சென்னையில் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
சென்னை ராயப்பேட்டை டாக்டர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் ராஜ் (45). இவர் ஆட்டோவுக்கு பாடி கட்டும் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் சில ஆண்டுகளாக குடிப்பழக்கத்திற்கு ஆளாகி, குடி பழக்கத்திலிருந்து விடுபட சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் சுபநிகழ்ச்சி ஒன்றுக்கு தனது மனைவி கலாவுடன் சென்றுவிட்டு திரும்பிய ராஜ் மது அருந்தியிருந்த நிலையில், மீண்டும் மனைவி கலாவுடன் வாக்குவாதம் செய்து பிரச்சினையில் ஈடுபட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து மனைவி கலா மற்றும் குடும்பத்தினர் இணைந்து ராயப்பேட்டை பகுதியில் உள்ள "Madras Care Centre" என்ற போதை மறுவாழ்வு மையத்துக்கு தகவல் தெரிவிக்க, மது போதைக்கு அடிமையான கணவரை போதை மறுவாழ்வு மையத்தினர் இரவில் அழைத்து சென்றனர்.
இந்த நிலையில் அதிகாலை 2 மணியளவில் ராஜ் உயிரிழந்துவிட்டதாக போதை மறுவாழ்வு மையத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில் அதிர்ச்சியடைந்த மனைவி கலா மற்றும் குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்தபோது ராஜின் உடலில் பலத்த ரத்த காயங்களுடன் பற்கள் உடைக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளார்.
Must Read : தொடங்கியது அக்னி நட்சத்திரம்... சுட்டெரிக்கும் வெயில் - வெப்பத்தை தணிக்குமா கோடை மழை!
இதைகண்டு, அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அண்ணா சாலை காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் ராஜுவின் உடலை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், மெட்ராஸ் கேர் சென்டர் என்ற போதை மறுவாழ்வு மையத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், உயிரிழந்த ராஜ் போதை மறுவாழ்வு மையத்தில் ஏற்கனவே சிகிச்சை பெற்றபோது நடைபெற்ற சித்திரவதைகள் குறித்து வெளியில் சென்று தகவல் சொன்னதால் திட்டமிட்டு அடித்து கொலை செய்ததாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
அதேபோல், ஏற்கனவே போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர்களை பணியில் அமர்த்தி மற்றவருக்கு சிகிச்சை அளித்ததும் தெரியவந்துள்ளது. அவர்களை வைத்து உயிரிழந்த ராஜை அடித்து கொலை செய்துள்ளனர்.
இந்த போதை மறுவாழ்வு மையத்தின் உரிமையாளர் லோகேஸ்வரி, அவரது கணவர் கார்த்திகேயன் ஆகிய இருவரும் சம்பவட இடத்திற்கு வராமல், வீடியோ கால் மூலம் மட்டுமே பேசி உயிரிழந்த அடிக்க சொன்னதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
போதை மறுவாழ்வு மையத்தை நடத்தி வந்த கார்த்திகேயன் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளதும், முன்னாள் மாநகராட்சி ஊழியர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. போதை மறுவாழ்வு மையத்தை அனுமதி இல்லாமல் நடத்தி, ராஜை கொலை செய்ய திட்டம் தீட்டிய லோகேஸ்வரி மற்றும் கார்த்திகேயன் இருவரையும் தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
போதை மறுவாழ்வு மையத்திற்கு சிகிச்சை பெற வந்தவர்களிடம் 20 ஆயிரம் கட்டணம் வசூல் செய்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதைத்தொடர்ந்து, அந்த போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 12 பேரும் காயங்களுடன் அரசு காப்பகத்தில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.