதனை அழைத்துக் கொண்டு கோனே நீர்வீழ்ச்சி பகுதிக்கு விரைந்து போலீசார் சம்பவ இடத்தில் பார்வையிட்டனர்.
10க்கும் மேற்பட்ட போலீசார் அந்த பகுதி முழுவதும் தமிழ்செல்வியை தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆந்திர மாநில சித்தூர் மாவட்ட போலீசாரின் உதவியை நாடிய செங்குன்றம் போலீசார் தொடர்ந்து வனப்பகுதியில் தேடினர். மதன் தமிழ்ச்செல்வியை கத்தியால் குத்தி 35 நாட்கள் கடந்த நிலையில், மலைப்பகுதியில் காயங்களுடன் போராடிய தமிழ்செல்வி என்ன ஆனார் என்பது தெரியாமல் இருந்தது.
இது தொடர்பாக மதன் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். கோனே மலைப்பகுதியில் அம்மாநில வனத்துறையினர் பொறுத்தி உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் போலீசார் ஆய்வு செய்தனர். அதில் மலைப்பகுதிக்கு தமிழ்செல்வியும் மதனும் ஒன்றாக சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தன. அதே நேரத்தில் திரும்பும் போது மதன் மட்டும் தனியாக வரும் காட்சிகளும் பதிவாகி இருந்தன.
நீண்ட தேடுதல் வேட்டைக்கு பின்னர் தமிழ்ச்செல்வியின் உடலை உள்ளூர் கிராம மக்கள் உதவியோடு ஆந்திர போலீசார் கண்டுபிடித்தனர். உடல் முழுவதும் அழுகிய நிலையில் வெறும் எலும்பும் உடையும் மட்டுமே அதில் இருந்தன. தமிழ்செல்வி கடைசியாக அணிந்திருந்த உடை மற்றும் நகைகளை வைத்தே அது தமிழ்செல்வி என்று அடையாளம் கண்டுபிடித்தனர்.
ஆந்திர மாநில போலீசார் அளித்த தகவலின் பெயரில் மெக்கானிக் மதனை போலீசார் கைது செய்தனர். தமிழ்செல்வியின் உடலை திங்கள் கிழமை தமிழகம் கொண்டு வந்தனர். கஞ்சா போதைக்கு அடிமையான மதன், தமிழ்செல்வியிடம் ஒரு மாதத்துக்கு முன்பு பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். பணம் கொடுக்காததால் மகளை கொலை செய்து விட்டதாகவும் பெற்றோர் தெரிவித்துள்ளனர். கொலை செய்யப்பட்ட இடம் ஆந்திரா போலீசாரின் எல்லை பகுதி என்பதால் மதனை ஆந்திரா போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழ்செல்வியை கண்டுபிடிக்க போலீசார் அலட்சியம் காட்டிய நிலையில் தனது ஏழ்மை நிலையிலும் மகளின் நிலையை உணர்ந்து கொள்ள காவல் நிலையம், டிஜிபி அலுவலகம், நீதிமன்ற படிகட்டுகளில் ஏறி, கடைசியாக தனது மகளின் உடலை எலும்புக்கூடாக பெற்றோர் கண்டெடுத்துள்ளனர்.
பெற்றோர் எதிர்ப்பை மீறி இளம் வயதில் காதல் வசப்பட்டு, போதை பழக்கத்திற்கு அடிமையானவரை நம்பி சென்று உயிர் இழந்துள்ள தமிழ்செல்வியின் மரணம் ஒவ்வொரு இளம்பெண்ணுக்கும் பாடமாக அமைந்துள்ளது. காதலிப்பது தவறில்லை, ஆனால் யாரை காதலிக்கிறோம் என்பதையும், கண்மூடிதனமாக காதலித்து ஏமாந்து விடாதீர்கள் என்றும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
Published by:Raj Kumar
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.