1968-ல் கருணாநிதியின் தேர்தல் பிரசாரம் நினைவில் உள்ளது! நெகிழும் அதிமுக முன்னாள் எம்.பி மைத்ரேயன்

அடுத்த நாள் சாய்பாபா கோயில் பாலம் அருகே ஸ்தூபி இடத்தில் கருணாநிதி கலந்து கொள்ளும் தி.மு.க பொதுக்கூட்டம். அன்று தான் நான் முதல் முறையாக கருணாநிதியை நேரில் பார்த்தேன்.

Web Desk | news18
Updated: August 7, 2019, 5:54 PM IST
1968-ல் கருணாநிதியின் தேர்தல் பிரசாரம் நினைவில் உள்ளது! நெகிழும் அதிமுக முன்னாள் எம்.பி மைத்ரேயன்
மைத்ரேயன்
Web Desk | news18
Updated: August 7, 2019, 5:54 PM IST
தி.மு.கவுக்காக 1968-ம் ஆண்டு கருணாநிதி வாக்கு சேகரித்த நிகழ்வு இன்றும் என் நினைவில் இருக்கிறது என்று உருக்கமாக அ.தி.மு.க முன்னாள் எம்.பி மைத்ரேயன் தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வரும், மறைந்த தி.மு.க தலைவருமான கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு தினம் அக்கட்சியால் தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டுவருகிறது. ஒரு ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கருணாநிதியின் சிலையை இன்று சென்னையிலுள்ள முரசொலி அலுவலகத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திறந்துவைக்கிறார்.

இந்தநிலையில், கருணாநிதியின் முதலாமாண்டு மறைவுக்கு அ.தி.மு.க முன்னாள் எம்.பி மைத்ரேயன் உருக்கமாக அஞ்சலி செலுத்தியுள்ளார்.


இதுதொடர்பான அவருடைய ஃபேஸ்புக் பதிவில், ‘ஒன்றரை ஆண்டு இடைவெளியில் தமிழக அரசியலின் இருபெரும் அசைக்க முடியாத சக்திகள் நம்மை விட்டு எட்டாத தூரம் சென்று விட்டனர். 2016 டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா மறைந்தது நம் அனைவருக்கும் மீளாத துயரத்தை தந்தது. அந்த துயரத்தில் இருந்து மீள்வதற்குள் 2018 ஆகஸ்ட் 7 ம் தேதி கருணாநிதி காலமானார். அரசியல் களத்தில் எதிரெதிர் துருவங்களாக இருந்தாலும் கருணாநிதி, ஜெயலலிதா இருவரின் மறைவு தமிழக அரசியலில் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியது.

அறுபதுகளில் நான் பள்ளி மாணவனாக இருந்த போது கேட்ட ஒரு அரசியல் பொதுக்கூட்டம் எனது நினைவுக்கு வருகிறது. 1967-ல் தி.மு.க தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்த பிறகு 1968 ல் சென்னை மாநகராட்சித் தேர்தல். மயிலாப்பூர் சாய்பாபா கோயிலை ஒட்டிய வார்டுக்கு தி.மு.க சார்பில் மயிலை சாரங்கனும் காங்கிரஸ் சார்பில் டாக்டர் ரமாதேவியும் போட்டியிட்டனர். அப்போது அண்ணா புற்றுநோய் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்தார். தி.மு.க சார்பில் ’அமெரிக்காவில் இருக்கும் அண்ணன் மனம் மகிழ அளிப்பீர் உதயசூரியனுக்கு வாக்கு’ என்று சென்னை முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

காங்கிரஸ் தலைவர் சி. சுப்பிரமணியம் பொதுக்கூட்டத்தில் பேசும் போது அதைக் குறை கூறி பேசினார். அடுத்த நாள் சாய்பாபா கோயில் பாலம் அருகே ஸ்தூபி இடத்தில் கருணாநிதி கலந்து கொள்ளும் தி.மு.க பொதுக்கூட்டம். அன்று தான் நான் முதல் முறையாக கருணாநிதியை நேரில் பார்த்தேன். அப்போது எனக்கு பதிமூன்று வயது. 8-ம் வகுப்பு மாணவன்.

Loading...

கருணாநிதி பேசும் போது "அமெரிக்காவில் இருக்கும் அண்ணன் மனம் மகிழ அளிப்பீர் உதயசூரியனுக்கு வாக்கு என்று கேட்டோம். அது தவறா? இல்லை என்றால் எப்படி கேட்பது? சுப்ரமணியம் மனம் மகிழ அளிப்பீர் உதயசூரியனுக்கு வாக்கு என்றா கேட்பது?" என்று பதிலடி கொடுத்து பேசியது இன்றும் என் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

அரசியலில் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு இன்று கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் அவருக்கு எனது இதயபூர்வமான அஞ்சலி’ என்று பதிவிட்டுள்ளார்.

அ.தி.மு.க சார்பில் மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராக ஜெயலலிதாவால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் மைத்ரேயன். அவருடைய பதவிக் காலம் சமீபத்தில் நிறைவடைந்தது. அப்போது பேசிய அவர், ‘மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கேட்டேன். கிடைக்கவில்லை. மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவேன் என்று எதிர்பார்த்தேன். அதுவும் நடைபெறவில்லை என்பது வருத்தமாக உள்ளது’ என்று தெரிவித்திருந்தார். அதன்மூலம், அவர் அ.தி.மு.க தலைமை மீது அதிருப்தியில் இருந்தார் என்பது உறுதியாகியது.

Also see:

First published: August 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...