Home /News /tamil-nadu /

டாஸ்மாக் கடைகளை திறக்கவா திமுக ஆட்சிக்கு வந்தது? மநீம கேள்வி!

டாஸ்மாக் கடைகளை திறக்கவா திமுக ஆட்சிக்கு வந்தது? மநீம கேள்வி!

டாஸ்மாக் கடைகள் அதிகரிப்பு குறித்து மநீம கேள்வி.

டாஸ்மாக் கடைகள் அதிகரிப்பு குறித்து மநீம கேள்வி.

‘கடந்த அதிமுக ஆட்சியின்போது டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிராக இப்போது முதல்வராக உள்ள மு.க.ஸ்டாலின், கருப்பு உடையணிந்துப் போராட்டம் நடத்தினார். ஆனால், ஆட்சி மாறினாலும், காட்சி மாறவில்லை.’ - மநீம

    தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், இதனால் மக்கள் அதிக அளவு பாதிப்படைவதாகவும் அரசின் வருமானத்திற்காக மக்களைப் பலி கொடுக்கும் இச்செயலைத் தமிழக அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டுமெனவும் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    கல்வியையும், சுகாதாரத்தையும் தனியாருக்குத் தாரைவார்த்துவிட்டு, மக்களின் உயிரைப் பறிக்கும் மதுவை அரசே விற்பனை செய்வதாகவும், டாஸ்மாக் மதுக்கடைகளின் அமைவிடம், எண்ணிக்கை தொடர்பான நீதிமன்றங்களின் உத்தரவுகள் மீறப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    முந்தைய ஆட்சியில் மதுக்கடைகளுக்கு எதிராக திமுகவே போராட்டங்களை நடத்தியதாகவும், ஆனால் தற்போது ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை என மநீம தெரிவித்துள்ளது.

    டாஸ்மாக் கடைகளால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பெண்கள் உள்ளிட்டோர் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாவதாகவும், மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதுமட்டுமின்றி, மீண்டும் கொரானா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், ஏற்கெனவே செயல்பட்டுக் கொண்டிருக்கும் டாஸ்மாக் கடைகளை மூடுவதைவிட்டுவிட்டு, புதிது புதிதாக மதுக்கடைகளைத் திறப்பது கண்டனத்துக்குரியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Also Read: வேலுமணி டெண்டர் முறைகேடு; உடனடி நடவடிக்கைத் தேவை- கமல்ஹாசன்

    திமுக தேர்தல் அறிக்கையில் டாஸ்மாக் கடைகள் எண்ணிக்கை குறைக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தாலும், கடைகள் மற்றும் பார்களின் எண்ணிக்கையை அதிகரித்து, அரசுக்கு வருவாயை பெருக்குவதில்தான் கவனம் செலுத்தப்படுகிறது. இதற்காகவா திமுகவை மக்கள் தேர்ந்தெடுத்தார்கள்?

    இதனால் குடிப்பவர்கள் மட்டுமல்ல, பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள் என்பதை அரசு உணர வேண்டும்.எனவே, பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள், குடியிருப்பு நிறைந்த பகுதிகள், பிரதான சாலை அருகில் மதுக்கடைகளைத் திறப்பதைக் கைவிட வேண்டும்.

    மேலும், ஏற்கெனவே மக்களுக்கு இடையூறாக உள்ள கடைகளை மூடவும், டாஸ்மாக் மதுக்கடைகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும் என மக்கள் நீதி மய்யத்தின் மாநிலச் செயலாளர்  செந்தில் ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Saravana Siddharth
    First published:

    Tags: Kamal Haasan, Makkal Needhi Maiam

    அடுத்த செய்தி