முகநூல் காதல்: இதயத்தில் குத்திய காதலன் தூக்கிட்டு தற்கொலை... உயிருக்கு போராடும் காதலி

முகநூல் காதல்: இதயத்தில் குத்திய காதலன் தூக்கிட்டு தற்கொலை... உயிருக்கு போராடும் காதலி
  • Share this:
வேலூரில் ஆசிரியையை 9 இடத்தில் கத்தியால் குத்திவிட்டு, அவரது முகநூல் காதலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

முகநூலில் ஏற்பட்ட பழக்கத்தில் காதலராக மாறிய இளைஞரை வீட்டுக்கே அழைத்து வந்து தங்க வைத்திருந்த ஆசிரியையை, 9 இடங்களில் கத்தியால் குத்திவிட்டு அந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். ஆசிரியையை அவருடைய காதலர் கத்தியால் குத்தியது ஏன்? அவர்களுக்குள் என்ன நடந்தது?

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த அம்முண்டி பகுதியில் அமைந்துள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பணயாற்றியவர் லிடியா மேரி. அவருடைய மகள் 28 வயதான ஜாக்லின்.


லிடியா மேரி இறந்ததால் அவருடைய மகன் ஜானுக்கு சர்க்கரை ஆலையில் வேலை கிடைத்தது. தாய்-தந்தையை இழந்த நிலையில், அண்ணனுடன் தங்கியிருந்த ஜாக்லின் அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

தனிமையில் இருந்த அவருக்கு பள்ளி சென்ற நேரம் போக, மீதமுள்ள நேரத்தில் முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மூழ்கி கிடந்தார்.

அப்போது முகநூலில் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த 33 வயதான விஜயசங்கர் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. 6 மாத பழக்கத்திற்குள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர்.

வேலை எதுவும் இல்லாத விஜயசங்கர், ஜாக்லினை பார்ப்பதற்காக அடிக்கடி வேலூருக்கு வந்து சென்றுள்ளார். இந்நிலையில், கடந்த 2 வாரத்திற்கு முன்னர் வேலூருக்கு வந்த விஜயசங்கர், அங்குள்ள தனியார் விடுதியில் அறை எடுத்தார்.

அங்கு ஜாக்லின் உடன் 10 நாட்கள் தங்கினார். இந்நிலையில் விடுதி உரிமையாளருக்கு சந்தேகம் ஏற்பட்டு 5 நாட்களுக்கு முன்னர் அவர்களை காலி செய்யுமாறு கூறியுள்ளார். இதை அடுத்து அண்ணனிடம் தனது காதலைக் கூறி, அனுமதி பெற்று விஜயசங்கரை தனது வீட்டுக்கே அழைத்துச் சென்றுள்ளார் ஜாக்லின்.

சனிக்கிழமை மாலை வெளியில் சென்றிருந்த ஜாக்லினுக்கு வீட்டிலிருந்த விஜயசங்கர் போன் செய்துள்ளார். நீண்ட நேரமாக போனை எடுக்காமல், அவர் வேறு யாருடனோ போனில் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

சந்தேகப்பட்டு வீட்டுக்கு திரும்பிய ஜாக்லினிடம் கேட்டு விஜயசங்கர் தகராறில் ஈடுபட்டுள்ளார். இரவு முழுவதும் இருவருக்கும் இடையிலான தகராறு நீடித்துள்ளது.

இதில் ஆத்திரமடைந்த விஜயசங்கர் நள்ளிரவில் அங்கிருந்த கத்தியை எடுத்து ஜாக்லின் கழுத்து மார்பு உள்ளிட்ட ஒன்பது இடங்களில் குத்தி உள்ளார்.

இதில் ஜாக்லின் அலறியுள்ளார். ஜாக்லினின் அலறல் சத்தம் கேட்டு வெளியில் உறங்கிக்கொண்டிருந்த அவரது அண்ணன் ஜான், அறை உள்ளே போய் விஜயசங்கரை தடுத்துள்ளார்.

பின்னர் தங்கையை மீட்டு வெளியே அழைத்து வந்த அவர், விஜயசங்கரை அறைக்குள்ளேயே போட்டு கதவை சாத்தியுள்ளார்.

ரத்த வெள்ளத்தில் இருந்த ஜாக்லினை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். ஆபத்தான நிலையில், ஜாக்லின் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

இந்த சம்பவம் தொடர்பாக அக்கம்பக்கத்தினர் திருவலம் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர் . தகவலறிந்து சென்ற போலீசார், மூடியிருந்த வீட்டின் அறை கதவை திறக்க முயன்றனர். அப்போது கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது.

அதனையடுத்து போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது விஜயசங்கர் தூக்கில் தொங்கியவாறு இறந்து கிடந்தார். பின்னர் உடலை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

First published: October 14, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்