• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மகளிர் நீதிமன்ற சிறப்பு அரசு வழக்கறிஞர் நீக்கம்: தமிழக அரசு அதிரடி

மகளிர் நீதிமன்ற சிறப்பு அரசு வழக்கறிஞர் நீக்கம்: தமிழக அரசு அதிரடி

தமிழக சட்டசபை

தமிழக சட்டசபை

போக்சோ சட்டத்தின் கீழ் பதியப்பட்ட ஒரு வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பாட்டியை சித்ரா தொலைபேசியில் தொடர்பு கொண்டு, குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிராக வாக்குமூலம் அளித்தால் குற்றம் சாட்டப்பட்டவர் அவரை கொலை செய்யக்கூடும் என மிரட்டியுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பிறழ்சாட்சியாக மாற்றியதற்காக மாவட்ட மகளிர் நீதிமன்ற சிறப்பு அரசு வழக்கறிஞர் ஒருவரை தமிழக அரசு பணிநீக்கம் செய்துள்ளது.

பெரம்பலூர் மாவட்ட மகளிர் நீதிமன்ற சிறப்பு அரசு வழக்கறிஞராக சித்ரா என்பவர் பணிபுரிந்து வந்தார். அந்த நீதிமன்றத்தில் கடந்த மாதத்தில் மட்டும் 10 வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கொடுத்த புகாரின்பேரில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்றுள்ளார். குற்றம்சாட்டப்பட்டவர்கள் நிரபராதிகளாக விடுவிக்கப்பட்ட போக்சோ வழக்குகள் (குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுக்கும் சட்டம்) ஆய்வு செய்தபோது, பாதிக்கப்பட்ட குழந்தைகள் பிறழ்சாட்சியாக மாறியிருப்பது தெரியவந்துள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

சித்ராவை பதவி நீக்கம் செய்திட உள்துறை அமைச்சகம் தற்போது உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவில் சித்ராவின் பதவி நீக்கத்துக்கான காரணங்கள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.

இதன்படி போக்சோ சட்டத்தின் கீழ் பதியப்பட்ட ஒரு வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பாட்டியை சித்ரா தொலைபேசியில் தொடர்பு கொண்டு, குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிராக வாக்குமூலம் அளித்தால் குற்றம் சாட்டப்பட்டவர் அவரை கொலை செய்யக்கூடும் என மிரட்டியுள்ளார்.

போக்சோ மற்றும் குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் பதியப்பட்ட மற்றொரு வழக்கில் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுவதற்கு முந்தைய நாள் பாதிக்கப்பட்ட சிறுமியின் மாமாவை சித்ரா தொலைபேசியில் அழைத்து அவரை பிறழ்சாட்சியாக்க 30 நிமிடங்கள் வரை பேசியுள்ளார். அரசு வழக்கறிஞராக இருந்துகொண்டு குற்றம்சாட்டப்பட்டவருக்கு பரிதாபம் காட்டும் வகையில் அந்த சிறுமியும் குற்றம்சாட்டப்பட்டவரும் திருமணம் செய்து கொள்ள ஆலோசனை வழங்கியுள்ளார். மறுநாள் குற்றம்சாட்டப்பட்டவர் தப்பிக்கும் வகையில் அந்த சிறுமி வாக்குமூலம் கொடுத்துள்ளார். மேலும் விசாரிக்கும்போது சிறப்பு அரசு வழக்கறிஞர்  சொன்னதை தான் கூறியதாக அந்த சிறுமி தெரிவித்துள்ளார் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த முக்கியமான வழக்குகளில் சித்ரா ஆஜராவதில் அவர் மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறியுள்ளார். அவர் மீது அரசு உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார். ஆட்சியரின் புகாரை விரிவாக விசாரித்த அரசு, புகார்கள் உண்மை என தெரியவந்ததால் பெரம்பலூர் மகளிர் நீதிமன்ற சிறப்பு அரசு வழக்கறிஞர் பொறுப்பிலிருந்து சித்ராவை நீக்குவதாகவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை வரவேற்றுள்ள குழந்தை உரிமைகள் செயற்பாட்டாளர் தேவநேயன், போக்சோ சட்டத்தை அமல்படுத்த வேண்டிய மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அதிகாரமற்றதாக இருப்பதாக கூறுகிறார்.

“தட்டச்சு செய்யக் கூட ஆட்களை நியமிக்காத அவலநிலையில் உள்ளது மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம். தங்களுக்கென்று வலுவாக வாதாடும் வழக்கறிஞர் கிடையாது. போக்சோ சட்டத்தை மாநிலத்தில் அமல்படுத்துவது யாருடைய பொறுப்பு? யாருமே இல்லை என்பது தான் உண்மை. அதனால் தான் போக்சோ சட்டத்தின் கீழ் பதியப்பட்ட 1,540 வழக்குகளில் 199 வழக்குகளில் மட்டுமே தீர்ப்பு கிடைத்துள்ளது (தேசிய குற்ற ஆவண காப்பகம்-2016). அதிலும் 213 பேர் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளனர். கேரளா, குஜராத், ராஜஸ்தான், கர்நாடக மாநிலங்களில் குழந்தைகள் ஆணைய செயல்பாடு சிறப்பாக உள்ளது. கேரளாவில் ஓர் ஆண்டுக்கு ரூ.7 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது என்கிறார் தேவநேயன்.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட குடும்பத்தை நேரில் பார்த்து அவர்களது வாக்குமூலத்தை பெற்றுக்கொண்டு, சிறப்பு அரசு வழக்கறிஞர் சித்ராவை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று உள்துறையிடம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மனு அளித்திருந்தனர்.

“இது மிகவும் வரவேற்கத்தக்க உத்தரவாகும். இதுபோன்ற மிரட்டல்களில் ஈடுபடும் மற்ற அரசு வழக்கறிஞர்களுக்கு இந்த உத்தரவு ஒரு பயத்தை உருவாக்கும். பல நாடுகளில் உள்ளதுபோல இந்தியாவில் சாட்சிகளை பாதுகாக்கும் சட்டம் இயற்ற வேண்டும்”என்கிறார் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலத் தலைவர் வாலண்டினா.

இந்த விவகாரம் தொடர்பான சித்ராவின் செல்போன் உரையாடலின் ஆடியோ பதிவு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த ஆடியோவை நியூஸ்18 தமிழ்நாடு ஆராய்ந்தபோது, சிறப்பு அரசு வழக்கறிஞர் சித்ரா பாதிக்கப்பட்ட சிறுமியை மிரட்டும் தொனியில் பேசியதையும், ஒன்றுமே நடக்கவில்லை என சொல்லுமாறு சிறுமியிடம் கூறியதையும் உறுதிப்படுத்த முடிந்தது.

Also watch

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:DS Gopinath
First published: