முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கடந்த 1991ம் ஆண்டு மே 21ம் தேதி
சென்னை அருகேயுள்ள ஸ்ரீபெரும்புதூரில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பேரறிவாளன் முருகன், நளினி, சாந்தன், ராபர்ட் பயாஸ் உள்ளிட்ட ஏழு பேர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டனர். இது தொடர்பான வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்டோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
இந்த வழக்கில் 31 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள பேரறிவாளன் தன்னை விடுதலை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. அப்போது, ஆளுநர் முடிவு எடுக்காமல் காலதாமதப்படுத்தியதற்கு முன்னமே உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், அரசியல் சாசனப்பிரிவு 142 கீழ் பேரறிவாளனை விடுதலை செய்ய உத்தரவிட்டு தீர்ப்பளித்தது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை அடுத்து தமிழக அரசியல் தலைவர்கள், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் உள்ளிட்ட பலர் உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை வரவேற்று உள்ளனர். பேரறிவாளன் இல்லத்தில் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தீர்ப்பு என் தாயின் நீண்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று பேரறிவாளன் நெகிழ்ச்சி உடன் தெரவித்தார்.
இந்நிலையில் இந்த தீர்ப்பு தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், ஆயுள்தண்டனையைக் காட்டிலும் நீண்ட 31 ஆண்டுகள். இப்போதேனும் முடிந்ததே என மகிழ்கிறோம். பேரறிவாளனுக்கான அநீதியில் அரசுகள் பந்து விளையாடிய சூழலில், நீதிமன்றமே முன்வந்து விடுதலை செய்திருக்கிறது. வென்றது நீதியும் அற்புதம் அன்னையின் போர்க்குணமும். என்றுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.