இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போது வரை தொடர்ந்து வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை பரவத்தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்திலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கடந்த 3 நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அண்ணா நகர் வேட்பாளர் பொன்ராஜ் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “நான் கடந்த 4 நாட்களாக, தொடர்ந்து தூக்கமில்லாத இரவுகளால், தேர்தல் பணிகளால் உடல்நலம் சரி இல்லாமல் காய்ச்சலுக்கும், உடம்பு வலிக்கும் மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொண்டு இருந்தேன். எனக்கு கொரானா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இந்த இக்கட்டான தேர்தல் நேரத்தில் குறுகிய காலத்தில், நான் மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்க வேண்டிய நிலையில் அண்ணா நகர் தொகுதி மக்களை சந்திக்க முடியாத நிலையில் இருக்கிறேன். ஆனால் களத்தில் மக்கள் நீதி மையத்தின் படைவீரர்கள் அண்ணா நகர் தொகுதி முழுக்க உங்கள் வீடு தேடி வந்து உங்களை சந்திப்பார்கள். அவர்களுக்கு எனது சிரம்தாழ்ந்த நன்றி.
நான் நேரடியாக வர முடியாமைக்கு மிகவும் வருந்துகிறேன். கூடிய சீக்கிரம் குணமடைந்து தேர்தலுக்கு முன்பாக உங்களை வந்து கண்டிப்பாக சந்திப்பேன் என்ற நம்பிக்கையோடு நான் வர இயலாத சூழ்நிலையை பொறுத்தருள வேண்டுகிறேன்.
ஆனால் தொடர்ந்து சோசியல் மீடியா, டிவி, யூடியூப் மூலம் தமிழக மக்களை சந்திப்பேன் என்று உறுதி கூறுகிறேன். ஜூம் மீட்டிங் (ZOOM MEETING) மூலம் நான் அண்ணா நகர் தொகுதி மக்களோடு கலந்துரையாட ஏற்பாடுகள் கூடிய விரைவில் செய்யப்படும்.” இவ்வாறு பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.
கோவையில் மக்கள் நீதி மய்ய தேர்தல் அறிக்கையை கமல்ஹாசன் வெளியிட்டபோது பொன்ராஜ் உடனிருந்தார். மேலும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேளச்சேரி தொகுதி வேட்பாளர் சந்தோஷ் பாபுவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உறுதி செய்யப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அடுத்தடுத்து இரண்டு வேட்பாளர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கமல்ஹாசன் உள்ளிட்ட மநீம கட்சியினரை கவலையடையச் செய்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.