பழங்குடியினர் நலத்துறைக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 265 கோடி ரூபாய் அரசுக்கு திருப்பி அளிக்கப்பட்டு அது பிற துறைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரிய வந்துள்ளது.
மதுரை ஊமச்சிகுளம் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் கார்த்திக், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பழங்குடியினர் நலத்துறைக்கு கடந்த 2018 முதல் 2021 வரையிலான மூன்று நிதி ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட நிதி, அவற்றில் அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்ட நிதி, அதிலிருந்து பிற துறைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட நிதி ஆகியவற்றின் விபரங்களை கோரியிருந்தார்.
அவருடைய கடிதத்திற்கு கிடைக்கப்பட்ட பதில் மூலம், மத்திய அரசு மற்றும் தமிழக அரசு இணைந்து தமிழக பழங்குடியினர் நலத்துறைக்கு கடந்த 2018-19, 2019-20, 2020-21 ஆகிய மூன்று நிதி ஆண்டுகளில் மொத்தம்ஆயிரத்து 310 கோடியே 94 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் ஒதுக்கி உள்ளது தெரிகிறது.
ஆண்டுவாரியாக பார்க்கையில், 2018-19ம் ஆண்டில் 333 கோடியே 82 லட்சத்து 43 ஆயிரம் ரூபாயும்; 2019-20ம் ஆண்டில் 482 கோடியே 80 லட்சத்து 14 ஆயிரம் ரூபாயும்; 2020-21ம் ஆண்டில் 494 கோடியே 32 லட்சம் ரூபாயும் நிதியாக ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: சாதி பாகுபாடு: அரசு ஊழியருக்கு தண்ணீர், கழிவறை மறுப்பு... 6 பேர் மீது வழக்கு
இந்த நிதியில் கடந்த மூன்று ஆண்டுகளில் பழங்குடி நலத்துறையால் ஆயிரத்து 45 கோடியே 24 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. செலவு செய்தது போக, 2018-19ம் ஆண்டில் 38 கோடியே 75 லட்சம் ரூபாயும், 2019-20ம் ஆண்டில் 167 கோடியே 86 லட்சம் ரூபாயும், 2020-21ம் ஆண்டில் 59 கோடியே 8 லட்சம் ரூபாயும் என மொத்தம் 265 கோடியே 70 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டு உள்ளது.
அப்படி அரசிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்ட நிதியிலிருந்து 139 கோடி ரூபாய் நிதி பிற துறைகளுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2019-20ம் ஆண்டில் வனத்துறைக்கு 10 கோடியும்; 2020-21ம் ஆண்டில் வனத்துறைக்கு 67.7 கோடியும், ஊரக வளர்ச்சித்துறைக்கு 58.17 கோடியும், பேரூராட்சிகள் துறைக்கு 4.05 கோடியும் செலவிடப்பட்டு உள்ளது.
"பழங்குடியின மக்களின் வாழ்வாதார தேவைகளான நில உரிமை பட்டா, வீடு, உணவு, தண்ணீர், கல்வி, சுகாதாரம், மின்சாரம், சாலை உள்ளிட்டவை இன்னமும் முழுமை பெறாமல் உள்ள நிலையில், அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி திருப்பி அனுப்பப்பட்டு உள்ளது அதிர்ச்சி அளிக்கிறது" என்கிறார் சமூக ஆர்வலர் கார்த்திக்.
இதை படிக்க: கேரள லாட்டரியில் விழுந்த ரூ.10 கோடி பரிசு: உறவினரை அழைத்துவர சென்ற தமிழருக்கு அடித்த அதிர்ஷ்டம்
அரசிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்ட நிதியான 265 கோடி ரூபாயை மீண்டும் பழங்குடி மக்களின் நலனுக்காக செலவிட வேண்டும் என்றும், இத்துறைக்கு ஒதுக்கப்படும் நிதி முழுமையாக மக்கள் நலத்திட்டங்களுக்காக பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்கு சிறப்புக்குழு அமைத்து கண்காணிக்க வேண்டும் எனவும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: RTI, Welfare scheme