ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மதுரை- தேனி ரயில் சேவை 11 ஆண்டுகளுக்கு பின் தொடங்கியது.. குதூகலமாய் பயணித்த மக்கள்

மதுரை- தேனி ரயில் சேவை 11 ஆண்டுகளுக்கு பின் தொடங்கியது.. குதூகலமாய் பயணித்த மக்கள்

மதுரை - தேனி ரயில் சேவை

மதுரை - தேனி ரயில் சேவை

Madurai - theni: ரயிலுக்குள் பயணித்த மக்களின் கொண்டாட்டம் ஒருபுறம் இருக்க, நெடுங்காலத்திற்கு பின்னர் தங்கள் ஊர்களை கடந்து செல்லும் ரயிலையும், அதில் சென்ற பயணிகளையும் பார்த்து வழிநெடுகிலும் ரயில்வே கிராசிங் பகுதிகளிலும், வீடுகளில் இருந்து வெளியே வந்தும், ரயில் நிலையங்களில் குவிந்தும் கையசைத்து ஆர்ப்பரித்து மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

11 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் துவங்கப்பட்ட மதுரை - தேனி ரயில் சேவையின் முதல் பயணத்தை குடும்பத்துடன் துவங்கிய மக்கள் வழிநெடுகிலும் ஆரவாரத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

கம்பம், போடிமெட்டு, இடுக்கி பகுதிகளில் விளையக்கூடிய ஏலக்காய், மிளகு, பஞ்சு, மற்றும் மூலிகை பொருட்களை சந்தைப்படுத்துவதற்காக ஆங்கிலேயர் காலத்தில் 1928ம் ஆண்டு போடி - மதுரை இடையே குறுகிய பாதையில் ரயில் போக்குவரத்து துவக்கப்பட்டது.

காலப்போக்கில் பயணிகள் ரயிலாக மாற்றப்பட்ட நிலையில் 1954ம் ஆண்டு குறுகிய பாதை - மீட்டர் கேஜ் ரயில் பாதையாக மாற்றப்பட்டது. பின்னர், மீட்டர் கேஜ் பாதையில் இருந்து அகல ரயில் பாதையாக மாற்றம் செய்வதற்காக 2010ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

மதுரை - போடி இடையே 98 கி.மீ. தூரத்திற்கு அகல பாதையாக மாற்றம் செய்யும் பணிகள் போதிய நிதி ஒதுக்காத காரணத்தால் சுணக்கம் ஏற்பட்டது. மக்களின் தொடர் கோரிக்கைகள் காரணமாக ரூ.506 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் விரைவுபடுத்தப்பட்டன. அதன் மூலம், முதற்கட்டமாக மதுரை - தேனி இடையே 75 கிமீ தூரத்திற்கு அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு உள்ளது. தேனி - போடி இடையேயான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதையும் படிங்க: இன்று 10 இடங்களில் சதம் அடித்த வெயில்... நாளையோடு அக்னி நட்சத்திரம் முடிகிறது

11 ஆண்டுகள் நடைபெற்ற பணிகள் நிறைவுற்று 2022 மே 26ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் ரயில் போக்குவரத்தை துவக்கி வைத்தார். அதன்படி, மதுரை - தேனி முன்பதிவில்லாத விரைவு சிறப்பு ரயில் மதுரையில் இருந்து காலை 8.30 மணிக்கும், தேனியில் இருந்து மாலை 6.15 மணிக்கும் என தினமும் இரு வேளை இயக்கப்படவுள்ளது.

வடபழஞ்சி, உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி ஆகிய நிலையங்களில் ரயில் நின்று செல்லும். மதுரையில் இருந்து தேனிக்கு 45 ரூபாயும், ஆண்டிப்பட்டிக்கு 35 ரூபாயும், பிற நிலையங்களுக்கு 30 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த ரயிலில் 10 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகளும், இரண்டு இரண்டாம் வகுப்பு பொது மற்றும் சரக்கு பெட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளன.

மேலும் படிங்க: Cape Breeze: தூத்துக்குடி துறைமுகத்துக்கு மிகப் பெரிய கப்பல் வருகை

இந்த ரயிலின் முதல் பயணிகள் சேவை இன்று காலை 8:30 மணிக்கு மதுரை ரயில் நிலையத்தில் இருந்து கிளம்பியது. குடும்பம் குடும்பமாக ஏராளமான மக்கள் உற்சாகத்துடன் இந்த பயணத்தில் இணைந்தனர். ரயில் கிளம்பும் முன்னரே குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் செல்ஃபி உள்ளிட்ட புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர்.

இந்த பயணத்தில் சொந்த ஊருக்கு செல்வோர், வேலைக்கு செல்வோர், வியாபாரத்திற்கு செல்வோர், கோவிலுக்கு செல்வோர் என ஒரு புறம் இருக்க, முதல் ரயில் சேவையை அனுபவிப்பதற்கும், ரயிலில் இருந்து ஊர்களை பார்த்து ரசிப்பதற்கும் வந்தவர்களே ஏராளம்.

இதை படிக்க: குட்கா, பான் மசாலா போன்ற போதைப்பொருட்களுக்கான தடை மேலும் ஓர் ஆண்டு நீட்டிப்பு: தமிழக அரசு அரசாணை வெளியீடு

மதுரை - தேனிக்கு இடைப்பட்ட ஊர்களையும், சாலைகளையும், மலைகளையும், வயல்களையும், ஆறுகளையும் சாலை மார்க்க பயணத்தில் மட்டுமே அனுபவித்திருந்த இந்த தலைமுறை மாணவர்கள், குழந்தைகள் கண்கள் விரிய ஆச்சர்யமும், குதூகலமும் பொங்க பார்த்து ரசித்து மகிழ்ந்தனர்.

பெரியோர்கள் பலர் தங்களின் மலரும் நினைவுகளை அவர்களின் குழந்தைகள், மனைவிகள், நண்பர்களிடம் பகிர்ந்து சிலாகித்தபடியே பயணித்தனர்.

ரயிலுக்குள் பயணித்த மக்களின் கொண்டாட்டம் ஒருபுறம் இருக்க, நெடுங்காலத்திற்கு பின்னர் தங்கள் ஊர்களை கடந்து செல்லும் ரயிலையும், அதில் சென்ற பயணிகளையும் பார்த்து வழிநெடுகிலும் ரயில்வே கிராசிங் பகுதிகளிலும், வீடுகளில் இருந்து வெளியே வந்தும், ரயில் நிலையங்களில் குவிந்தும் கையசைத்து ஆர்ப்பரித்து மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

மதுரை ரயில் நிலையத்தில் 153 நபரும், வடபழஞ்சியில் 34 நபரும், உசிலம்பட்டியில் 109 நபரும், ஆண்டிப்பட்டியில் 65 நபரும் என மொத்தம் 391 நபர் பயணித்ததின் மூலம் 21 ஆயிரத்து 750 ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

டிக்கெட் வாங்கியோர் எண்ணிக்கை 391 ஆக இருக்க, ரயிலில் இருந்து இறங்கிய மக்கள் கூட்டத்தை பார்க்கும் போது இலவச சேவையோ என நினைத்து டிக்கெட் எடுக்காமல் வந்த கூட்டமே அதிகம் என் தோன்றியது.முதல் நாள் சேவை என்பதால் ரயில்வே அதிகாரிகளும் பெரிதாக கண்டுகொள்ளாமல் மக்களை அவர்கள் போக்கில் அனுமதித்தனர்.

மதுரையில் இருந்து 8:30 மணிக்கு கிளம்பிய ரயில் தேனிக்கு சென்றடையும் நேரம் 9:35 மணி என நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் மக்களின் ஆர்வத்தை மதித்த ரயில் ஓட்டுனரும், ரயிலை மெதுவாக இயக்கியதால், அரை மணி நேரம் தாமதமாக 10 மணி அளவில் தேனி ரயில் நிலையத்தை வந்தடைந்தது.

11 ஆண்டுகளுக்கு பின்னர் ரயில் சேவை துவக்கப்பட்டது மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும் இந்த சேவையில் சில குறைகள் இருப்பதாகவும் அதை விரைவில் நிறைவேற்றுமாறு ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை வரை இயங்கும் சேவையை சென்னை வரைக்கும் நீட்டிப்பு செய்ய வேண்டும்; தினமும் இரண்டு முறை மட்டும் இயக்கப்படும் ரயிலை 4 முறை இயக்க வேண்டும்; விரைவு ரயிலை பயணிகள் ரயிலாக மாற்றம் செய்ய வேண்டும்; மூன்று நிலையங்கள் தவிர்த்து கூடுதலாக நாகமலை புதுக்கோட்டை, செக்கானூரணி, கருமாத்தூர் நிலையங்களிலும் ரயில் நிற்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளும் எழுந்துள்ளன.

First published:

Tags: Madurai, Theni, Train