நெல்மணிகளை கதிரில் இருந்து பிரிப்பதற்கு ஒரு கல்லில் தட்டி உதிர்ப்பதை "தலையடித்தல்" எனக் கூறுவர். இப்படி செய்வதன் மூலம் உதிரும் நெல்மணிகள் விதை நெல்லாக அடுத்த போக விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும். தலையடித்தல் பணியின்போது உதிராத நெல்களை சேகரிக்க, கதிர்களை வட்டமாக பரப்பி மாடுகளை நடக்க வைப்பதை "சூடடித்தல்" என்பர். இந்த சூடடித்தல் தான் காலப்போக்கில் போரடித்தல் என மாறியுள்ளது.
"மாடு கட்டி போரடித்தால்
மாளாது செந்நெல் என்று
யானை கட்டிப் போரடித்த
அழகான தென்மதுரை"
என்ற ஒரு இலக்கிய பாடலில், மதுரையில் வேளாண்மை அதிகம் நடப்பதை குறிப்பிடும் வகையில் போரடிக்கும் பணிகளுக்கு மாடுகள் போதாது என யானை கட்டி போரடித்தனர் என அந்த இலக்கிய பாடல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலப்போக்கில் கைவிடப்பட்ட இந்த பாரம்பரிய பழக்கத்தை மீட்கும் முயற்சியாக மதுரை அழகர்கோவிலை சேர்ந்த மதன் என்பவர் யானை கட்டி போரடித்து வருகிறார்.
மதுரை அழகர்கோவில் அருகே உள்ள புலிப்பட்டி எனும் கிராமத்தில் செல்லமாக வளர்த்து வரும் சுமதி என்ற யானையை வைத்து போர் அடித்து வருகிறார் அதன் உரிமையாளர் விமலன் மற்றும் அவருடைய மகன் மதன்.
மேலும் படிக்க... உரிய ஆதாரங்கள் இல்லாததால், திருப்பத்தூரில் 22 கோடி மதிப்பிலான தங்க நகைகளைப் பறிமுதல் செய்தது தேர்தல் ஆணையம்..
இது குறித்து யானையின் உரிமையாளர் மதன் கூறுகையில், "பழைய திரைப்படம் ஒன்றில் யானை கட்டி போர் அடிக்கும் காட்சியை பார்த்ததும் இதை நாமும் செய்தால் என்ன என தோன்றியது. உடனே இயந்திரங்களை ஓரம் கட்டிவிட்டு எங்களுடைய செல்ல யானை சுமதியை போரடிக்கும் பணிகளில் ஈடுபடுத்தினோம். முதலில் குறும்புத்தனம் செய்தபடி நெற்கதிர்களை சாப்பிட்டது. பிறகு, நெற்களை சுற்றி நடந்து வரவேண்டும் என சொல்லிக் கொடுத்த பின்னர் அதை பின்பற்றி செய்கிறாள் சுமதி" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "சுமதி அதனுடைய மேய்ச்சலுக்காக தனி இடமும், மூன்றரை ஏக்கரில் தீவனமும் கொடுத்து கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகிறோம். சுமதி போரடிக்கும் போது நெற்களின் மேல் சுற்றி சுற்றி நடப்பதால் அதற்கு நடைபயிற்சி போல் அது ஆகிறது. அதன் மூலம் கிடைக்கும் வைக்கோலும் சுமதிக்கு உணவாகிறது. இவை அனைத்தையும் விட மதுரையின் பாரம்பரிய பெருமை உலக அளவில் பேசப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து எங்கள் சுமதி செய்யும் சமத்தான செயலால் உலகம் மீண்டும் ஒருமுறை "மதுரை சுமதி"யை சமூக வலைதளங்கள் வாயிலாக கொண்டாடிக் கொண்டிருக்கிறது" என பெருமையுடன் கூறினார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.