திமுக தலைவராக மீண்டும் மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டது முதல் ஆறுமுகசாமி ஆணையம், அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கைகள் வெளியிடப்பட்டது வரையிலான 2022 அக்டோபர் மாதம் தமிழ்நாடு அரசியலில் நடந்த முக்கிய நிகழ்வுகளைப் பார்ப்போம்.
அக்டோபர் 9; சென்னையில் நடந்த திமுக பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவராக மு.க.ஸ்டாலின் மீண்டும் தேர்வாகினார். பொதுச் செயலாளராக துரைமுருகனும், பொருளாராக டி.ஆர்.பாலுவும் தேர்வு செய்யப்பட்டனர். சுப்புலட்சுமி ஜெகதீசன் பதவியை ராஜினாமா செய்த நிலையில், துணை பொதுச் செயலாளராக கனிமொழி நியமனம் செய்யப்பட்டார்.
அக்டோபர் 10; நாடாளுமன்றக் குழுவின் அறிக்கையில் இந்தியே மத்திய பல்கலைக் கழகங்களில் பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என கூறப்பட்டு இருப்பதாக சர்ச்சை எழுந்தது. இதற்கு தமிழ்நாடு அரசியல் கட்சிகள், அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
அக்டோபர் 17; தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் இருக்கையில் ஓ.பன்னீர்செல்வம் அமரவைக்கப்பட்டிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். மறுநாள் இதுதொடர்பாக போராட்டமும் நடத்தினர்.
அக்டோபர் 18; ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் வரம்பை மீறி நடந்துகொண்ட ஆட்சியர் உள்ளிட்ட 21 பேர் மீது நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டது.
* ஜெயலலிதா மரணம் குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ அறுவை சிகிச்சை ஏன் நடைபெறவில்லை, உயிரிழந்த நாளில் குழப்பம் என பல்வேறு தகவல்கள் இடம்பெற்றிருந்தன. இதுதொடர்பாக சசிகலா, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத் துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன், மருத்துவர் சிவக்குமார் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது.
அக்டோபர் 19; ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை சட்டமன்றத்தில் அமைச்சர் எஸ்.ரகுபதி தாக்கல் செய்தார். இதையடுத்து, இந்த மசோதா ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுதொடர்பாக ஆளுநர் தரப்பு கேட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்ட நிலையிலும், இதுவரை ஆளுநர் இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. பலர் ஆன்லைன் விளையாட்டில் சிக்கி பணத்தை இழந்து தற்கொலை செய்யும் நிகழ்வு தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.