மீண்டும் க்யூநெட் மோசடி... பணத்தையும் இழந்து, காதலியும் வெறுத்ததால் இளைஞர் தற்கொலை...

க்யூநெட் நிறுவனத்தின் முகவர்கள் என்று கூறிக் கொண்டு இப்போதும் தமிழகத்தில் பலர் பண வசூலில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது ரஞ்சித்குமார் ஏமாற்றப்பட்டதில் இருந்து தெரியவருகிறது.

Web Desk | news18
Updated: August 1, 2019, 10:42 PM IST
மீண்டும் க்யூநெட் மோசடி... பணத்தையும் இழந்து, காதலியும் வெறுத்ததால் இளைஞர் தற்கொலை...
தற்கொலை செய்துகொண்ட ரஞ்சித் குமார்
Web Desk | news18
Updated: August 1, 2019, 10:42 PM IST
சர்வதேச அளவில் இயங்கி வரும் க்யூநெட் நிறுவனத்தின் பெயரால் சென்னையில் மீண்டும் ஒரு மோசடி அரங்கேறியுள்ளது. மோசடியால் அப்பாவி இளைஞர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பல இளைஞர்களும் இளம்பெண்களும் தாங்கள் பல லட்சம் ரூபாய் ஏமாற்றப்பட்டதாக புகார் தெரிவித்தனர்.

முதற்கட்ட விசாரணையில் ஹாங்காங்கில் இயங்கி வரும் க்யூநெட் நிறுவனத்தின் கிளை நிறுவனமான வீஹான் என்ற நிறுவனம் இந்தியா முழுவதும் எம்எல்எம் என்ற மல்டி லெவல் மார்க்கெட்டிங் உத்தி மூலம் பணத்தை வசூலிப்பது தெரியவந்தது.


இந்நிலையில், மீண்டும் அதே க்யூநெட் நிறுவனத்தின் பெயரில் ஒரு மோசடி அரங்கேறியதோடு மட்டுமின்றி அதில் பணத்தை இழந்த இளைஞர் ரஞ்சித்குமார் தனது உயிரையும் இழந்துள்ளார்.

33 வயதான ரஞ்சித்குமார் தனது உறவினர் பெண்ணாலேயே ஏமாற்றப்பட்டுள்ளார் என்பதுதான் இதில் உச்சகட்ட சோகம்

சென்னை கிழக்கு கடற்கரை சாலை சின்ன நீலாங்கரை குப்பம் பகுதியில் வசித்து வந்தவர் ரஞ்சித்குமார். அம்மா ராஜலஷ்மி உடன் வசித்து வந்த இவர் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்தார்

Loading...

ரஞ்சித்குமாரும் சிதம்பரத்தைச் சேர்ந்த அவருடைய உறவினர் பெண்ணான விஷ்ணு பிரியாவும் காதலித்து வந்துள்ளனர்.

திருமணம் குறித்து ரஞ்சிகுமார் கேட்ட போது, ஏதேனும் தொழில் செய்தால்தான் உனக்கு என்னை திருமணம் செய்து தருவார்கள் என கூறியுள்ளார் விஷ்ணுபிரியா

மேலும் தனது மாமா சேதுராமன் என்பவர், க்யூநெட் என்ற நிறுவனம் மூலம் எம்எல்எம் பிசினஸ் செய்வதாகவும் அதில் இணையலாம் எனவும் விஷ்ணுபிரியா தெரிவித்துள்ளார்.

நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ரஞ்சித்குமார் அதில் சேர்வதற்காக வங்கியிலும் நண்பர்களிடமும் கடன் வாங்கி ரூ. 8 லட்சம் சேதுராமனிடம் முதலீடாக கொடுத்துள்ளார்.

பணம் கொடுத்து ஓராண்டுக்கு மேலாகியும் அதற்கான பணப் பலன்களோ அல்லது கொடுத்த பணமோ திரும்பக் கிடைக்காததால் ரஞ்சித்குமார் சந்தேகமடைந்தார்.

சேதுராமனிடம் கேட்டபோது தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், க்யூநெட் நிறுவனத்தில் இருந்து விலகி விட்டதாகவும் பணத்தை திருப்பித் தர முடியாது எனவும் கூறியுள்ளார்.

அப்படி பணம் தான் வேண்டும் என்றால் அதே தொகைக்கு யாரையாவது சேர்த்துவிட்டால் திரும்பக் கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும் சேதுராமன் ஆசை காட்டியுள்ளார்.

ரஞ்சித்குமாரும் வேறு வழியின்றி தனது நண்பர் ஒருவரை ரூ. 2 லட்சம் முதலீடு செய்ய வைத்தார்.

ஆனால் சில மாதங்ககளாக அந்த நண்பருக்கும் பணம் திரும்பக் கிடைக்காததால் அவர் நெருக்கடி கொடுக்கவே வெளியில் கடன் வாங்கி அந்த நண்பரிடம் ரூ. 2 லட்சம்  கொடுத்து விட்டார் ரஞ்சித்குமார்.

சரி பணம் தான் போய் விட்டது, விஷ்ணுபிரியாவையாவது திருமணம் செய்து கொள்ளலாம் என அவரிடம் கேட்டபோது தொழிலில் தோற்ற உன்னை திருமணம் செய்ய முடியாது என்று அவர் மறுத்துவிட்டார்.

நன்கு படித்து வேலை பார்க்கும் இளைஞரைத் தான் மணம் முடிப்பேன் என்றும் விஷ்ணுப் பிரியா கூறியதாக சொல்லப்படுகிறது.

பணத்தையும் இழந்து காதலிலும் ஏமாந்ததால் ரஞ்சித்குமார் கடும் மன உளைச்சலுக்கு உள்ளானார்

செவ்வாய்க்கிழமை இரவு வழக்கம் போல் தனது அறைக்குள் துாங்கச் சென்றவர் நள்ளிரவில், மின்விசிறியில் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்

காலையில் நீண்ட நேரமாகியும் அவர் அறையில் இருந்து வெளியில் வராததால் தாய் ராஜலட்சுமி அறையைத் திறந்து பார்த்தபோது மகன் துாக்கில் தொங்கியபடி கிடந்ததைப் பார்த்து அலறியுள்ளார்.

இறப்பதற்கு முன்பு ஒரு மணிநேரத்திற்கும் மேலாக சேதுராமனிடம் பேசியுள்ளார் ரஞ்சித்குமார். பணத்தை திருப்பித் தரமுடியாது என்றதோடு செத்துப் போனாலும் கவலையில்லை என சேதுராமன் கூறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

க்யூநெட் நிறுவனத்தின் முகவர்கள் என்று கூறிக் கொண்டு இப்போதும் தமிழகத்தில் பலர் பண வசூலில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது ரஞ்சித்குமார் ஏமாற்றப்பட்டதில் இருந்து தெரியவருகிறது.

Also Watch: செருப்பால் அடித்ததால் ஆத்திரம்.. பெண்ணை கொன்ற அத்தை மகன்

First published: August 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...