MAFOI PANDIYARAJAN USES ANITHA VIDEO FOR CAMPAIGN SKD
மறைந்த அனிதா பேசுவதுபோல சித்தரித்து பிரச்சார வீடியோ - மாஃபா பாண்டியராஜனுக்கு எழுந்த கடும் கண்டனம்
அனிதா
அ.தி.மு.கவுக்கு ஆதரவாகவும், தி.மு.கவுக்கு எதிராக மறைந்த அனிதா பேசுவதுபோல சித்தரிக்கப்பட்ட வீடியோவை வெளியிட்ட அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு கண்டனங்கள் குவிந்துவருகின்றன.
தமிழகத்தில் நாளை மறுநாள் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலை முன்னிட்டு தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றன. பிரச்சாரத்தை கடந்து அரசியல் கட்சிகள் சார்பில் வெளியிடப்படும் விளம்பரங்களும் இந்தமுறை மக்களிடையே கவனம் ஈர்த்துள்ளது. அ.தி.மு.க சார்பில் வெற்றிநடை போதும் தமிழகம் என்றும், தி.மு.க சார்பில் ஸ்டாலின்தான் வாராரு, விடியல் தரப் போறாரு என்ற விளம்பரமும் அதிக அளவில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டன. அதன்தொடர்ச்சியாக, ஒருவர் மாற்றி ஒருவர் மற்ற கட்சிகளின் குறைகளையும் தவறுகளையும் எடுத்துரைக்கும் வீடியோக்களும் கவனம் பெற்றுவந்தன.
இந்தநிலையில், தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக மிகப்பெரிய அதிர்வலைகளை உருவாக்கிய மறைந்த மாணவி அனிதாவின் வீடியோக்களைப் பயன்படுத்தி அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வீடியோ வெளியிட்டுள்ளார். அனிதா ஆன்மா பேசுவதுபோல சித்தரித்து வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், ‘மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கொண்டுவரப்பட்ட 7.5 சதவீத இடஒதுக்கீட்டை ஆதரித்தும் நீட் தேர்வை தி.மு.க கொண்டுவந்தது என்பது போலவும் அனிதாவின் ஆன்மா பேசுவதுபோல வீடியோவில் குரல் உள்ளது’ இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துவருகின்றன.
இதுதொடர்பாக காட்டமாக விமர்சித்துள்ள அனிதாவின் அண்ணன் மணிரத்னம், ‘அ.தி.மு.கவை அனிதா ஆதரிக்கும் வகையில் வீடியோ போட்டுள்ளீர்கள். உங்களது மகள் ஒரு லட்சியத்துடன் இறந்திருந்தால் அவரைப் பயன்படுத்தி இப்படி செய்வீர்களா? மறைந்த உங்களது தலைவி ஜெயலலிதாவின் உருவத்தை வைத்து வாக்கு கேட்டவர்கள்தானே நீங்கள்? நீட் தேர்வை தி.மு.கதான் கொண்டுவந்ததா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக் காலத்திலும், ஜெயலலிதா உயிருடன் இருந்தவரையில் நீட் தேர்வு வரவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார். வீடியோவை நீக்கவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
I never thought one could stoop so low as to create a fake video of one who took her own life🤬
Even by Mafoi's pathetic history (jumped parties/wings routinely, campaigned in RK Nagar with replica of Ms Jayalalithaa corpse in a coffin), this is new depth
— Dr P Thiaga Rajan (PTR) (@ptrmadurai) April 4, 2021
அதேபோல, தி.மு.க எம்.எல்.ஏவும் தகவல் தொழில்நுட்ப அணியின் தலைவருமான பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘தற்கொலை செய்துகொண்ட ஒருவரைப் பயன்படுத்தி போலி வீடியோ உருவாக்கும் அளவுக்கு தரம் தாழ்ந்துபோவார்கள் என்று நாம் ஒருபோதும் நினைத்தது இல்லை. மாஃபா பாண்டியராஜனின் பாதை மோசமானதாக இருந்தாலும் இது புதிய ஆழமான மோசம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
கடுமையான கண்டனங்கள் எழுந்த நிலையில் மாஃபா பாண்டியராஜன் அந்த வீடியோவை நீக்கியுள்ளார்.