Home /News /tamil-nadu /

இளைஞர்களை பக்கோடா விற்க சொல்வதா?: நக்மா ஆவேசம்!

இளைஞர்களை பக்கோடா விற்க சொல்வதா?: நக்மா ஆவேசம்!

அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் நக்மா

அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் நக்மா

  • News18
  • 2 minute read
  • Last Updated :
    படித்த இளைஞர்களை பக்கோடா விற்கச் செல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்றும், 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதாகக் கூறிவிட்டு இப்போது பக்கோடா விற்கச் சொல்வதா என்று மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் நக்மா ஆவேசமாகப் பேசியுள்ளார்.

    சென்னை விமான நிலையத்தில் அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் நடிகை நக்மா நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்கள் என்பதை பார்க்க வேண்டும். மதுவிற்கு எதிராக மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் போராட்டம் நடத்தினார்கள். பஸ் கட்டண உயர்வை கண்டித்து போராட்டம் நடத்துவது பற்றி மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவு செய்யப்படும்.

    பட்ஜெட் கூட்டத்தில் பிரதமர் ஆவேசமாக பேசினார். பக்கோடா விற்பதை யாரும் தவறாக கருதவில்லை. தங்கள் குழந்தைகள் படித்து விட்டு உயர் பதவிகளுக்கு வர வேண்டும் என பெற்றோர் ஆசைப்படுவார்கள். ஆனால் கஷ்டப்பட்டு படித்து வரும் இளைஞர்களை பக்கோடா விற்க சொல்வதை ஏற்கமுடியுமா? பக்கோடா விற்பதை யாரும் தவறாக சொல்ல முடியாது. ஆனால் ஆட்சிக்கு வந்தால் 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாக கூறிவிட்டு 4 லட்சம் பேருக்கு கூட வேலை வாய்ப்பு வழங்கப்படாதா யார் தவறு?

    மத்திய அரசின் எந்த திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. மத்திய அரசின் திட்டங்களை எப்போது செயல்படுத்த போகிறார்கள் என்பதை சொல்லவில்லை. மத்திய அரசு வெறும் அறிவிப்புகளை மட்டுமே வெளியிடுகிறது. மத்திய அரசிடம் கேள்விகளை கேட்டால் வேறு வகையில் கேள்விகளை திசை திருப்புவதில்தான் கவனம் செலுத்துவார்கள்.

    ரஜினி அரசியல் கட்சி தொடங்கி எப்படி செயல்படப்போகிறார் என்பது குறித்து அறிவித்த பின்னரே அதுகுறித்து கருத்து தெரிவிக்க முடியும். ரஜினி காங்கிரஸ் கட்சியை எதிர்ப்பதாகக் கூறுவது உண்மையல்ல. பாரதிய ஜனதா கட்சியுடன் ரஜினி சேர்ந்தால் அதிருப்தி ஏற்படும். தமிழகத்தில் இ.பி.எஸ். - ஒ.பி.எஸ். ஆட்சியை மத்திய அரசு இயக்குகிறது. பாஜகவுடன் இணைந்து செயலாற்றுவது பற்றி ரஜினி நன்றாக யோசிக்க வேண்டும். நேரம் கிடைத்தால் அவரை சந்திப்பேன்.

    நாட்டிற்கு யார் நல்லது செய்பவர்கள்தான் தலைவராக முடியும். 4 ஆண்டுகளில் பிரதமர் மோடி எதுவும் செய்யவில்லை. இதனால்தான் காங்கிரஸ் மீது குறை சொல்லி வருகிறார். இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் கொண்டு வந்த புரட்சிகளால் நாடு முன்னேறி உள்ளது. ஆனால் பாரதிய ஜனதா அரசு கொண்டு வந்த பணமதிப்பு இழப்பு, ஜி.எஸ்.டி. ஆகியவற்றால் மக்கள் பலனடைந்து உள்ளார்களா? ஒவ்வொரு நபரிடம் வரியை அதிகமாக வசூல் செய்யும் நிலைதான் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கச்சா எண்ணெய் அதிகமாக இருந்தாலும் பெட்ரோல் மக்களுக்கு குறைவான விலையில் கொடுக்கப்பட்டது. ஆனால் தற்போது கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தும், பெட்ரோல் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

    நாட்டின் வளர்ச்சியில் காங்கிரஸ் செய்த பணிகளை கூட பாரதிய ஜனதா செய்யவில்லை என்பதோடு, அவர்கள் அறிவித்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. அதை கேள்வி மட்டும் கேட்கக்கூடாது என்று கூறுகின்றனர். சமீபகாலமாக நாடு முழுவதும் வெளியாகும் தேர்தல் முடிவுகள் பாஜகவின் தோல்வியைக் காட்டிவருகிறது. வரக்கூடிய தேர்தல்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு கஷ்டமாக இருக்கும் என்று நக்மா கூறினார்.
    Published by:Veeramani Panneerselvam
    First published:

    Tags: BJP, Mahila Congress, Nagma, Narendra Modi, PM Modi, Rajinikanth

    அடுத்த செய்தி