நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி, பேருராட்சித் தலைவர்களை தேர்ந்தெடுக்கும் மறைமுக தேர்தலில் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து போட்டி வேட்பாளர்கள் களமிறங்கிய விவகாரத்தில் திருமங்கலம் ,உசிலம்பட்டி நிர்வாகிகளை
திமுகவில் இருந்து நீக்கி அக்கட்சியில் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கடந்த 4ஆம் தேதி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தலைவர் தேர்தல் நடைபெற்றது இதில் திமுக சார்பில் வெற்றி பெற்றவர்கள் தலைவர் வேட்பாளராக திமுக தலைமை கழகத்தில் அறிவிக்கப்பட்டு அனைத்து இடங்களிலும் தேர்வு செய்யப்பட்ட நிலையிலும் ஒரு சில இடங்களில் கட்சி அறிவிப்புக்கு எதிராக போட்டி வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெற்றனர்.
இவ்வாறு கட்சி நடவடிக்கைகளுக்கு எதிராக ஈடுபட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் எச்சரித்திருந்தார். மறைமுகத் தேர்தலில் மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர்மன்ற தலைவர் வேட்பாளராக 6வது வார்டு கவுன்சிலர் ரம்யாவை அறிவித்திருந்தது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருமங்கலம் நகர் கழகப் பொறுப்பாளர் முருகன் தனது மருமகள் ஷர்மிளாவை போட்டி வேட்பாளராக நிறுத்தினார்.
இதில் பெரும்பான்மை நிரூபிக்கப்படாததால் திருமங்கலம் நகர் மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இதேபோல் உசிலம்பட்டி நகர்மன்ற தலைவர் வேட்பாளராக திமுக தலைமை கழகம் செல்வி என்பவரை அறிவித்திருந்தது. ஆனால் நகர செயலாளர் தங்கமலை பாண்டி தனது மனைவி பாண்டி அம்மாளுக்கு தலைவர் பதவி வழங்கப்படாததால் அவரது ஆதரவாளரான சகுந்தலா என்பவரை போட்டியிட வைத்து அதிமுக கவுன்சிலர்கள் ஆதரவுடன் வெற்றி பெற வைத்தார்.
இதையும் படிங்க: பாஜக நிர்வாகிகள் கூண்டோடு மாற்றம்: அண்ணாமலை அதிரடிக்கு காரணம் என்ன?
இத்தகவல் மதுரை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மணிமாறன் மூலமாக கட்சி மேலிடத்திற்கு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து கட்சி உத்தரவுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி திருமங்கலம் நகர் கழக பொறுப்பாளர் முருகன் மற்றும் உசிலம்பட்டி நகர செயலாளர் தங்கப்பாண்டி, ஒன்றிய செயலாளர் சுதந்திரம், தலைமை செயற்குழு உறுப்பினர் சோலை, உசிலம்பட்டி நகர இளைஞரணி அமைப்பாளர் சந்திரன் ஆகியோர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.