லாக்கை உடைக்காமல் ஸ்ப்ளெண்டர் பைக்குகளை குறிவைத்து திருடியவர் கைது

Youtube Video

சென்னையில் ஸ்ப்ளெண்டர் பைக்குகளை மட்டும் குறிவைத்து திருடும் திருடன் போலீசாரிடம் சிக்கியுள்ளார். 37 பைக்குகள் மீட்கப்பட்டுள்ளன. திருட்டு பைக்கை வாங்குவோரிடம் தவணை முறையில் பணத்தை வாங்கிக் கொண்டும் விற்றுள்ளார். 

 • Share this:
  சென்னை கோயம்பேடு சுற்றுவட்டாரங்களில் ஸ்ப்ளெண்டர் பைக்குகளை மட்டும் குறிவைத்து திருடி, விற்று வந்த முக்கிய குற்றவாளி எலி என்ற சரத்பாபு சிக்கியுள்ளார். கடந்த வாரம் சிக்கிய யுவராஜின் முக்கிய கூட்டாளியும் முதன்மைக் குற்றவாளியுமான எலி சிக்கியது எப்படி?

  சென்னை நெற்குன்றத்தில் கடந்த வாரம் ஒரு ஸ்ப்ளெண்டர் பைக் திருடப்பட்டது. சிசிடிவியில் மர்ம நபர் ஒருவர் அந்த பைக்கை திருடிச் சென்றது பதிவாகியிருந்தது. முதற்கட்ட விசாரணையில்,  பைக்கைத் திருடியவர் குடியாத்தத்தைச் சேர்ந்த 32 வயதான எலி என்ற சரத்பாபு என்பது தெரியவந்தது. தொடர்ந்து திருட்டு பைக் வாங்கும் வாடிக்கையாளர் போல் பேசி வரவழைத்த போலீசார் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.

  கடந்த வாரம் 25 ஸ்ப்ளண்டர் பைக்குகளைத் திருடி கோயம்பேட்டில் சிக்கிய யுவராஜின் கூட்டாளி என்பதும் யுவராஜுக்குத் தொழில் கற்றுக் கொடுத்த குருதான் இந்த எலி என்ற சரத்பாபு என்பதும் தெரியவந்தது. குடியாத்தத்தில், டெய்லர் வேலை, கார் ஓட்டுநர் வேலை பார்த்து வந்த சரத்பாபு குடியாத்தத்தில், 2 மனைவியர், 4 குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

  சீடன் யுவராஜுடன் சேர்ந்து குடியாத்தத்தில் இருந்து மாலை 7 மணிக்குப் பேருந்தில் புறப்பட்டு சென்னைப் புறநகர்ப் பகுதிகள் வந்து பைக்குகளைத் திருடி விட்டுத் தப்பிப்பதுதான் சரத்பாபுவின் தொழில் பாணிமொத்தம் நான்கே சாவிகளை வைத்துள்ள சரத்பாபு, லாக்கை உடைக்காமல் சாவி மூலமாகவே பைக்கை திருடுவதில் பலே கில்லாடி.

  திருடிய பைக்குகளை வாடிக்கையாளர்களிடம் 10,000 ரூபாய் முதல் 15,000 ரூபாய் வரை பதிவெண் பலகை இல்லாமல் போலிச் சாவியுடன் விற்று விடுவார். வாடிக்கையாளர்களிடம் மொத்தப் பணம் இல்லை என்றால், மாதா மாதம் தவணை முறையில் தரும்படியும் கூறி திருட்டு பைக்குகளை விற்றுள்ளார் சரத்பாபு. மொத்தமாக பணம் செலுத்தி முடித்த உடன் பைக்கிற்கான ஆவணம் தருவதாக சொல்லுவார். ஆனால் கடைசிவரையில் கொடுக்க மாட்டார்.

  கொரோனா ஊரடங்கின் போது நுாற்றுக்கணக்கான பைக்குகளை சரத்பாபுவும், யுவராஜும் சேர்ந்து திருடியுள்ளனர். பைக்குகளைத் திருடிவிட்டு குடியாத்தத்தில் உள்ள தனது தோப்பு வீட்டில் சென்று சரத்பாபு பதுங்கிக் கொள்வார். போலீசார் தேடி வந்தால் வீட்டு வாசலில் உள்ள நாய் குரைக்கும் சத்தத்தை வைத்து அடையாளம் தெரிந்து தப்பியோடி விடுவார்.

  சரத்பாபு மீது, பூந்தமல்லலி, நசரத்பேட்டை, மாங்காடு, கோயம்பேடு, குடியாத்தம், பெங்களூரு உள்ளிட்ட பல காவல்நிலையங்களில் பைக், கார் திருடிய வழக்குகள் உள்ளன.

  மேலும் படிக்க... Bus Strike | மூன்றாவது நாளாக தொடரும் ஸ்டிரைக் - பேருந்து கிடைக்காமல் மக்கள் அவதி

  சரத்பாபு வாடிக்கையாளர்களிடம் விற்ற 37 ஸ்ப்ளெண்டர் பைக்குகளைப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அவற்றில் கர்நாடகாவில் இருந்து மீட்கப்பட்ட 2 புல்லட்டுகளும் அடங்கும். கடந்த 2018ம் ஆண்டு முதல் சரத்பாபுவையும் யுவராஜையும் தேடி வந்த போலீசார் அடுத்தடுத்து இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 62 பைக்குகளை மீட்டுள்ளனர்.

   



  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: