விடுதலைப் புலிகள் மீது தடை நீக்கம்: ஈழ தேசம் காலத்தின் கட்டாயம் - மக்கள் நீதி மய்யம் தேர்தல் அறிக்கை

கமல்ஹாசன்

ஈழ தேசம் உருவாக இந்தியா உதவ வேண்டும். இது காலத்தின் கட்டாயம் என்று மக்கள் நீதி மய்யம் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டார். அந்த அறிக்கையில், ‘குறைந்த விலையில் பொருள்களை வழங்க மக்கள் கேண்டின். அமைப்பு சாரா தொழிலாளர்களை ஒரு அமைப்பாக கொண்டுவர வேண்டும் என்பது எங்களது ஆசை. தற்சார்பு கிராமங்களை உருவாக்குவோம். சிறுகுறு தொழில்களுக்கான மூலப் பொருள்களை வழங்குவதற்கான ஏற்பாடு செய்யப்படும். ஒரு தலைநகர் செழிப்பாக இருந்தால் மட்டும் போதாது. மாநிலத்தின் அனைத்து நகரங்களும் வளர்ச்சி பெற நடவடிக்கை எடுக்கப்படும்’ என்பன உள்ளிட்ட திட்டங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. மேலும், ஈழத் தமிழர்கள் விவகாரம் தொடர்பாகவும் முக்கிய அறிவிப்புகள் அதில், தெரிவிக்கப்பட்டுள்ளன.

  அதில், ‘இந்தியாவைச் சுற்றியுள்ள எந்த சார்க் நாடுகளிலும் ஜனநாயக ஆட்சிமுறை நிர்வாகம் இல்லை. இனத்தை சார்ந்தோ, மதத்தைச் சார்ந்தோ, மொழியைச் சார்ந்தோ தான் அங்கு அரசுகள் இயங்கிவருகின்றன. எனவே அங்கு சிறுபான்மையினருக்கு வாழ உரிமையில்லை. அதனால்தான், இலங்கையில் 2 லட்சம் தமிழ் குடிமக்கள் கொல்லப்பட்டனர். இந்தியா பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்றால், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் மிகப்பெரிய மாற்றம் வேண்டும். இலங்கையில், மத்திய, மாநில ஆட்சிமுறை நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டு பெடரல் ஜனநாயக ஆட்சி முறை நிர்வாகம் அமைய இந்தியா உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

  இலங்கைத் தமிழர்களுக்கு நில உரிமை, காவல்துறை உரிமை, 13+ அரசியல் சாசன சட்ட மாற்றத்தை அமல்படுத்த ஆக்கப்பூர்வ நடவடிக்கையை உடனடியாக வெளியுறவுத்துறை மட்டத்தில், சர்வ தேச அழுத்தம் கொடுத்து, ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் நடவடிக்கை எடுக்கவேண்டும். இதைச் செய்ய முடியவில்லையென்றால், வங்கதேசம் என்படி பாகிஸ்தானிலிருந்து பிரிவதற்கு இந்தியா உதவியதோ, அதைப்போல, இலங்கையில் ஈழ தேசம் உருவாக இந்தியா அதிரடி நடவடிக்கை எடுக்கவேண்டும். இது காலத்தின் கட்டாயம். இலங்கை தமிழ் மக்கள் இந்தியாவில் அகதிகளாக, இலங்கையை விட கொடுமையான சூழலில் வாழும் நிலை மாற்றி அமைக்கப்பட்டு, அவர்களை இங்கு அடிமை மாதிரி நடத்தும் சூழல் நீக்கப்பட்டு, அவர்கள் வாழ்வாதாரம் மேம்பட கல்வி, மருத்துவம், சுத்தமான சுகாதாரமான குடியிருப்பு, வேலைவாய்ப்பு பெற, தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்.

  விடுதலைப் புலிகளே இல்லை என்றானபோது அதற்கு எதற்குத் தடை? அதைச்சொல்லியே அப்பாவி ஈழமக்களை பலிகடா ஆக்குவது இந்தியாவில் நடக்கிறது. எனவே, விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கவேண்டும். அதை நீக்க அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் எடுப்போம். அதை நீக்கிவிடால் இலங்கை தமிழ் அகதிகளாக இருக்கும் மக்களுக்கு இந்திய குடியுரிமை சாத்தியம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: