திருமணம் செய்யும்படி நச்சரிப்பு.. சாதியை காரணம் காட்டி காதலியை கொலை செய்த காதலன்

Youtube Video

திண்டுக்கல் மாவட்டத்தில், தனது காதலி திருமணம் செய்யும்படி நச்சரிக்க, அவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் முடியாது என மறுத்த காதலன், கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். ஆனால் தங்கள் மகள் காதலிக்கவே இல்லை; பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்னை தான் காரணம் என குற்றம்சாட்டியுள்ளனர். நடந்தது என்ன?

 • Share this:


  6 மாதங்களாகக் காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்யும்படி காதலி நச்சரித்ததால், ஆத்திரமடைந்த காதலன் தங்கதுரை அவரைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். 

  திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகா கள்ளிமந்தையம் அருகே பூலாம்பட்டியில் ராயல் கிளாசிக் போலோ பனியன் கம்பெனி உள்ளது. அதன் பின்புறம் உள்ள முள்புதரில் செவ்வாய்க்கிழமை மாலையில் ஒரு பெண் உடல் அழுகிய நிலையில் கிடந்தது.

  கள்ளிமந்தையம் போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தபோது பெண்ணின் சடலம் அருகே கிடந்த அடையாள அட்டையை வைத்து அவர், 21 வயதான ஜெயஸ்ரீ என்பதும் அவர், பனியன் கம்பெனி ஊழியர் என்பதும் தெரியவந்தது. தொடர் விசாரணையில் ஜெயஸ்ரீ, வேடசந்தூர் அருகே உள்ள தென்னம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

  ஜனவரி 1ஆம் தேதி அன்று மாலை பணிக்குச் சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. அதனால் ஜெயஸ்ரீ குடும்பத்தினர் ஜனவரி 3ம் தேதி போலீசாரிடம் புகாரளித்தனர். இந்த நிலையில் தான் ஜெயஸ்ரீயின் சடலம் முள்புதரில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.

  ஜெயஸ்ரீ பெற்றோர் அளித்த தகவலின் படி, ஜெயஸ்ரீயின் உடன் பணிபுரிந்த 25 வயதான தங்கதுரை என்ற இளைஞரைப் போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர் தான் ஜெயஸ்ரீயைக் காதலித்தவர் என்று விசாரணையில் தெரியவந்தது; எனினும் போலீசார் அவரிடம் முழுமையாக விசாரிக்காமல் விடுவித்து விட்டனர்.

  இந்த நிலையில் தங்கதுரை தான் குற்றவாளி என்றும் அவரை உடனடியாகக் கைது செய்தால் தான் சடலத்தை வாங்குவோம் என்றும் கூறி பெண் உறவினர்கள் வெள்ளிக்கிழமை மாலையில் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனை முன்பு தாராபுரம் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் மறியல் கை விடப்பட்டது

  இதையடுத்து, போலீசார் ஜெயஸ்ரீயின் செல்போனை ஆய்வு செய்தபோது ஜனவரி 1ம் தேதி அன்று தங்கதுரை செல்போன் எண்ணில் இருந்து 20க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்தது தெரியவந்தது. அதன் அடிப்படையில் போலீசார் தங்கதுரையைப் பிடித்து தீவிரமாக விசாரித்தபோதுதான், அவர் தான் ஜெயஸ்ரீயைக் கொலை செய்தார் என்பது தெரியவந்தது

  பழனி அருகே உள்ள கோம்பைபட்டி கிராமம் தான் தங்கதுரையின் சொந்த ஊர். அங்கிருந்து வேடசந்தூர் தனியார் நூற்பாலையில் தங்கிப் பணியாற்றி வந்தார். அதே நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஜெயஸ்ரீக்கும் தங்கதுரைக்கும் காதல் ஏற்பட்டுள்ளது

  இருவரும் விடுமுறை நாட்களில் தனியாக சந்தித்து தங்கள் காதலை வளர்த்து வந்துள்ளனர். கடந்த 6 மாதங்களாக காதல் வளர்த்த நிலையில், ஜெயஸ்ரீ தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி தங்கதுரையை வலியுறுத்தி வந்துள்ளார்.

  ஜெயஸ்ரீ பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் தனது பெற்றோர் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என தங்கதுரை மறுப்பு தெரிவித்துள்ளார். ஒரு கட்டத்தில், ஜெயஸ்ரீயின் பெற்றோரை செல்போனில் தொடர்பு கொண்டு, ஜெயஸ்ரீ நச்சரிப்பதாக புகார் தெரிவித்துள்ளர்; ஜெயஸ்ரீயின் பெற்றோரும் மகளைக் கண்டித்துள்ளனர்.

  இதற்கிடையே இருவருக்கும் அவ்வப்போது திருமணம் தொடர்பாக வாக்குவாதம் நடந்துள்ளது. ஜனவரி 1ம் தேதி மாலை, தனது நண்பன் ஜெகநாதன் என்பவரின் இருசக்கர வாகனத்தில் நண்பன், காதலி ஆகியோருடன் பனியன் கம்பெனி பின்புறம் உள்ள புதர் போன்ற பகுதிக்கு சென்றுள்ளார் தங்கதுரை

  அங்கு காதலர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் நடந்துள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த தங்கதுரை, காதலி ஜெயஸ்ரீயைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர் சடலம் வெளியில் தெரியாமல் இருப்பதற்காக இருவரும் சேர்ந்து முள்புதரில் சடலத்தை இழுத்துப் போட்டு மறைத்து விட்டு தங்கள் அறைக்கு சென்று விட்டனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது

  தங்கதுரை மற்றும் ஜெகநாதன் மீது, கொலை மற்றும் பட்டியலினத்தோர் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

  இதையடுத்து தங்கதுரை மற்றும் ஜெகநாதனைக் கைது செய்த போலீசார் ஒட்டன்சத்திரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் ஜெயஸ்ரீக்கும் மேற்பார்வையாளராகப் பணியாற்றிய தங்கதுரைக்கும் இடையே வேலை தொடர்பாக பிரச்னைகள் இருந்ததாகத் தெரிவித்துள்ளார் ஜெயஸ்ரீயின் தாய்

  தங்கதுரையுடன் வேலையில் ஏற்பட்ட பிரச்னையால், வேலைக்கு சென்றபடியே பகுதிநேரமாகப் படிக்க தீர்மானித்துள்ளார் ஜெயஸ்ரீ, அதனால் 15 நாட்களுக்கு முன்பு பழனி அரசுக் கல்லுாரியில் சேர்ந்ததாகக் கூறுகிறார் தாய். அதேநேரம் ஜெயஸ்ரீ, தங்கதுரையைக் காதலிக்கவில்லை என்ற அதிர்ச்சித் தகவலையும் வெளியிட்டுள்ளார்.

  ஜெயஸ்ரீ மரண விவகாரத்தில், போலீசார் முழுமையான விசாரணை நடத்தினால்தான் கொலையின் உண்மையான பின்னணி வெளிச்சத்திற்கு வரும்., இல்லையெனில் அது பல யூகக் கதைகளுக்குத் தான் வழிவகுக்கும். போலீசார் முழுமையான விசாரணை நடத்துவார்களா?  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: