மயக்க ஊசி போட்டு சென்னையில் போலீசாரிடம் பணம் பறித்த நபர் ஆந்திராவில் கைது

மாதிரிப்படம்

செல்போன் மற்றும் ‘கூகுள் பே’ மூலம் ரூ.1 லட்சம் பணத்தை பறித்து சென்றுள்ளார்.

 • Share this:
  சென்னையில் உளவுப்பிரிவு போலீசாருக்கு மயக்க ஊசி போட்டு ரூ.1 லட்சம் பணம் திருடிய வழக்கில் முக்கிய குற்றவாளி ஆந்திராவில் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளன.

  சென்னை சூளைமேடு பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் 45 வயதுடைய ரவி. உளவுப்பிரிவு போலீஸ்காரரான இவர், கடந்த 28ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் போலீஸ் உதவி ஆணையரை சந்தித்து பரபரப்பு புகார் மனு அளித்திருந்தார். அந்த புகார் மனுவில், ‘என்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் இறக்கிவிடுவதாக கூறி கடந்த 28ஆம் தேதி எனது பகுதியை சேர்ந்த அஜய்விக்கி என்ற 25 வயது வாலிபர் காரில் அழைத்து சென்றார்.

  அப்போது, அவர் என்னிடம், ‘நான் அடையாறில் புதிதாக ஒரு கடை திறந்து உள்ளேன். நீங்கள் பார்த்துவிட்டு செல்லுங்கள்’ என்று அழைத்தார். நானும் சென்றேன். வழியில் 2 பேர் காரின் பின் சீட்டில் ஏறினார்கள். அவர்கள் எனக்கு மயக்க ஊசி செலுத்தி என்னுடைய செல்போன் மற்றும் ‘கூகுள் பே’ மூலம் ரூ.1 லட்சம் பணத்தை பறித்து சென்றுவிட்டனர்’ என்று கூறி இருந்தார்.

  உளவுப்பிரிவு காவல்துறையினரையே கடத்தி பணம் பறிக்கப்பட்ட இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து சூளைமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து, குற்றவாளிகளைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் விசாரணையில் ரவியை அழைத்து சென்ற கார் அதே பகுதியை சேர்ந்த லோகேஷ் என்பவருக்கு சொந்தமானது என்பதும், இந்த வழக்கில் அவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

  அதனைத் தொடர்நது, ஓசூரில் பதுங்கி இருந்த லோகேஷ் தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, முக்கிய குற்றவாளியான அஜய்விக்கி ஆந்திராவில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் ஆந்திரா சென்று அவரை அதிரடியாக கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். விசாரணை வளையத்தில் வைக்கப்பட்டிருந்த லோகேசும் கைது செய்யப்பட்டார்.

  கைது செய்யப்பட்ட அஜய் விக்கியிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், போலீஸ்காரர் ரவியும், அவரும் உடன்பிறவாத சகோதரர்கள் போல் நெருங்கி பழகி வந்துள்ளனர். இந்த பழக்கத்தை சாதகமாக வைத்து அவரை ஏமாற்றி அழைத்து சென்று பணம் பறித்தது தெரியவந்தது. அத்துடன் இந்த வழக்கில் பெண்கள் தொடர்பான பிரச்சினை இருக்கலாம் என்று சந்தேகமும் எழுந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

  Must Read : கல்லூரி தொடங்கிய முதல் நாளிலேயே ‘ரூட்டு கெத்து’: மாணவர்கள் மீது வழக்குப் பதிவு!

  இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய நிஷாந்த் என்பவர் தலைமறைவாகியுள்ளார். அவரையும் தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Suresh V
  First published: