தனக்கு அமைச்சர் பதவி கேட்டு யாரும் தலைமைக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்த வேண்டாம் என
திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி
ஸ்டாலின் நேற்று அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், அவருக்கு அமைச்சர் பதவி வழங்கக் கோரி திமுக செயற்குழுவில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில், 'உதயநிதிக்கு அமைச்சர் பதவி அளிக்க வேண்டும்' என்று மாவட்ட பொறுப்பாளரும், அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று சிறப்பு தீர்மானம் கொண்டு வந்தார். திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் முகாமிட்டிருந்த நிலையில், இந்த தீர்மானம் கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதையடுத்து, 'தனக்கு அமைச்சர் பதவி கேட்டு யாரும் தலைமைக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்த வேண்டாம்' என்று உதயநிதி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார். "உதயநிதியின் நெருங்கிய நண்பரான அமைச்சர் மகேஷ் போட்ட தீர்மானத்திற்கு உதயநிதி எதிர்ப்பு தெரிவிக்கிறாரா? இல்லை, மற்றவர்களும் செய்யுங்கள் என்று தூண்டுகிறாரா?" என்று திமுகவினர் குழம்பிய நிலையில் உள்ளனர்.
மீண்டும் தீர்மானம்
இந்நிலையில், திமுக முதன்மைச் செயலாளர் கே.என். நேருவின் விருப்பத்தை அப்படியே நிறைவேற்றும் மத்திய மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் இன்று நடந்தது. திமுக முதன்மைச் செயலாளர் கே.என். நேருவின் திருச்சி தில்லைநகர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி தலைமை வகித்தார்.
இதையும் படிங்க: நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு
கூட்டத்தில், வரும் ஜூன் 3ம் தேதி, கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை கட்சிக் கொடிகள் ஏற்றியும், நலத்திட்ட உதவிகள் வழங்கியும் சிறப்பாக கொண்டாடுவது; தேர்தல் வாக்குறுதிகளை பெருமளவில் நிறைவேற்றி, ஓராண்டு கால ஆட்சியை நிறைவுச் செய்துள்ள தமிழக அரசுக்கு வாழ்த்துகள் தெரிவிப்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கிட வேண்டும். அதனை அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும்' என்று ஒரு சிறப்பு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மாநகர செயலாளர் அன்பழகன், எம்எல்ஏ சௌந்தரபாண்டியன், முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி, அவைத் தலைவர் தர்மலிங்கம், மாவட்ட துணை செயலாளர்கள் முத்துச்செல்வம், விஜயா ஜெயராஜ் , துரை கந்தசாமி, வழக்கறிஞர் ஓம் பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.