தமிழ்நாடு அரசின் பட்ஜெட் தாக்கல் முதல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் துபாய் பயணம், அமைச்சரவை மாற்றம் வரை 2022 மார்ச் மாதம் வரை தமிழ்நாடு அரசியலில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்கள்.
மார்ச் 4: நகர்ப்புற உள்ளாட்சி மறைமுகத் தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுகவினர் போட்டியிட்டு வென்றனர். இதுதொடர்பாக கூட்டணி கட்சிகள் முறையிட்டன. கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வென்றவர்கள் உடனே ராஜினாமா செய்ய வேண்டும் எனவும், நேரில் தன்னை சந்திக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
மார்ச் 6: கட்சியின் கட்டுப்பாடுகளை மீறியதாகக் கூறி கடலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பனை திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கினார் ஸ்டாலின். பின்னர், வருத்தம் தெரிவித்ததைத் தொடர்ந்து தற்காலிக நீக்கம் நிறுத்திவைக்கப்பட்டது.
மார்ச் 16: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை கையகப்படுத்துவதற்காக நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யப்பட்ட ரூ.68 கோடி வட்டியுடன் மீண்டும் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.
மார்ச் 18: தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2022-23ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000, சிங்காரச் சென்னை 2.0 திட்டத்திற்கு ரூ.500 கோடி, புதிய வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன.
மார்ச் 19: தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்முறையாக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில், இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பது, கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக ஒரு டன்னுக்கு 195 ரூபாய் உயர்த்தித் தருவது, ரூ. 300 கோடி மதிப்பில் கிராமங்களில் வீடுகளுக்கு இலவச தென்னங்கன்று வழங்கும் திட்டம் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன.
மார்ச் 24: முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக வெளிநாடு சென்ற மு.க.ஸ்டாலின், துபாயில் நடைபெற்ற சர்வதேச தொழில் கண்காட்சியில் தமிழ்நாட்டு அரங்கினை தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் அமீரக தொழிலதிபர்கள் ரூ.2600 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம் கையெழுத்தானது. எனினும், துபாய் பயணம் தொழில் முதலீட்டை ஈர்க்கவா? அல்லது குடும்ப சுற்றுலா பயணமா? என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி இருந்தார்.
மார்ச் 29: தமிழ்நாடு அமைச்சரவையில் யாரும் எதிர்பாராத நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. போக்குவரத்து துறை அமைச்சராக எஸ்.எஸ்.சிவசங்கர் நியமனம் செய்யப்பட்டார். அவர் வசம் இருந்த பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பனிடம் வழங்கப்பட்டது.
மார்ச் 31: டெல்லி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித்ஷா ஆகியோரை நேரில் சந்தித்தார். நீட் விலக்கு, மேகதாது அணை விவகாரம் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் அளித்தார்.
* வன்னியர்களுக்கான 10.5 சதவிகித இட ஒதுக்கீட்டை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்திருந்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் மதுரைக் கிளையின் உத்தரவு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.