ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

நினைவுகள் 2022: அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வாட்ச் வரை.. டிசம்பர் மாதம் தமிழ்நாடு அரசியலில் நடந்த முக்கிய சம்பவங்கள்

நினைவுகள் 2022: அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வாட்ச் வரை.. டிசம்பர் மாதம் தமிழ்நாடு அரசியலில் நடந்த முக்கிய சம்பவங்கள்

மு.க.ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி,  உதயநிதி ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, உதயநிதி ஸ்டாலின்

Year Ender 2022 : டிசம்பர் மாதம் தமிழ்நாடு அரசியலில் நடந்த முக்கிய சம்பவங்கள்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானது முதல் அதிமுகவின் பொதுச் செயலாளர் எனக் குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமிக்கு சட்ட ஆணையம் கடிதம் அனுப்பியது வரை தமிழ்நாடு அரசியலில் டிசம்பர் மாதம் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளைப் பார்ப்போம்.

டிசம்பர் 14; தமிழ்நாடு அமைச்சரவை 2வது முறையாக மாற்றியமைக்கப்பட்டது. உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு, சிறப்பு திட்ட அமலாக்கம், ஊரகக் கடன்கள் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும், 10 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றியமைக்கப்பட்டன.

டிசம்பர் 15; அமைச்சரவையில் 10 வது இடம் உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டது. இதுவரை சட்டமன்றத்தில் பின் இருக்கையில் அமர்ந்திருந்த அவருக்கு, சீனியர் அமைச்சர்கள் அமர்ந்திருக்கும் முன்வரிசையில் இடம் ஒதுக்கப்படவுள்ளன. ஆனால், சீனியர் அமைச்சர்களை பின் தள்ளிவிட்டு உதயநிதிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருப்பதாக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டின.

டிசம்பர் 17; பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கைக் கடிகாரத்தின் விலை குறித்து சர்ச்சை எழுந்த நிலையில், அதன் பில்லை வெளியிட வேண்டும் என செந்தில்பாலாஜி ட்விட்டரில் பதிவிட்டார். நான் ஒரு பெரிய தேசியவாதி. ரஃபேல் விமானத்தை ஓட்டக்கூடிய பாக்கியம் கிடைக்கவில்லை, அதனால், அந்த ரஃபேல் விமானத்துக்குப் பக்கத்தில் இருக்கக்கூடிய இந்த வாட்சை கட்டியிருக்கிறேன் என்று பதிலளித்தார் அண்ணாமலை.

டிசம்பர் 21; தன்னால் நியமிக்கப்பட்ட மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களுடன் சென்னையில் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். கட்சியை கபலிகரம் செய்ய நினைத்தால் அது நடக்காது, தைரியம் இருந்தால் தனிக்கட்சி தொடங்குங்கள் என எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் சவால் விடுத்தார்.

டிசம்பர் 22; திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசாவுக்கு சொந்தமாக கோவையில் உள்ள ரூ.55 கோடி மதிப்பிலான 45 ஏக்கர் நிலத்தை அமலாக்கத்துறை முடக்கியது. 2004-2007 ஆம் ஆண்டு கால கட்டத்தில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்தபோது லஞ்சம் பெற்று அந்த நிலம் வாங்கியதாக அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்திருந்தது.

டிசம்பர் 23; ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவிக்குமாறு அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கும் மத்திய சட்ட ஆணையம் கடிதம் அனுப்பியது. அதில், ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு கடிதம் வரவில்லை. எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவின் பொதுச் செயலாளர் என்று குறிப்பிடப்பட்டு கடிதம் வந்தது.

டிசம்பர் 24; பாரத ஒற்றுமை யாத்திரை டெல்லியை அடைந்த நிலையில் அதில் தமிழ்நாட்டில் இருந்து கமல்ஹாசன், திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், இந்த நடைபயணம் தேசத்துக்கானது. அனைவரும் கட்சி பாகுபாடு இன்றி இதில் கலந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

டிசம்பர் 27; பொங்கல் பரிசுத் தொகுப்பாக ரூ.1,000 ரொக்கம், ஒரு கிலோ சர்க்கரை, பச்சரிசி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்து இருந்தது, பரிசுத் தொகையை உயர்த்தி அளிக்க வேண்டும் எனவும், தொகுப்பில் கரும்பு இடம்பெற வேண்டுமெனவும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. இதனையடுத்து,பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பும் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.

டிசம்பர் 29; புலம் பெயர்ந்தோருக்கு அந்தந்தப் பகுதிகளில் வாக்களிக்க வசதி செய்து தருவது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிடம் இருந்து தேர்தல் ஆணையம் கருத்து கேட்டுள்ளது. இதற்கான கடிதம் அதிமுகவுக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பெயரில் அனுப்பப்பட்டது. இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

First published:

Tags: Tamilnadu news, TamilNadu Politics