கட்டியிருந்த காவி வேட்டியை கழற்றிக்காட்டி ரயிலை நிறுத்திய ஜோதிடர் கைது!

news18
Updated: July 27, 2019, 10:30 AM IST
கட்டியிருந்த காவி வேட்டியை கழற்றிக்காட்டி ரயிலை நிறுத்திய ஜோதிடர் கைது!
கைதான ஜோதிடர்
news18
Updated: July 27, 2019, 10:30 AM IST
தூத்துக்குடியில் இருந்து மைசூரை நோக்கி சென்றுகொண்டிருந்த மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலை காவி வேட்டியை காட்டி நிறுத்திய ஜோதிடர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு மைசூரை நோக்கி புறப்பட்ட மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் இரவு திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே வந்து கொண்டிருந்த போது, தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த ஒரு நபர், திடீரென தான் அணிந்திருந்த காவி வேட்டியை கழற்றி ரயிலை நோக்கி காட்டினார்.

இதனால், ஏதோ ஆபத்து என்று நினைத்த ரயில் ஓட்டுநர் ரயிலை பாதி வழியில் நிறுத்தினார். பின்னர், காவி வேட்டியை காட்டிய நபரிடம் என்ன ஆனது என்று விசாரித்த போது, அவர் சரியான பதில் எதுவும் தெரிவிக்கவில்லை. இதனை அடுத்து, அதே ரயிலில் அந்த நபரை ஏற்றிக்கொண்டு, ரயில் ஓட்டுநர் ரயிலை மீண்டும் இயக்கினார்.


கரூர் மாவட்டம் வெள்ளியனை ரயில் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட அவரை, ரயில்வே போலீசார் விசாரித்தனர். அப்போது, அவர் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்த ஜோதிடர் வன்னிகுமார் என்பதும், நண்பர் ஒருவரின் அழைப்பின் பெயரில் எரியோடு சென்றதாக கூறினார்.

எரியோட்டில் சில மர்ம நபர்கள், வன்னிகுமாரை தாக்கி செல்போன், பணம் மற்றும் கார் ஆகியவற்றை பறித்ததாகவும், உயிரை காத்துக்கொள்ள ஓடி வரும் போது, என்ன செய்வதென்று தெரியாமல், வேட்டியை கழற்றிக்காட்டி ரயிலை நிறுத்தியதாகவும் விசாரணையில் தெரியவந்தது.

இதனை அடுத்து, விதிகளை மீறியதாக வன்னிகுமாரை கைது செய்து வழக்குப்பதிவு செய்த ரயில்வே போலீசார், பின்னர் அவரை ஜாமீனில் விடுவித்தனர்.

Loading...

First published: July 27, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...