ஆளுநரின் தேநீர் விருந்தை தமிழ்நாடு அரசு புறக்கணித்தது முதல் துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் மசோதா நிறைவேற்றம் வரை 2022 ஏப்ரல் மாதம் தமிழ்நாடு அரசியலில் நடந்த முக்கிய நிகழ்வுகளை பார்க்கலாம்.
ஏப்ரல் 1 : தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தி அரசு உத்தரவிட்டது. திமுக ஆட்சியில் மக்களுக்கு கிடைத்த முதல் போனஸ் சொத்து வரி உயர்வு என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
ஏப்ரல் 7: மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 7.5 சதவிகித இடஒதுக்கீடு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஏப்ரல் 11: அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 2017ஆம் ஆண்டு நடந்த பொதுக்குழு செல்லாது, சட்டத்துக்குப் புறம்பானது எனக் கூறி சசிகலா தொடர்ந்த வழக்கில் இத்தீர்ப்பு வழங்கப்பட்டது.
* தமிழில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை ரோஜா, ஆந்திர அரசின் சுற்றுலாத் துறை அமைச்சரானார். இவரது கணவர் ஆர்.கே.செல்வமணி தமிழில் புகழ்பெற்ற இயக்குநராக இருக்கிறார்.
ஏப்ரல் 12 : தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழக ஆளுநர் அழைப்பு விடுத்த தேநீர் விருந்தை தமிழ்நாடு அரசும், திமுகவின் கூட்டணிக் கட்சிகளும் புறக்கணித்தன. நீட் உள்ளிட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காததால் தேநீர் விருந்தை புறக்கணிக்கத்ததாக விளக்கமும் அளிக்கப்பட்டது.
ஏப்ரல் 17: 'மோடியும் அம்பேத்கரும்' என்ற தலைப்பில் புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டது. அதில் முன்னுரையாக இசையமைப்பாளர் இளையராஜா அம்பேத்கரையும் மோடியையும் ஒப்பிட்டு எழுதியது தமிழ்நாடு அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் தனது கருத்தை திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாட்டிலுள்ள அம்பேத்கரிய, பெரியாரிய இயக்கங்கள் வலியுறுத்தின. பாஜகவினர் அவரது கருத்தை ஆதரித்தனர். ஆனால், தனது கருத்தை திரும்பப் பெற மாட்டேன் என இளையராஜா தெரிவித்துவிட்டார்.
ஏப்ரல் 19 : தருமபுரம் ஆதீனத்தை சந்திக்க ஆளுநர் ஆர்.என்.ரவி சென்றபோது மயிலாடுதுறை மாவட்டம் மண்ணம்பந்தல் அருகே அவருக்கு கருப்புக்கொடி காட்டப்பட்டது. அப்போது, அவருடைய கான்வாய் மீது கருப்பு கொடி வீசப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், அந்த தகவலில் உண்மையில்லை எனவும், ஆளுநரின் பாதுகாப்பில் அரசு சமரசம் செய்யாது எனவும் தமிழ்நாடு அரசு விளக்கியது.
ஏப்ரல் 25: தமிழ்நாட்டில் உள்ள 13 பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர்களை ஆளுநருக்கு பதிலாக அரசே நியமிக்கும் வகையிலான 2 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. சட்டமன்றத்தில் இதனை அதிமுக, பாஜக எதிர்த்தன. ஆனால், இந்த மசோதாவிற்கு ஒப்புதல் வழங்குவதில் சட்ட சிக்கல் உள்ளதாக ஆளுநர் தெரிவித்தார்.
ஏப்ரல் 27: புதிதாக தொடங்கப்படும் அரசு சித்த மருத்துவப் பல்கலைக் கழகத்தின் வேந்தராக முதலமைச்சர் இருப்பார் என சட்டமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அடுத்த நாள் இந்த மசோதா விவாதங்கள் இன்றி நிறைவேற்றப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.