ஒருதலை காதல் விவகாரம்: பச்சிளம் குழந்தையை வெட்டிக் கொன்ற கொடூரன் - நெல்லையில் பயங்கரம்

Youtube Video

நெல்லை மாவட்டத்தில், ஒருதலைக் காதல் விவகாரத்தில், 8 மாதக் குழந்தையை அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்திருக்கிறார் வழக்கறிஞர். குழந்தையைக் கொலை செய்யும் அளவுக்கு காதல் விவகாரத்தில் நடந்தது என்ன?

  • Share this:
    செவிலியரான இளம்பெண்ணை ஒருதலையாகக் காதலித்த சிவசங்கரன், ஆத்திரத்தில் அவரது சகோதரியின் 8 மாதக் குழந்தையை வெட்டிக் கொலை செய்திருக்கிறார். இளம்பெண்ணின் தாயும் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார். 

    திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி அருகே மகிழடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ரசூல் ராஜ் - எப்சிபாய் தம்பதி. ரசூல் ராஜ் அப்பகுதியில் மதபோதகராகப் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு நான்கு மகள்கள் உள்ளனர். அவர்களில் ஒரு மகளான ஏஞ்சலின் என்பவர், கணவனோடு வெளிநாட்டில் பணிபுரிகிறார். அதனால் அவர் தனது 8 மாத பெண் குழந்தையான அட்சயா குயினை, பெற்றோரிடம் விட்டுச் சென்றுள்ளார்.

    ரசூல்ராஜின் கடைசி மகள் ஏஞ்சல் பிளஸ்சி. இவர் செவிலி படிப்பு முடித்து கோவையில் பணியாற்றி வருகிறார். இவரைப் பணகுடி அருகே உள்ள ரோஸ்மியாபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவசங்கரன் என்பவர் ஒருதலையாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு சிவசங்கரன், ரசூல்ராஜ் வீட்டிற்கு சென்று ஏஞ்சல் பிளஸ்சியை பெண் கேட்டுள்ளார். ஆனால் சிவசங்கரன் வேறு மதம் என்பதால், பெண் கொடுக்க ரசூல்ராஜ் மறுத்துள்ளார்.

    மேலும்  படிக்க...நீலகிரியில் பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய வீடியோ வைரல்... கைதான இளைஞர்...

    இந்த நிலையில் சனிக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில், ரசூல்ராஜ் நடைப்பயிற்சிக்கு வெளியே சென்று விட்டார். காலை 6 மணிக்கு கையில் பெட்ரோல் கேன் மற்றும் அரிவாளுடன் ரசூல்ராஜ் வீட்டிற்கு சென்றுள்ளார் சிவசங்கரன். அங்கு எப்சிபாய், 3வது மகள் ஆகியோர் இருந்தனர். எப்சிபாய் தனது கையில் 8 மாதப் பெண் குழந்தையை வைத்திருந்தார்.

    எப்சிபாயிடம் அவரது கடைசி மகள் ஏஞ்சலை திருமணம் செய்து தரும்படி கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார் சிவசங்கரன். வாக்குவாதம் முற்றிய நிலையில், எப்சிபாயை அரிவாளால் வெட்ட முயன்றுள்ளார். ஆனால் கையில் இருந்த பச்சிளம் பெண் குழந்தை மீது அரிவாள் வெட்டு விழுந்துள்ளது; சிறிது நேரத்தில் குழந்தை இறந்து விட்டது. அப்போதும் சிவசங்கரன் விடாமல் எப்சிபாயை சரமாரியாக வெட்டியுள்ளார்.

    மேலும் படிக்க... பெண் காவலர் தற்கொலை முயற்சி.. தந்தை பகீர் புகார்..

    நடந்த கொடூரங்களைப் பார்த்த எப்சிபாயின் 3வது மகள் அறைக்குள் ஓடிச் சென்று கதவை உள்ளே பூட்டிக் கொண்டுள்ளார். அந்த நேரம் பார்த்து நடைப்பயிற்சிக்கு வெளியில் சென்றிருந்த ரசூல் ராஜ் உள்ளே வரவே, ரத்த வெள்ளத்தில் மனைவியும் பேத்தியும் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

    ஆத்திரமடைந்த ரசூல்ராஜ் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து சிவசங்கரனை தாக்க முயன்றார். பதிலுக்கு அவரை சிவசங்கரன் தாக்கியுள்ளார். இதில் ரசூல்ராஜின் கையிலும், சிவசங்கரனின் தலையிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன.

    தகவல் அறிந்த திருக்குறுங்குடி போலீசார் உடனடியாக விரைந்து சென்று சிவசங்கரனை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். எப்சிபாய் மற்றும் ரசூல் ராஜை மீட்டு நாகர்கோவிலில் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சிவசங்கரன் மீது கொலை வழக்குப் பதிவு செய்துள்ள திருக்குறுங்குடி போலீசார், சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.





    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: