பதிவெண் பிரச்னை... ஷோரூம் முன் பைக்கை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயற்சி.. நடந்து என்ன?

Youtube Video

பதிவெண் இல்லாததால் சாலையில் வாகனத்தை இயக்க முடியாமலும், வாகனம் இல்லாததால் வேலையை இழந்தும் இருவரும் அவதிப்பட்டு வருகின்றனர்.

 • Share this:
  சென்னை மதுரவாயலில், இருசக்கர வாகனங்களை விநியோகித்து 9 மாதங்கள் ஆகியும் வாகனப் பதிவெண் வழங்காத ஷோரூமைக் கண்டித்து வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனங்களை பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  சென்னை மதுரவாயலில் ஸ்ரீவாரி பைக்ஸ் ஷோரூம் இயங்கி வருகிறது; ஷோரூமை சசிக்குமார் என்பவர் நடத்தி வருகிறார். இந்த ஷோரூமில், கடந்த மார்ச் மாதம் மதுரவாயலைச் சேர்ந்த 23 வயதான கார்த்திக் என்பவர் ஒரு இருசக்கர வாகனம் வாங்கினார். வழக்கமாக புதிய வாகனம் வாங்கினால், அதிகபட்சம் 15 நாட்களுக்குள் பதிவெண் வழங்கப்பட்டு விடும். ஆனால் கார்த்திக் விஷயத்தில் 9 மாதங்களாக வாகனப் பதிவெண்ணை வழங்காமல் ஷோரூம் நிர்வாகம் இழுத்தடித்துள்ளது.

  இதுகுறித்து அவர் காவல்நிலையத்தில் புகாரளித்து அதற்கான சமூக பதிவேட்டு ரசீதையும் பெற்றார்; எனினும் பலனில்லை. கார்த்திக்கைப் போல் பாதிக்கப்பட்டவர் நெற்குன்றத்தைச் சேர்ந்த 30 வயதான ஷர்மிளா. அவரது பணிக்கு செல்வதற்காக அம்மா இருசக்கர வாகன மானியத் திட்டத்தின் கீழ் பதிவு செய்து வாகனம் வாங்கினார். அவருக்கும் 9 மாதங்களாக பதிவெண் வழங்கப்படாததால், அவரது மானியம் ரத்தானது; ஆனால் வங்கிக் கணக்கில் இருந்து தவணைத் தொகை மட்டும் சரியாக பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது.  பதிவெண் இல்லாததால் சாலையில் வாகனத்தை இயக்க முடியாமலும், வாகனம் இல்லாததால் வேலையை இழந்தும் இருவரும் அவதிப்பட்டு வருகின்றனர். கடந்த 9 மாதங்களாக பதிவெண் வழங்கப்படாததால் ஆத்திரமடைந்த இருவரும் வெள்ளிக்கிழமை காலை ஷோரூம் முன்பு தங்கள் வாகனத்தை நிறுத்தி, அவற்றின் மீது பெட்ரோல் ஊற்றித் தீக்கொளுத்த முயன்றனர்.

  தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து இருவரையும் சமாதானப்படுத்தினர். தான் வறுமையான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், நீதிமன்றத்திற்குக் கூட செல்ல முடியாத நிலையில் தவிப்பதாக கார்த்திக் கூறினார்.

  போலீசார் ஷோரூம் உரிமையாளர் சசிக்குமாருடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின்பு, டிசம்பர் 31ம் தேதிக்குள் அல்லது ஜனவரி 2ம் தேதிக்குள் பதிவெண் வழங்கி விடுவதாகவும் அது தவறினால் புதிய வாகனங்கள் வழங்குவதாகவும் முடிவு எட்டப்பட்டது; இதையடுத்து வாடிக்கையாளர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vijay R
  First published: