சுப்பிரமணியபுரம் படத்தை போல கரூரில் நடந்த ஆணவப் படுகொலை.. (வீடியோ)

Youtube Video

கரூரில், தங்கள் வீட்டுப் பெண்ணை காதலித்த வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை பட்டப்பகலில் காவல்நிலையம் அருகில் வைத்து பெண்ணின் உறவினர்கள் கத்தியால் வெட்டிப் படுகொலை செய்துள்ளனர். ஆணவப் படுகொலை செய்த குற்றவாளிகள் சிக்கியது எப்படி?

  • Share this:
    கரூர் காமராஜபுரம் சாலையைச் சேர்ந்தவர் 22 வயதான ஹரிஹரன்; இவர் அதே பகுதியில் முடி திருத்தகம் நடத்தி வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை கடந்த 2 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளார். காதலி தனியார் கல்லுாரியில் ஆங்கிலப் பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். ஹரிஹரன் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால், பெண்ணின் குடும்பத்தினர் காதலுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    ஆனால் பெண்ணோ ஹரிஹரனைத் தான் திருமணம் செய்யப் போவதாக உறுதியாகக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது குடும்பத்தினர் ஹரிஹரனைக் கொலை செய்யத் திட்டம் தீட்டியுள்ளனர்.

    அதன்படி ஹரிஹரனை புதன்கிழமை பிற்பகலில், கரூர் பசுபதீஸ்வரர் கோயில் முன்பு வரும்படி அழைக்க வேண்டும் என பெண்ணை மிரட்டிப் பேசச் சொல்லியுள்ளனர். காதலியும் அவ்வாறே ஹரிஹரனை அழைத்துள்ளார். அதை நம்பிய ஹரிஹரனும் புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு பசுபதீஸ்வரர் கோயில் முன்பு வந்துள்ளார்.

    அங்கு நின்றிருந்த காதலியிடம் அவர் அருகில் சென்று பேச முயன்றபோது மறைந்திருந்த காதலியின் உறவினர்கள் சுற்றிச் சூழ்ந்து ஹரிஹரனைப் பிடித்துக் கொண்டனர். பின்பு அங்கிருந்து தரதரவென இழுத்து வந்து நகராட்சி அலுவலகம் முன்பு கல்லால் அடித்துத் தாக்கியுள்ளனர். ஒரு கட்டத்தில் பெண்ணின் பெரியப்பா 50 வயதான சங்கர் என்பவர் கத்தியால் வலது மார்பில் குத்தவே அந்தக் கத்தி மார்பில் ஊடுருவி முதுகில் வெளிவந்துள்ளது.

    பின்னர் முதுகில் கத்தியால் வெட்டியுள்ளனர். அவரை அடித்து உதைத்து சித்ரவதை செய்துள்ளனர். சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில்தான் கரூர் நகர காவல்நிலையமும் உள்ளது. கடும் தாக்குதலுக்குப் பின் மயங்கி விழுந்த ஹரிஹரனை பெண்ணின் உறவினர்களே, காரில் ஏற்றி கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஹரிஹரன் உயிரிழந்தார்.

    இது குறித்து கொலை வழக்குப் பதிவு செய்துள்ள கரூர் போலீசார், பெண்ணின் பெரியப்பா சங்கர், தாய்மாமன்கள் கார்த்திகேயன், வெள்ளைச்சாமி ஆகிய 3 பேரைக் கைது செய்துள்ளனர்.

    அவர்கள் மீது கொலை உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பெண்ணின் தந்தை வேலன், சித்தப்பா முத்து ஆகிய இருவரும் தலைமறைவாகியுள்ளனர்.  போலீசார் அவர்களைத் தேடி வருகின்றனர்.

    மேலும் படிக்க...பொள்ளாச்சி விவகாரத்தில் யார் தவறிழைத்திருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    கரூரில் காதல் விவகாரத்தில் வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் பட்டப்பகலில் காவல்நிலையம் அருகே படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: