'நிலத்தைக் காணவில்லை' சென்னைக்கு திரும்பியவருக்கு அதிர்ச்சி - மோசடி நபர் கைது!

'நிலத்தைக் காணவில்லை' சென்னைக்கு திரும்பியவருக்கு அதிர்ச்சி - மோசடி நபர் கைது!

மாதிரிப் படம்

தொழிலுக்காக வெளியூர் சென்ற ஒருவரின் நிலத்தை, மோசடியாக ஆவணம் தயாரித்து நிலத்தை அபகரித்ததுடன், அதில் 6 மாடி கட்டடத்தையும் ஒருவர் எழுப்பியது மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

  • News18
  • Last Updated :
  • Share this:
சென்னை மடிப்பாக்கத்தில் மற்றொருவரின் நிலத்தை மோசடியாக பதிவு செய்து 6 மாடி கட்டடம் கட்டிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த நாகலிங்கமூர்த்தி என்பவர் 1988 ஆம் ஆண்டு மடிப்பாக்கத்தில் 2,400 சதுர அடி பரப்பளவிலான நிலம் ஒன்றை வாங்கி வீடு கட்டியுள்ளார். பின்னர், தொழில் காரணமாக குடும்பத்துடன் பெங்களுரு சென்ற அவர், அங்கேயே நிரந்தரமாக தங்கிவிட்டார். இடையில் மனைவியும் இறந்ததால் அவர் சென்னை பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை. இதனால், மடிப்பாக்கத்தில் இருந்த அவருடைய வீடு, பராமரிப்பின்றி கிடந்துள்ளது.

இதனையறிந்த, மலையம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜமன்னார் என்பவர் நிலத்தை மோசடியாக தன் பெயரில் மாற்ற முடிவு செய்துள்ளார். பின்னர், அதற்குரிய நபர்களை அணுகி போலியாக ஆவணங்களை தயார் செய்து நிலத்தை தன் பெயரில் மாற்றியதுடன் அந்த இடத்தில் 6 மாடி கொண்ட ஒரு பிரம்மாண்ட கட்டடத்தையும் எழுப்பியுள்ளார். அண்மையில் சென்னை திரும்பிய நாகலிங்க மூர்த்தி, தனக்கு சொந்தமான இடத்துக்கு சென்றுள்ளார். அங்கு, இடமும், வீடும் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். தன்னுடய இடத்தில் வேறொருவர் 6 மாடி கட்டடம் கட்டியிருப்பதைக் கண்டுபிடித்த அவர், இது குறித்து காவல்நிலையத்தில் நில அபகரிப்பு புகார் அளித்தார்.

நாகலிங்க மூர்த்தியின் புகாரை பதிவு செய்துகொண்ட காவல்துறையினர், நில அபகரிப்பு புகார் குறித்து விசாரணையை தொடங்கினர். அதில், மலையம்பாக்கம் ராஜமன்னார் மோசடியாக நிலத்தை தன் பெயரில் மாற்றி 6 மாடி கட்டடம் கட்டியதை கண்டுபிடித்தனர். இதனையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர், ராஜமன்னாரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த நில அபகரிப்புக்கு உடந்தையாக செயல்பட்ட காதர்மொய்தீன், மோகன், ராமையா உள்ளிட்ட 3 பேரும் கைது செய்யப்பட்டனர். 

Also read... மோசடி வழக்கில் இயக்குனர் தாக்கல் செய்த முன் ஜாமின் வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு!

அவர்கள் மீதும் நில அபகரிப்பு மற்றும் முறைகேடாக ஆவணங்களை தயார் செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோன்ற மற்றொரு நில அபகரிப்பு புகாரில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த அண்ணன், தம்பி கைது செய்யப்பட்டுள்ளனர். வெங்கடேசன் , முருகன் ஆகியோர் இணைந்து திருநின்றவூரில் உள்ள 2.5 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை அபகரித்துள்ளனர். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரில் அவர்கள் இருவரையும் கைது செய்த காவல்துறையினர் தலைமறைவாக உள்ள மற்றொரு சகோதரர் நாகேந்திரன் என்பவரை தேடி வருகின்றனர்.

தொழிலுக்காக வெளியூர் சென்ற ஒருவரின் நிலத்தை, மோசடியாக ஆவணம் தயாரித்து நிலத்தை அபகரித்ததுடன், அதில் 6 மாடி கட்டடத்தையும் ஒருவர் எழுப்பியது மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: