மதுரையில் உயிரிழந்த தீயணைப்பு வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி; ஒருவருக்கு அரசு வேலை - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

மதுரை ஜவுளிக்கடை தீ விபத்தில் போராடி உயிரிழந்த தீயணைப்பு வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவியும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்குவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

 • Share this:
  மதுரை தெற்கு மாசி வீதியில் உள்ள ஜவுளிக்கடையில் நேற்று நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள சம்பவ இடத்திற்குச் சென்று தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டபோது, எதிர்பாராத விதமாக அந்த கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது. அதில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கே.சிவராஜன், பி.கிருஷ்ணமூர்த்தி, ஆர்.கல்யாணகுமார், சின்னக்கருப்பு ஆகிய 4 வீரர்கள் இடிபாடுகளில் சிக்கினர். அவர்களில் சிவராஜன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகிய தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். எனினும் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். மேலும் 2 தீயணப்பு வீரர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  இந்நிலையில், பாதிக்கப்பட்ட தீயணைப்பு வீரர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி உள்ளிட்ட அறிவிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். அதில், ”கடமையாற்றும் போது உயிரிழந்த தீயணைப்பாளர்கள் சிவராஜன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரின் கடமை உணர்வையும், தியாகத்தையும் பாராட்டி அவர்களின் குடும்பத்திற்கு தலா பத்து லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்தும், தலா பதினைந்து லட்சம் ரூபாய் அரசு நிதியிலிருந்தும், ஆக மொத்தம் தலா 25 லட்சம் ரூபாயும்; அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.  காயமடைந்த தீயணைப்பாளர்கள் கல்யாணகுமார் மற்றும்
  சின்னக்கருப்பு ஆகியோருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் அரசு நிதியிலிருந்து வழங்கவும், அவர்களுக்கான மருத்துவச் செலவை அரசே ஏற்கவும் உத்தரவிட்டுள்ளேன்” என்று கூறியுள்ளார்.
  Published by:Rizwan
  First published: