மாநில சுயாட்சிக்கு விரோதம்.. விவசாயிகளை தற்கால பண்ணை அடிமைகளாக்கும் சூழ்ச்சி - வேளாண் மசோதாக்களுக்கு கமல் ஹாசன் கடும் கண்டனம்

மாநில சுயாட்சியை முன்னிறுத்தி ஆட்சிக்கு வந்த அதிமுக இம்மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்து இருப்பது வேடிக்கையும், அதிர்ச்சியும் தருவதாக உள்ளது என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் விமர்சித்துள்ளார்.

மாநில சுயாட்சிக்கு விரோதம்.. விவசாயிகளை தற்கால பண்ணை அடிமைகளாக்கும் சூழ்ச்சி - வேளாண் மசோதாக்களுக்கு கமல் ஹாசன் கடும் கண்டனம்
மநீம தலைவர் கமல் ஹாசன்.
  • News18 Tamil
  • Last Updated: September 27, 2020, 10:48 PM IST
  • Share this:
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "கொரோனா காலத்தில் இந்திய உள்நாட்டு மொத்த உற்பத்தி(GDP) உலகில் எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு -23.9% சுருங்கிப் போனது. ஆனால் இந்த வீழ்ச்சியிலும் வீழாமல், வளர்ச்சி சதவிதத்தை பதிவு செய்தது நம் தேசத்தின் முதுகெலும்பான விவசாயத் துறை மட்டுமே. அந்த விவசாயிகளின் நலன் காப்பதே நம் கடமை. அப்படியிருக்க, மத்திய அரசு விவசாயிகளின் உற்பத்தி, வர்த்தகம் மற்றும் பாதுகாப்பை முன்னிறுத்தி கடந்த ஜூன் மாதம் 5ஆம் தேதியன்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மூன்று மசோதாக்களை கொண்டு வந்தது. அதைத் தொடர்ந்து அந்த மூன்று மசோதாக்களும் மாநிலங்கவையில் நடப்புக் கூட்டத்தொடரில் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அரசின் இந்த மூன்று வேளாண் மசோதாக்கள், சிறு குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் என்கின்ற கவலை விவசாயிகள் மத்தியிலும் எழுந்துள்ளது. வளர்ச்சியை வரவேற்பதில் என்றுமே முதல் நபராக நான் நிற்பேன். ஆனாலும், அந்த வளர்ச்சி விவசாயிகளின் நலனை காவு கொடுக்காமல் இருக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.

மக்கள் நீதி மய்யம் இந்த சட்டங்களின் ஷரத்துக்களை ஆராயும்போது:


1. அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020, (Essential Commodities (Amendment) Act 2020. இச்சட்டத்தின்படி தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், சமையல் எண்ணெய், வெங்காயம் போன்றவை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படும். இதனால் விவாசாயிகள் தானியங்களை சேமித்து வைக்கமுடியும், எனவே கூடுதல் விலை கிடைக்கும் என்று கூறுகிறது அரசு.

ஆனால் நடைமுறையில், பெரும் வணிக முதலாளிகளே இவற்றை வாங்கி பதுக்கி வைத்துக் கொள்கின்றனர். இதன் மூலம் பெரும் நிறுவனங்கள், செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளை லாபம் ஈட்டவே இந்த மசோதா வழிவகுக்கும்.

2. விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்ட ம் 2020, ( Farming Produce Trade and Commerce (Promotion and Facilitation) Act 2020. மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல் சட்டத்தின் மூலம், யார் வேண்டுமானாலும் இந்தியாவின் எந்தப் பகுதியில் இருந்தாலும் விவசாய விளை பொருட்களை வாங்கவும் விற்கவும் முடியும் என்பதால் மாநில அரசாங்கத்திற்கு வரி வருவாய் குறைவதோடு, மாநிலங்களுக்கு இதன் மீதான அதிகாரங்கள் முற்றிலுமாக பறிக்கப்படுகின்றன.விவசாயிகளுக்கு கிடைத்து வந்த குறைந்தபட்ச ஆதார விலையையே கேள்விக்குறியாக்கியுள்ளது இந்த மசோதா. பொதுவாக விவசாயம் என்பது மாநில பட்டியலின் அதிகாரத்திற்கு உட்பட்டது. இந்த மசோதா மாநில சுயாட்சிக்கு விரோதமாக இருப்பதுடன், கார்ப்பரேட்டுகளை புதிய
பண்ணையார்களாகவும், விவசாயிகளை தற்கால பண்ணை அடிமைகளாக்கும் சூழ்ச்சியே!

Also read: 5 மணி நேரத்தில் 10 லட்சம் ஃபாலோயர்ஸ் - இன்ஸ்டாகிராமில் கின்னஸ் சாதனை படைத்த இயற்கை ஆர்வலர்இவற்றால், கள்ளச்சந்தை பெருகுவதோடு, உணவுப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்படும். தவிர இம்மசோதாக்களால் தமிழக விவசாயிகளுக்கென்று ஏதேனும் நன்மை இருக்கின்றதா, இச்சட்டங்களால் நீண்ட நெடுநாட்களாக தீராமல் கிடக்கும், தமிழக விவசாயிகளின் பிரச்சினைகள் முடிவுக்கு வருமா என ஆராய்ந்தாலும் அதற்கும் விடை இல்லை. வறுமையில் விவசாயம் செய்ய வழி இல்லாமல், கடனால் அன்றாடம் இறந்து கொண்டு இருக்கும் விவசாயிகளுக்கு இந்த சட்டங்களால் மேலும் சுமை கூட்டுவது நியாயமா?

மத்திய அரசுக்கு விவசாயிகள் மீது இவ்வளவு அக்கறை என்றால், 2017 ஆம் ஆண்டு நம் தமிழக விவசாயிகள் தலைநகரில் பல நாட்களுக்கு போராடிய போது மவுனம் காத்தது ஏன்?
விவசாயக் கடன் ஒரு புறம், முறையான நீர் மேலாண்மை இன்றி வறட்சி மறுபுறம், புயல் வெள்ளம் போன்றவற்றில் இருந்து பாதுகாப்பற்ற நிலை இன்னொரு புறம் என முற்றிலும் முறையற்ற சூழலைத் தான் விவசாயிகளுக்கு இந்த அரசுகள் தொடர்ந்து பரிசாக தந்து கொண்டு இருக்கின்றனர்.

ஹைட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன் திட்டம், எட்டு வழிச் சாலை திட்டம் என ஏற்கனவே இருக்கும் திட்ட முனைப்புகள் மூலம் தமிழக விவசாயிகள் வயிற்றில் அடித்த தமிழக அரசு, விவசாயிகளின் கருத்துக்களை கேட்காமல் இந்தப் புதுச்சட்டத்திற்கு ஆதரவு அளித்திருப்பதன் மூலம் தமிழக விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் மிகப்பெரும் துரோகத்தைச் செய்திருக்கின்றது ஆளும் அதிமுக அரசு. எனவே தமிழக அரசு உடனடியாக தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வதுடன், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குள்ளாக்கும் இந்த சட்டங்களை உடனடியாகத் திரும்பப்பெற மத்திய அரசை வலியுறுத்தவேண்டும்.

நம் விவசாயிகள் நலன் காக்க, நமது மதிப்பிற்குரிய ஜனாதிபதி அவர்கள் இந்த சட்டங்களை பாராளுமன்றத்திற்கு திருப்பி அனுப்ப வேண்டும். விவசாயிகள் நலனை பாதுகாக்கும் சட்ட திருத்தங்களுடன், இந்த சட்டங்கள் நன்மை பயக்கும்
வகையில் மாற்றியமைக்கப்பட இதுவே வழிமுறை. தவறும் பட்சத்தில் உங்கள் ஆட்சியை விதைத்த மக்களுக்கு அதைக் குழி தோண்டி புதைக்கும் வலிமையும் உள்ளது என்பதை இவ்வரசு மறக்க வேண்டாம் என எச்சரிக்கிறது மக்கள் நீதி மய்யம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
First published: September 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading